▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨
பள்ளப்பட்டி ‘மணிமொழி மெளலானா’ M.J.கலீலுர் ரஹ்மான் பாகவீ (ரஹ்) அவர்கள்.
▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨▨
இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களை பட்டியல் இட வேண்டும் என்றால் ஆயுள் முழுவதும் சொல்லி கொண்டே போகலாம்.
அது முடிவில்லாத நீண்ட பட்டியல் அதில் நமதூரை சார்ந்த மணி மொழி மௌலானா அவர்கள் வரலாறும் ஒன்று எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப் பேசிமகிழும் நாம் நம் ஊர் விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும்.
அவர்கள் செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர்.
அந்த வரிசையில் பள்ளப்பட்டியை சார்ந்த மணிமொழி மௌலானா என்று அழைக்கப்பட்ட மெளலானா’ M.J.கலீலுர் ரஹ்மான் பாகவீ (ரஹ்) அவர்களும் ஒருவர்.
பள்ளப்பட்டி மஸ்ஜிதே காதரியா
(சின்னப்பள்ளி) நிறுவனர்.மௌலானா மௌலவி V.M.அப்துல் லத்தீப் ஆலீம் அவர்களின் மகள் வயிற்று பேரராகவும்.
மீ. மௌலவி ஜமால் முஹம்மது ஆலீம் மஃமூதா பீவி தம்பதியர்களுக்கு மூத்த மகனாகவும் 29 -01 -1905ல் பள்ளப்பட்டியில் பிறந்தவர்.
மணி மொழி பத்திரிக்கை ஆசிரியர்,சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்காக படிப்பை பாதியிலேயே உதறியவர்...
1941 ஆகஸ்ட் 8 முதல் 1945 ஆகஸ்ட் 15
வரை இந்தோ ௭ சீனாவிலே
இருந்து இந்திய சுதந்திரப்போரிலே பங்கேற்றவர்.
இன்றைய வியட்நாமில் அன்று சைகோன் என்று அழைக்கப்பட்ட பெருநகரில்
இருந்துகொண்டு இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர்.
உணர்ச்சிப்பிழம்பாக இவர்
எடுத்துவைத்த கருத்துக்கள் பலரை விடுதலைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்தன “இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றியது முஸ்லிம்களிடமிருந்தாகும் ஆகவே ஆங்கிலேயரிடமிருந்து இந்திய நாட்டை மீட்க முஸ்லிம்களே முன் நின்று போராட வேண்டும்”என்று முழங்கினார்.
இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்டு அதற்காகத் தீவிரப் பரப்புரை செய்தவர்களில் பள்ளபட்டி மௌலானா, மணிமொழி கலீலுர் ரஹ்மான் அவர்கள் ஓர் உதாரணம்.
பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எனும் எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்த அந்த நேரத்தில்
நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர்.
இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பில் ஜெனரலாக இருந்தவர்கள் இந்த பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜே.கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள்.
நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் இருந்து நிதி திரட்டிய, அங்கிருந்து இந்தியர்களை இணைத்து செயலாற்றிய பெருமைக்குரியவர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
தற்காலிக சுதந்திர இந்தியாவை அறிவிக்கும் முன்பே சைகோன் நகரில்
“இன்டிபென்டன்ட் லீக் “ என்ற விடுதலை இயக்கத்தைத் தொடங்கி நடத்தியவர் மணிமொழி மெளலானா
அவர்களாவார்கள்.
இந்த ஒரு அரிய பணியில் அவர்களுடன் இணைந்து நின்றவர் எஸ். ஏ. நூருத்தீன்
என்பவராவார்.
இவர்கள் இருவரும் சைகோனில் இரகசியமாக நேதாஜியை சந்தித்துப் பேசிய நிகழ்வும் நடந்தது.
அவர்கள் நேதாஜியின் மீது மிகுந்த விருப்பமும் பாசமும் கொண்டவர்கள்.
ஒரு ஜப்பானிய அதிகாரி ஒருவர்
சைகோனில் மெஜஸ்டிக் ஹோட்டலில் உள்ள ஒரு தலைவரைக் காண மெளலானாவை உள்ளே அழைத்துச் சென்றார்.
அங்கே போன போது தான்
அந்த தலைவர் நேதாஜி என்று அறிவித்தார்.
நேதாஜியை அன்று சந்தித்த
எட்டு இந்தியர்களில் மணிமொழியும் ஒருவர்.
பின்னாளில் நேதாஜி
மெளலானாவை ‘மெளலவி
சாஹிப்’ என்றே அன்புடன் அழைப்பார்.
நேதாஜி நெருங்கிய நண்பராகவும்
மொழிப் பெயர்ப்பாளராகவும்
அவர் பணியாற்றினார்.
