▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

பள்ளப்பட்டி மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள்.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱


உலகம் வியந்துரைக்கும் வரலாற்று நாயகராம் திரு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்  நேரடி வம்ச வழியில் ஸையிதுஸ் ஷுஹதா ஹுஸைன்(ரலி) அவர்கள் வழிமுறையில் உதித்தவர்கள் பள்ளபட்டி மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள்.


இந்த மஹான்கள்  ஷரீஅத் அடிப்படையில் வாழ்ந்து அதனை  மக்களுக்கு எடுத்துரைத்து அதன் படியே வாழச்செய்து தாமும் அவ்வாறே வாழ்ந்து காட்டி  வசனித்த உத்தமர்கள்,


ஆரம்ப காலத்தில் பாண்டிய மன்னர்களாலும்  பிறகு சேர மன்னர்களாலும், இறுதியாக நாயக்கர் மன்னர்களாலும் ஆண்ட பகுதி, கலை இலக்கியங்களில். சிறப்புகள் விளங்கிய கரூர் மாவட்டத்தில்  கரூருக்கு தெற்கே 20 "கல்" தொலைவில் அமைந்துள்ளது


இஸ்லாமிய திருநகரில் , பள்ளப்பட்டியில் ஞானப்பள்ளி கொண்டுள்ள குத்துபுஸ்ஸமான் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ்(ரஹ்) அவர்கள்.


அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் பாரம்பரியத்தில் 32 ம் தலைமுறையில் உதித்தவர்கள் என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின்  மூதாதையருள் ஒருவரான -"இப்ராஹி உல் பக்தாதி(ரஹ்)" என்ற பெரியவர்களின் இரண்டு புதல்வர்கள்

பக்தாதிலிருந்து இஸ்லாத்தை பரப்ப  இந்தியா வந்தார்கள்.


முகம்மது நபியின் வம்சாவழியைச் சார்ந்தவர்களான  சுல்தான் கமாலுதீன் | சுல்தான் ஜமாலுத்தீன் இவர்களின் தலைமையில் ஒரு குழுவினர் இஸ்லாத்தை பரப்ப கடல் வழியே பாரத திருநாட்டின்., தென் கிழக்கு எல்லையில் உள்ள சேர நாட்டின் துறைமுகமாக முற்காலத்தில் பிரசித்தி பெற்ற கேரளக்கரையில் உள்ள கோழிக்கோடு வந்தார்கள்,


இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிகாலமான கி.பி.1276 ல்  - மிகப்பெரிய துறைமுகமான "காயலில்" வந்து குடியேறினார்கள்,


இவர்கள் அங்கு இருந்த ஜும்ஆ பெரிய பள்ளியை ( 1284 to 1320 )பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினார்கள்.,


சுல்தான் ஜமாலுத்தீன் பரம்பரையினரை "பிரபுக்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்.


இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களோடு நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என்பதாக 13 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சரித்திர ஆசிரியர்களான (அமித் குஸ்ரு , அப்துல்லா வாசஃப் , ஷியாஉதீன் பர்னி போன்றோர்களால் எழுதப்பட்டுள்ளது.

இவர்களால் தான் வரலாற்றை நாம் வாசிக்கமுடிகிறது.)


மன்னர் அரபி முஸ்லிம்கள் பால் மிகவும் அன்புடையவராக இருந்துள்ளதால். வியாபாரத்தில் பல சௌகரியங்கள் செய்து கொடுத்ததுடன் நாட்டின் நிர்வாகத்திலும் பங்களித்துள்ளார்.


சுல்தான் சைய்யிது ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது.


சைய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் "தகியுத்தீன்" பாண்டிய மன்னரின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல்பட்டிணம், பிடான், மாலி என்ற கடலோர நகரங்கள் மானியமாக அளிக்கப்பட்டதாக. - சரித்திர ஆசிரியர் அப்துல்லா வாசஃப்  குறிப்பிட்டுள்ளார்.


