✦✧✧✧✧✦✦✧✧✧✧✦✦✧✧✧✦

             சல்லல்லாஹ் பாய் 

✦✧✧✧✧✦✦✧✧✧✧✦✦✧✧✧✦


பாரம்பரிய மிக்க பள்ளப்பட்டியில்  வலிமார்கள் நல்லோர்கள் பெரியோர்கள் வாழ்ந்து மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணியமிகுந்த இவ்வூரில் கடந்த சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பல பெரியோர்கள் மத்தியில் சல்லல்லாஹ் பாய் [பாவா] என்ற பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.


இறைபக்தி மிகுந்தவரான இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தோற்றத்தில் ஊரின் அனைத்து பகுதிகளிலும் வலம் வருவார்.


இப்படி வாழ்ந்த இவருக்கு அல்லாஹ் பாம்பு தேள் நட்டுவாக்காலி போன்ற கொடிய விஷ ஜந்துக்களை வசியபடுத்தும் தன்மையை வழங்கி இருந்தான்..


இதன் காரணமாக இவர் காடுகளில் சுற்றி திரிந்து விஷ ஜந்துக்களை உயிருடன் பிடித்து தன் உடல் முழுவது பரவ விட்டு ஊரில் நடமாடுவார்.


இவரிடம் கட்டு விரியன் நாக பாம்பு நட்டுவாக்காலி போன்ற மிக கொடூரமான விஷ ஜந்துக்களும் இருக்கும்.


இவர் ரோட்டில் நடந்து வந்தால் எதிரே வரும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவர்களையும் அழைத்து தன் உடல் முழுவதும் உள்ள விஷ ஜந்துக்களை காட்டியும் தன் பாக்கெட்டில் கை நுழைத்து மிட்டாய்களை எடுப்பது போல் விஷ ஜந்துக்களை கையில் எடுத்து தவழ விட்டு காட்டுவார்.


அந்த விஷ ஜந்துக்கள் அவரை தீண்டாமல் இவருக்கு கட்டுப்பட்டு அவர் மீது தவழும்

மிக கொடிய விஷம் உள்ள நாக பாம்பு கட்டுவிரியன் பாம்பு நட்டுவாக்காலி தேள் போன்றவைகள் இவருக்கு எந்த தீங்கும் செய்யாமல் பல நாட்கள் பழகிய நண்பன் போல் கட்டுப்பட்டு நடக்கும்.


நட்டுவாக்காலி தேள் போன்ற ஜந்துகள் மிக பெரியதாக பார்க்கவே பயமுறுத்தும் தோற்றத்துடன் இருக்கும்.


ஒரு சில நேரங்களில் ஒரு அடி அளவு உள்ள பெரிய நட்டுவாக்காலியை பிடித்து வருவார் இதன் காரணமாக இவர் அருகில் யாரும் நெருங்க மாட்டார்கள் பயத்துடன் இருபது அடி தள்ளியே நிற்பார்கள்.


பாம்பு போன்றவைகளை கயிறுகளை சுருட்டி வைப்பது போல் சுருட்டி தன் பாக்கெட்டில் வைத்திருப்பார்.


இந்த உயிரினங்களை ரோட்டில் விடாமல் தன் உடல் முழுவது தவழ விடுவார்.


சில தினங்கள் தன் வசம் வைத்து விட்டு எங்கு பிடித்தாரோ அங்கேயே உயிருடன் விட்டு விட்டு வேறு புதிய ஜந்துக்களை பிடித்துவருவார்.


இவரின் தன்மையை அறிந்த அப்போது வாழ்ந்த மூத்த உலமாக்கள் இவரை அழைத்து ஆன்மீக ரகசியங்களை பேசுவார்கள்.


இவர் ரோட்டில் வருகிறார்  என்றால் சிறுவர்கள் பயந்து அடுத்த தெருவில் நுழைந்து ஓடி விடுவார்கள்.


தைரியமான சில சிறுவர்கள் இவர் அருகே வந்து சல்லல்லாஹ் பாய்  எனக்கு நட்டுவாக்காலி யை காட்டுங்கள் என்றால் தன் பாக்கெட்டில் கை விட்டு விளையாட்டுப்பொருளை எடுப்பது போல் எடுத்து நட்டுவாக்காலி யை எடுத்து காட்டுவார்.