“மெளலவி சாகிப்” என்று நேதாஜியால் பிரியமாக அழைக்கப்பட்ட மணிமொழி
மெளலானா அவர்கள்
சைகோனில் 30 நாட்கள் தங்கிய போது அனைத்து பேச்சுவார்த்தைகளிலும்
மணிமொழி மெளலானா கலந்து கொண்டர்.
நேதாஜி , இந்தியில் பேசிய வீர
உரைகளை தமிழில் மொழி
பெயர்த்து தொண்டாற்றியவர்.
தமிழிலும், உருது ௭ இந்தி மொழிகளி லும் செய்தி வாசிப்பதற்கு சுபாஷின் படை ஒரு பொருத்தமான ஆளைத் தேடியது.
விடுதலை வேட்கைகொண்டு, குறிப்பாக தமிழ்நாடு மீது ஆர்வம் கொண்டெழுந்த வாலிபச் சிங்கங்களைப் பொறுக்கியெடுத்தார் சுபாஷ் அதில் முதன்மையானவர்தான் கலீலுர் ரஹ்மான் மெளலானாவின் கம்பீரக் குரல்
சைகோன் இரங்கூன் போன்ற தலை நகரங்களிலிருந்து இந்திய மக்களுக்கு இரண்டாவது உலக மகா யுத்தம் பற்றிய செய்திகளை வாணொலியில் போர்முனையில் இருந்தவாறே வழங்கப்பட்டன.
கலீலுர் ரஹ்மானின் கம்பீரமிக்க குரல் மூலம் ஒலிபரப்பிய இச்செய்திகளை மக்கள் படபடக்க போட்டிபோட்டுக் கேட்டறிந்து கொள்வதில் பேரார்வம் காட்டினர்.
சைகோன் வானொலியிலிருந்து யுத்தச் செய்திகளை ஒலிபரப்பிய கலீலுர் ரஹ்மான் தான் ‘மணிமொழி மெளலானா’ வென பிற்காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறிந்தது.
மூன்றரை வருடங்கள் சைகோன் ரேடியோவில் விடுதலை ஆர்வத்தை தூண்டும் சொற்பொழிவுகளை செய்தார்.
இரண்டாவது உலக மகா யுத்த காலத்தின்போது இந்தக் குரல் ஆக்ரோஷ மாக ஒலித்தது.
நாம் இப்பொழுதெல்லாம் கேட்டுப் பழக்கப்பட்ட சாதாரண செய்தி வாசிப்புப் பாணியில் அது ஒலிபரப்பப் படவில்லை.
ஒரு சிங்கத்தின் கர்ஜனை போன்று அந்தச் செய்தி வாசிப்பு வான்வெளி மூலமாக தென்கிழக்கு ஆசியா பூராவும் உச்ச ஓசை எழுப்பி ஒலித்தது.
அதுவும் தமிழ் மொழியிலும் உருது மொழியிலும் இந்தச் செய்திகள் வாசிக்கப்பட்டன.
ரகசியமாக வானொலி உபகரணங்களை வைத்துக்கொண்டு தான் ஒரு கட்டடத்தினுள் அல்லது கூடாரத்தினுள் இருந்து மக்களுக்கு யுத்தச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டன.
இவரின் இஸ்லாமிய சொற்பொழிவு மிகவும் பிரபலம். பிரதி ஒவ்வொரு பெருநாளிலும் சிங்கப்பூர் வானொலி இவரின் சொற்பொழிவை ஒளிபரப்பும். ஒரு மேடை பேச்சிற்கு கட்டணமாக ரூ 100/. பெற்று அதை சுதந்திர போராட்டத்திற்கு செலவு செய்வார். அப்போது சவரன் ரூ 9/. மட்டுமே.
இந்திய தேசிய இராணுவம்
விழ்ந்ததும் மிஸ்டர் பின்னி என்ற ஆங்கிலேய இராணுவ அதிகாரியிடம் அழைத்துச்செல்லப்பட்ட மணிமொழி மெளலானாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில்
ஜப்பானுக்கு உதவிய சுதந்திர
இந்தியப் படையில் சிலருக்குத் தலைமைதாங்கினார் என்ற குற்றச்சாட்டு
மணிமொழி மெளலானா
அவர்கள் மீது ஆங்கில அரசால் சுமத்தப் பட்டு அவருக்காக ஒரு தூக்குக் கயிறு
காத்திருந்தது ஆனால் தண்டனை குறைப்பாக அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.
அஜாதி ஹிந்த் சர்க்காரில்
மந்திரியாகப் பணியாற்றிய மூ. ஹகீம் கனியுடன் மலாயா நண்பன்’ என்ற
தினசரியில் துணை ஆசிரியராகப் பணியாற்றி பல ஊர்களில்
சொற்பொழிவாற்றி 1946 டிசம்பர் 5ல் ரஜிலா என்ற கப்பலில் சென்னை வந்தார்.