மன்னன் சுந்தர பாண்டியன் கி.பி. 1293  ல் காலமானதற்க்கு பின் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் சைய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார்.


கி.பி. 1293 - முதல் -1320 வரை சுல்தான் செய்யது ஜமாலுத்தீன் அவர்கள் இறுதிகாலம் வரை தொடர்ந்து இவர்களின் ஆட்சி நடைபெற்றது இச்சமயத்தில் காயல்பட்டினம் அதன் தலைநகரமாக விளங்கியது.


தமிழகத்தில் முதல் இஸ்லாமிய ஆட்சி மதுரையை தலைநகராக கொண்டு ஏர்வாடி சையத் சுல்தான் இப்ராஹீம் பாதுஷா அவர்களின் 12 ஆண்டுகால ஆட்சியாகும்.

( 1195 - 1207 ) பாதுஷா ஆட்சிக்கு பிறகு , -

சுல்தான் சைய்யது ஜமாலுதீன் அவர்கள் ஆட்சியே ஆகும்,


இவர்களின் வழி வந்தவர்களே பள்ளப்பட்டி மஹான் ஷைய்கு அப்துல்காதிர் வலியுல்லாஹ் அவர்கள்


( கோழிக்கோடு தர்ஹாவில் கூட இவர்களின் வழி வந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. )


மூத்தவர் -  சுல்தான் கமாலுதீன் அவர்கள், அருப்புக்கோட்டையை அடுத்த சுண்ணாம்பு நாங்கூர் என்ற பகுதியில் அடங்கியுள்ளார்கள் என குறிப்புக்களில் பார்க்க முடிகிறது.


இளையவர் சுல்தான் ஷைய்கு முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் கி.பி.1320 ( ஹிஜ்ரி 719 ) ல் காலமானார் மதுரை அருகே உள்ள வஹ்தத் நகர் என்ற வைரவ நாகூரில் அடக்கம் செய்யப்பட்டனர்.


( இதற்க்கான எழுத்தாலான ஆதாரங்களில் கணிக்கமுடிகிறது ) என்பதாக குறிப்புகளில் பார்க்கமுடிகிறது..


ஷைய்கு முஹம்மது ஜமாலுதீன் (வலியுல்லாஹ்) அவர்கள் முத்தகீயாகவும் தீன் நெறி பரப்பும் செம்மலாகவும் சிறந்து வாழ்ந்தவர்கள்.


( இவர்களில் வழி வந்தவர்களில் சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள தர்ஹாவில் அடங்கியுள்ள மூஷா ஷா காதிரி வலியுல்லாஹ் அவர்களும் மும்பை மாஹிம்மில் அடங்கி இருக்கும்.

ஷேக் ஹுஸைன் மக்தூம் அZஜ்ஹாரி அவர்களும் இவர்களின் வழிவந்தவர்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)


மறு பிரிவினர் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து. பள்ளப்பட்டி அருகே உள்ள ஜமீன் ஆத்தூரில் குடியேறி வாழ்ந்து வந்தார்கள்.


ஷைகு முஹம்மது ஜமாலுதீன் வலியுல்லாஹ் அவர்கள் வழியில் வந்தவர்களில் முஹம்மது மீரான் ஷா காதிரி சாஹிப் அவர்கள் பிறந்திருந்தார்கள் இவர்களுடைய குடும்பம் ஆத்தூரிலே இருந்தது.


மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் மாமனார் அப்துல் ஹாதி சாஹிப் அவர்களும்,

ஆத்தூரிலேயே வாழ்ந்து மறைந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.


அப்துல் ஹாதி ஷாஹ் காதிரி அவர்களின் மகனார் ஷைகு ஜமால் முஹம்மது  ஷாஹ் காதிரி  அவர்கள் பள்ளபட்டி பெரிய பள்ளிவாசலின் ஒரு மிஹராப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.