இவர் விஷ ஜந்துகளை பிடிக்க  குப்பைகாட்டுக்கு பின் புறம் உள்ள இன்றைய ரசூல் நகர் பகுதிகளுக்கு செல்வார்.


அப்போது அந்த பகுதி முள் செடிகளும் மரங்களும் நிறைந்த காட்டுப்பகுதியாக இருக்கும்.


அங்கு குப்பை காட்டில் பேரூராட்சி பணியாளர்களை கடப்பாரை மண் வெட்டிகளை எடுத்து கொண்டு வரச்சொல்வார்.  


அப்படியே இவர் பல இடங்களை பார்த்துகொண்டே செல்வார் இவர் பின்னாடியே அவர்களும் செல்வார்கள்


திடீர் என்று மணல் புற்றுகள் பாறைகள் நிறைந்த ஏதாவது ஒரு இடத்தை காட்டி பாறைகளை கடப்பாரையால் விளக்கி மணலை லேசாக தோண்டச்சொல்வார் 


தோண்ட ஆரம்பித்த உடனே  தேள்களும் நட்டுவாக்காலிகளும் பாம்புகளும் கூட்டமாக வெளிப்படும் அதை தன் கையில் பிடித்து ஒவ்வொன்றாக தன் பாக்கெட்டில் போட்டுக்கொள்வார்.


ஒரு சில நேரங்களில் தேள் பிடிக்க சிறுவர்களையும் அழைத்து செல்வார் அப்போது அந்த சிறுவர்களுக்கு இரண்டு பைசா அல்லது மிட்டாய் களை கொடுப்பார்.


பிடித்த ஜந்துகளை தெற்கு பள்ளியின் பின் பக்க வழி அருகே ஒரு இடத்தில் அமர்ந்து தான் பிடித்து வந்த ஜந்துகளை தனக்கு நேரே கீழே வைத்து விடுவார்.


அந்த ஜந்துக்கள் இங்கும் அங்கும் அலையாமல் ஓடாமலும்  கொடுக்கை நீட்டிக்கொண்டு அந்த இடத்திலேயே நிற்கும்.


அப்போது சில சூராக்களை மனதிற்குள் ஓதி அதன் மீது ஊதி விட்டு மரி மரி என்று சொல்லியவாறு தன் பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்று விடுவார்.


தன் பாக்கெட்டில் இருந்து அந்த ஜந்துக்களை வெளியில் எடுக்கும் போதும் மரி மரி என்று சொல்லிக்கொண்டே எடுப்பார்.


இதை தவிர ஊரில் உள்ள குழந்தைகளுக்கு ஓதிப்பார்ப்பார் கயிறு மந்திரித்து கொடுப்பார்


அவருக்கு நிலையான இருப்பிடம் இல்லை எங்கு தங்குகிறார் எங்கு சாப்பிடுகிறார் என்று யாருக்கும் தெரியாது


உறவினர்களும் யாரும் இல்லை


இப்படியே சில காலம் வாழ்ந்தார்.

தன் மனம் போன போக்கில் வாழ்ந்த இவர்.


வழக்கம் போல் ஒரு நாள்..


கொடிய விஷம் உள்ள ஒரு பாம்பை பிடித்து தன் வசம் வைத்து இருந்தார்.


இறைவன் அந்த பாம்பு மூலமாக இவருக்கு மரணத்தை நாடி இருந்தான் அதன் அடிப்படையில் இறைவன் கட்டளைபடி அந்த பாம்பு இவரை தீண்டி உடல் முழுவதும் இவருக்கு விஷம் பரவியது.


விஷ முறிவு சிகிச்சைகள் பல செய்தும் பலன் இல்லாமல் இறைவன் நாட்டப்படி காலமானார்(இன்னாலில்லாஹி...)


இவரது ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மேற்கு பொது கபரஸ்தானில் அடக்கப்பட்டது.


சில நாட்கள் சென்று அவர் கபரில் ஏதோ சில கராமத்துக்கள் நடந்ததாக சொல்கிறார்கள்.


அது என்ன கராமத் என்ற விபரம் தெரியவில்லை அந்த கராமத்துக்கு பிறகு அவர் கபர் அருகே இருந்த மரத்தின் உச்சியில் பச்சைகொடி பறக்கவிடப்பட்டது

சில காலங்கள் வரை பறந்த அந்த கொடி காலச்சுழச்சியின் காரணமாக மறைந்தது...

அன்னார் அவர்களின் நினைவையும் மக்கள் மறந்தா ர்கள்..

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