தனது தாய் மீது மாறாத அன்பு
உடையவராக இருந்தார் மணிமொழி மெளலானா அவர்கள்.
நாடு கடத்தப்பட்டு 1946 ௭ ல் நாட்டுக்குத்
திரும்பிய மணிமொழி மெளலானா அவர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனது
தாயாரை சந்திக்கப்போகிறோம்
என்கிற ஆவலுடன் நாடு திரும்பினார்.
அப்போது அவரை வரவேற்க நங்காஞ்சி நதியின் மறுகரையில் இன்றைய சவுந்திராபுரம் அருகே ஊர் மக்கள் அனைவர்களும் ஒன்று கூடினர்.
[ அப்போது நமதூர் பாலம் கட்டப்படவில்லை ]
அப்போது நங்காஞ்சி நதியில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது ஆற்றை கடக்க ஒரு கட்டிலில் மௌலானா அவர்களை அமரவைத்து சில நபர்கள் ஒன்று கூடி ஆற்றை கடந்து தூக்கி வந்தனர்.
இக்கரையில் இன்றைய S.S.S.பேக்கரி எதிரே உள்ள ரோட்டில் ஊர் மக்கள் அனைவர்களும் ஒன்று கூடி மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
ஆனால் தாய் மண் ‘பள்ளபட்டி’ மிதித்தபோது, தாயார் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிய செய்தியை அப்போது அறிந்தார்கள்.
ஆனாலும் நாட்டுக்காக தான் செய்த தியாகங்களுக்காத்தான் மனம் மகிழ்வதாகவே மணிமொழி மெளலானா
அவர்கள் கூறினார்கள்.
அந்தளவு தாய் நாட்டுக்காக தன் தாயின் மரணத்தை கூட தெரியாத அளவு போராட்ட நாயகராக திகழ்ந்தவர்...
நேதாஜியின் படை வரிசையில் நாட்டு விடுதலைக்கு வீட்டையும் மறந்து தியாகம் செய்தவர்
மணிமொழி மெளலானா.மீராஜ்ஜி
M.J.கலீலுர்ரஹ்மான் பாகவீ (ரஹ்) அவர்கள்..
பள்ளப்பட்டி பேருராட்சி தலைவராக 1966 ம் ஆண்டு இவர் பதவி வகித்த போது அந்த நேரத்தில் ஒரு ஈத் பெருநாள் வந்தது
அப்போது ஈத்ஹா மைதானத்தில் தொழுகை நடைபெறுவதை அனைவர்களும் கேட்கும் வண்ணம் முதன் முதலில் மைக் செட் அமைத்தார்.
அப்போது ஒரு உலமாவிற்கும் இவருக்கும் ஒரு வாக்குவாதம் நடைபெற்றது.
ரசூலுல்லாஹ் காலத்தில் மைக் இல்லாமல் தான் தொழுகை நடத்தினார் அதனால் மைக் மூலமாக தொழுகை நடத்தக்கூடாது என்று தடை ஏற்படுத்தினார்.
அப்போது மௌலானா அவர்கள் அந்த உலமா இடம் நீங்கள் ஏன் மூக்கு கண்ணாடி அணிந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது என் பார்வை சற்று மங்களாக இருக்கிறது அதனால் கண்ணாடி அணிந்திருக்கிறேன் என்று சொல்ல
ரசூலுல்லாஹ் காலத்தில் மூக்கு கண்ணாடி கிடையாது ரசூலுல்லாஹ் அவர்களும் மூக்கு கண்ணாடி அணியவில்லை அதனால் நீங்கள் அணிவதும் கூடாது என்று சொன்னவுடம் தன் தவறை உணர்ந்து அமைதியானார்.
மணிமொழி மெளலானா அவர்கள் பயன்டுத்திய எழுதிய பல அறிய நூல்கள்
சென்னை பூந்தமல்லியில் உள்ள ‘காஷிஃபுல் ஹுதா’மதரஸா நூலகத்திலும்
குர்ஆனின் விளக்க உறைகளும் ஹதீஸ் விளக்கங்களும் அவர்கையால் எழுதிய மிகப்பெரிய புத்தகம் இரண்டு பள்ளப்பட்டியிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
12:6:1969 வியாழக்கிழமை அன்று பள்ளபட்டியில் மறைந்த இவர்கள் பெரிய மதரஸாவின் கிழக்கு பகுதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு மீஜான் கல் பொருத்தப்பட்ட நிலையில் இன்றும் காணலாம்.
பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் இவர்களின் நினைவு தூண் நிறுவப்பட்டுள்ளது..
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