( அன்றைய நாட்களில் பெரிய பள்ளி வாசல் கட்டப்படவில்லை )


முஹம்மது மீரான் ஷா காதிரி சாஹிப் அவர்கள் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற அறிஞராகவும் அதே சமயம் வணிகராகவும் திகழ்ந்தார்கள்.


இவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூர் வரை  தங்களுடைய சீடர்களுடன் வணிகத்துக்கு புறப்படுவார்கள்.


இடையிடையே ஒவ்வொரு ஊரிலும் தங்கி அங்குள்ள சந்தைகளில் இவர்களும் இவர்களுடைய சீடர்களும் பொருள்களை விற்பனை செய்து அந்த அந்த ஊர்களில் புதிய கொள்முதல்கள் செய்து கேரளா வழியாக பள்ளபட்டி அருகில் உள்ள ஜமீன் ஆத்தூர் வர 6 மாதங்களாகும் பகல் பொழுதில் வணிகம் செய்து கொண்டும். இரவு காலங்களில் சன் மார்க்க ஞானங்களை போதித்து கொண்டும் இருப்பார்கள்..


அன்றைய நாட்களில் ஆத்தூரில் பாக்கு வியாபாரமும், பள்ளபட்டியில் வேளாண்  உற்பத்தியும் ஜவுளி வியாபாரமும்

பிரசித்தி பெற்றதாகும்.


( அப்போதைய நாயக்கர்களின் ஆட்சியில் பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான 'பள்ளர்களே'


​பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன.


பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் ‘கொத்தடிமைகளாக’ வும் குறிக்கப்பட்டுள்ளனர் .


விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை.


இவர்களுக்கு கிடைத்த பங்கு குடி சுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.


ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும் இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.


இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.)


அப்போது பள்ளபட்டி வரும் இஸ்லாமிய வணிகத்தினரின் செழிப்பு, வியாபார கொடுக்கல் வாங்கலில் பள்ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


அப்போது அரபு வணிகர்களின் வியாபார தொடர்புகளை உள் வாங்கிய பள்ளப்பட்டி மக்கள் அவர்கள் வழியை பின்பற்றி

தாவளத்தொழிலில் ஈடுபட்டனர்.


தாவளம் என்பது பெருவழிகளில் இருந்த வணிகச் சந்தை நகரங்களைக் குறிக்கும் சொல்லாகும்"


விதைப்புக் காலத்தில் மல்லு, காடா. போன்ற துணிவகைகளை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர் ஊராய் விநியோகிப்பார்கள்.


அறுவடைக் காலத்தில் சென்று, கொடுத்த துணிகளுக்கு பணம் வசூலித்துக் கொண்டு வருவார்கள்.


இது தாவளம்.


இரவு நேரங்களில் சத்திரங்களில் தங்கி பகல் நேரங்களில் நடந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் ஒரு ஊரை தேர்வு செய்வார்கள்.


(உதாரணமாக பள்ளப்பட்டியில் இருந்து ராமநாதபுரம் திருநெல்வேலி என்று சென்று அருகில் உள்ள கிராமங்களை தேர்வு செய்வார்கள்)


இப்படி ஊரைவிட்டு புறப்பட்டு வியாபாரம்-வசூல் பண்ணி மறுபடியும் ஊர் திரும்ப சரியாக ஆறுமாதம் ஆகிவிடும்


மீரான் ஷா காதிரி அவர்கள் பகலில் வியாபாரம் செய்து கொண்டும் இரவில் தாஃவா பணி செய்து கொண்டும் இருந்தனர்


அவர்களின் போதனைகளின் பயனாக பலர் இஸ்லாத்தில் இனைந்தனர்.


ஷைய்கு முஹம்மது ஜமாலுதீன் இவர்களுடைய - மகனார் ஷைகு முஹம்மது மீரான் ஷாஹ் காதிரி (ரஹ்) அவர்கள்.


நாற்பது பொதிமாடுகள் வரை வைத்து வியாபாரம் செய்துகொண்டும்.


மார்க்க கல்வி பயிலும் மாணவர்களுக்கு தாமே உணவளித்து மர்க்க கல்வியும் போதித்து வந்தார்கள்.


இவர்கள் ஓரிடத்திலேயே நிலையாக இல்லாமல். மலபாரிலும், கர்நாடகாவிலும், மங்களுரை அடுத்த பட்கலிலும் மற்றும்

மதுரை, முகவை, நெல்லை,  தஞ்சை, வடஆற்காடு மாவட்டங்களிலும் ஆந்திராவில் குண்டக்கல் வரையிலும் சென்று. ஜவுளி வணிகம் செய்ததுடன் அங்கு தன்னை நாடி வரும் மக்களுக்கு. மார்க்க கல்வியை புகட்டியும் ஆன்மீகத்துறையில் மெஞ்ஞானப்பாதையை காட்டியும் சிறந்து விளங்கினார்.


ஜமீன் ஆத்தூரில் மணமுடித்துக்கொண்ட இவர்கள் பாலக்காட்டில் காலமானார்கள்.


இவர்கள் அடக்கஸ்தளம் பாலக்காட்டில் மஞ்ச கொல்லை அவுலியா என்ற பெயரில் தர்ஹாவாக கட்டப்பட்டு இன்றும் மக்கள் ஜியாரத் செய்து வருகிறார்கள்.


மீரான் ஷாஹ் காதிரி அவர்களுக்கு மூன்று ஆண்கள். மூத்தவர் சையது அஹமது அவர்கள் ஜமீன் ஆத்தூரில் மணமுடித்துக்கொண்ட இவர்கள் பள்ளபட்டி உருஸ் மைதானத்தின் ஓரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்


( எடுத்து கட்டாமல் அப்படியே விடுபட்ட செங்கலுடன் கூடிய அடக்கஸ்தலம் )  "ஓட்டை தர்ஹா" என்று சொல்லப்படும்.


( இவர்களின் தொடர்வாரிசுகள் சென்னையில் வியாபாரிகளாக இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். )


இரண்டாவது புதல்வர் குத்புஸ்ஸமான் அஸ்ஸய்யித் வஸ்ஸாதாத் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் (ரஹ்)

இவர்கள்.


( இவர்களே பள்ளபட்டி மஹான் ஷைய்கு அப்துல்காதிர் வலியுல்லாஹ் அவர்கள் )


ஹிஜ்ரி 952 ம் வருடம் (20:10:1545 ம் ஆண்டு  ) ஷஃபான் பிறை 13 ல் பள்ளபட்டியை அடுத்த ஜமீன் ஆத்தூரில் பிறந்தார்கள்.


இவர்களுக்கு அடுத்த இளவல் குலாம் முஹம்மது மக்கா ( ஐனஅத்துல் முஅல்லா) வில் அடங்கியுள்ளார்கள்.


சிறப்பு மிக்க வணக்கசாலியாக திகழ்ந்த.

ஷைய்கு அப்துல் காதிர் ( ரஹ்) அவர்கள் தம் தந்தையரிடமே மார்க்க கல்வி பெற்றார்கள்.


இவர்கள் மிகுந்த கராமத் உடையவர்களாக இருந்துள்ளார்கள் அன்றைய நாட்களில் இவ்வுலகில் வாழ்ந்து வந்த இறைநேசச் செல்வர்கள் அனைவரிலும் மேலான அந்தஸ்த்தை பெற்ற"குத்புஸ் ஸமான்" ஆக விளங்கினார்கள்.


இவ்வளவு மேலான சிறப்பு பெற்ற மஹான் அவர்கள் ஜமீன் ஆத்தூரில் வாழ்ந்து வரும் நாட்களில் அடிக்கடி ரங்கமலையில் தனித்திருந்து பல நாட்கள் தவம் (சில்லா) இருக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.


மஹானின் ஆன்மீக சொற்பொழிவும், பிரபுக்களின் குடும்பங்களுக்கு மருத்துவ உதவியும், கராமத்தையும் செய்துள்ளார்கள்.


இதன் பின் மஹான் அவர்களின் மகத்துவம் நகரெங்கும் நாடெங்கும் பிரசித்தி பெற்றன மக்கள் அவர்களை மொய்க்கத்துவங்கினார்கள்


பல ஆயிரம் பேர்கள் அவர்களின் அருட்கரம் பற்றி புனித இஸ்லாத்தை தழுவினார்கள்.


பின்னர் ஏகனின் பேரொளியை ஏகத்துவத்தின் ஞான வழியை பிரகாசிக்க செய்வதற்க்காக தமிழகமெங்கும் பரப்பும் அறப்பணியில் தங்களை அர்பணிக்கும் வகையில் அவர்கள் ஞானப்பயணம் மேற்கொண்டார்கள்.


( அன்றைய ஆட்சியாளர்களில் ஒருவர் இவர்களின் அற்புதத்தைக் கண்டு பெரிதும் வியப்புற்று அரங்கமலை அடிவாரத்திலிருந்து பள்ளபட்டி வரை உள்ள ஒன்பது கல் தொலைப் பிரதேசத்தை அவர்களுக்கு காணிக்கையாக தர முன் வர இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்  என்றும் இது பற்றிய பதிவுகள் - ஹாஜி M.R.M. அப்துல் ரஹீம் அவர்களின் இஸ்லாமிய கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது )


குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டங்களிருந்து அதிகாமானோர் அவர்கள் கரம் பற்றி  தீட்சை பெற்றனர்.


பின்னர் இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகில் உள்ள குதிரைக் குளிப்பட்டி என்ற இடத்தில் சிலகாலம் தவம் இருந்து வந்தார்கள்.


அங்கு அவர் தவமிருந்து அப்பகுதி நல்லாம் பிள்ளை, சித்தரேவு, சித்தையன் கோட்டை , கம்பம் , உத்தம பாளையம், கூடலூர். போன்ற ஊர்களில் உள்ள பெரும் பாலான ஊர்வாசிகளுக்கு இவர்கள் ஞான போதனை செய்தார்கள்.


இவர்களின் அறபோதனையின் பயனாக அப்பகுதியில் உள்ள அதிகமானோர் ஆலீம்களாக இன்றும் திகழ்கிறார்கள்.


இவ்வாறு தனித்தவம் பூண்ட வலியுல்லாஹ் அவர்கள். தன் ஆன்மீக ஆசான் கௌதுல் அஃலம் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜைலானி (ரலி) அவர்களுடைய கட்டளை படி பள்ளப்பட்டியிலேயே தங்கி மக்களுக்கு தீன் நெறிஊட்டியும், மெஞ்ஞான வழியை காட்டியும் வந்தார்கள்.


இவர்கள் தங்கள் இறுதி காலத்தில்  பள்ளபட்டியில் வாழ்ந்து வரும் சமயம். இவர்களை நாடி இவர்களின் ஞான உபதேசத்தை பெறுவதற்கு வேண்டியே பல ஊர்களில் இருந்து இவர்களின் சீடர்கள் பள்ளபட்டி நகரில் குடியேறினார்கள்.


அப்போது மன்னர்களின் ஆட்சிகாலம் அனைத்து இடங்களும் புறம்போக்கு இடங்களாக இருந்தது அதில் கிடைக்கும் இடத்தில் குடிசைபோட்டு வாழத் துவங்கினர்.


அப்போது வாகன வசதியோ மக்கள் நெருக்கமோ இல்லாத காலமாக இருந்ததால் முறையான சாலை வசதிகள் இல்லாமல் வளைந்தும் நெளிந்தும்  ஒரு வரைமுறையில்லாமல் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் நடக்கும் அளவே வழிவிட்டு குடிசைகளை அமைத்தார்கள். 


அப்போது தெருப்பெயர்களே இல்லாமல் அந்த பகுதியில் பிரபலமானவர்கள் பெயரிலும் அப்பகுதியில் பிரபலமான இடங்களின் பெயரிலும் அழைத்தார்கள்.


(இன்றைய மேற்கு தெருவில் பல தெருக்களை பார்த்தால் ஒரு வரைமுறையில்லாமல் இன்றும் காட்சியளிப்பதை பார்க்கலாம்)


மன்னர்கள் ஆட்சி அகன்று ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான் குடிசை போட்டு வாழ்ந்தவர்களுக்கு அந்த இடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி பதிவு செய்து கொடுத்தார்கள்.


அவர்கள் எந்த பெயரில் தெருக்களை அழைத்தார்களோ அதே பெயரில் அரசு ஆவணங்களில் பதிவு செய்தார்கள்.


அன்றைய பள்ளப்பட்டி 

குக்கிராமாக காட்சி அளிக்கும்.

மஹான் அவர்களின் சீடர்கள் வருகைக்குப் பிறகே பள்ளபட்டி அபார வளர்ச்சி அடைந்தது...


வந்தாரை வரவேற்று அவர்களுக்கு தீட்சை அளித்து தங்களோடு வைத்துக் கொண்டார்கள். 


அவர்களை அடையாளம் தெரிவதற்காக வேண்டி  அவர்களின் ஊர் பெயர்களை வைத்து அழைத்து வந்தனர் அதுவே குடும்ப பெயராக (வகைரா) இன்றளவும் நிலைத்து நிற்கிறது.


பள்ளபட்டி அருகில் உள்ள ஜமீன் ஆத்தூரில் உள்ள பிரபல பாக்கு வியாபாரி - ஹாஜி சாஹிப் என்ற பெரிய செல்வந்தர் இவருடைய ஆன்மீக சீடராக இருந்தார்.


அவரது  மூத்த மகளை பள்ளப்பட்டியின் மணியக்காரர் ஹிதாயத்துல்லாஹ்  என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.


தனது இரண்டாவது மகள் பாத்திமா பீவியை  மஹான் அவர்கள் மணமுடித்திட வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொண்டனர்.


மஹானும் அப்பெண்மணியை நிக்காஹ்  செய்து கொண்டார்கள்.


அவ்வகையில் மணியக்காரர்களும் - சாஹிப்மார்களும் சகலை ஆகியுள்ளனர்.


மஹான் அவர்களுடைய மாமனார் ஆத்தூர் ஹாஜி சாஹிப் அவர்கள் பாக்கு வியாபாரத்திற்காக., மைசூர் சென்றிருந்த சமயம் ஆத்தூரில் கடுமையான மழை பெய்து அங்குள்ள வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கின ஆனால் ஹாஜி சாஹிப் அவர்கள்  வைத்திருந்த பணம் மட்டும் பத்திரமாக இருப்பதை கண்டு பரவசமடைந்து


அப்பணத்தை கையில் எடுத்துக்கொண்டு. தன் மருமகன் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் கையில் கொடுத்து அல்லாஹ் இந்த பணத்தை நல்வழியில் சிலவு செய்ய வேண்டும் என்று பாதுகாத்திருக்கிறான் அதனால் உங்கள் விருப்படி நல் வழியில் சிலவு செய்யுங்கள் என்று கூறிச்சென்றார்.


மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் வெகு காலத்திற்கு முன்பே 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாவா பக்ருதீன்  வலியுல்லாஹ் அவர்களின் காலகட்டம் என்று வரலாறு கூறுகிறது.


கான் ராவுத்தர் (கான்ரத்த) குடும்பம் மட்டுமே இன்றைய பெரிய பள்ளி வாசலின் அருகில் வாழ்ந்து வந்தார்கள்.


அந்த சமயம் ஆந்திர மாநிலம் பெண கொண்டா நகரில் அடங்கி இருக்கும் மஹான் அபூபக்கர் சித்தீக் அவர்களுடைய குலத் தோன்றல்.,


பாவா பக்ருதீன் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் உத்தமபாளையம் செல்லும் வழியில் பள்ளபட்டியில் சில நாட்கள் தங்கியிருந்தார்கள்..


அடிமைகளாகவும்,  உழவுதொழில்செய்தும் வறுமையுடன் பள்ளர்கள் வாழ்ந்து வந்த பள்ளபட்டி நகரில்  பாவா பக்ருதீன் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் வருகைக்கு பிறகுதான் பள்ளப்பட்டியில்   இஸ்லாம் பரவியது. 


அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரு தவச்சாலை நிறுவி.., பாவா பக்ருதீன்  வலியுல்லாஹ் தர்ஹா என்ற பெயரில் அங்கு மவ்லீது ஓதியும் தொழுதும் வந்தனர்.


அன்றைய காலத்தில் பள்ளப்பட்டியில் பள்ளி வாசல் கிடையாது.


மஹான் அவர்களின் கால கட்டத்தில்,

அந்த இடத்தில் பெரியபள்ளிவாசல் ஒன்று கட்டலாம் என்று முடிவு செய்து.தன் மாமனார் கொடுத்த பணத்தை கொண்டு பள்ளபட்டியில் இன்றுள்ள பெரிய பள்ளிவாசலை  கட்டினார்கள்.


மேற்கு பள்ளிக்கு பாவா பக்ருதீன் தர்ஹா பள்ளி என்று பெயர் உள்ளது.


மிகப்பெரிய அளவில் கட்டி முடித்திட திட்டம் போட்டு கட்டி முடிக்கும் முன்பே ஆத்தூர் ஹாஜி சாஹிப் அவர்கள் காலமாகிவிட்டார். (இன்னாலில்லாஹி...)


மீதி உள்ள கட்டிடத்தை  ஊர்மக்கள் கட்டி முடித்தார்கள் அப்போது அவர்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லாததால் நீண்ட தொலைதூரம் சென்று தண்ணீர், கல்,  மண் சுமந்து கொண்டு மிகச்சிரமத்திற்கு இடையே கட்டி முடித்தார்கள்.


இதை பார்த்த வலியுல்லாஹ் அவர்கள் அந்த மக்களுக்கும் அந்த சந்ததியினர்களுக்கும் பரக்கத்திற்காக துஆ செய்துள்ளார்கள்..


அதில் முதலாவது....


இந்த ஊர் மக்கள் எப்போதும் வறுமையை சந்திக்ககூடாது செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் அந்த துஆ வின் பொருட்டால் இன்றுவரை இவ்வூர்வாசிகள் தமிழகத்திலேயே மாபெரும் வணிக வல்லுனர்களாக திகழ்வதை காண முடிகிறது.


பள்ளப்பட்டியை பொருத்தவரை ஏழைகள் கிடையாது ஏழைகள் என்று சொல்பவர்கள் வீட்டில் கூட குறைந்தது இரண்டு பவுன் நகை இருக்கும்.


இரண்டாவது... 


இந்த ஊர் மக்கள் தன் குடும்பத்தை தனியே விட்டு விட்டு வெளியூர் சென்று பொருளீட்டும் நிலையில் இருக்கிறார்கள்.

ஆண் துனை இல்லாமல் இருக்கும் இவ்வூர் பெண்களுக்கு நீயே துணை நிற்பாயாக என்று கேட்டார்.


அதன் காரணமாகவே நமதூர் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாகவும் தைரியமாகவும் எந்த ஆபத்தும் இல்லாமலும் இருக்கிறார்கள்.


இந்த அளவு பாதுகாப்பான  நிலை பெண்களுக்கு வெளியூரில் இல்லை என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.



மூன்றாவது....


இவ்வூர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் வளர்ந்து விரைவடைந்து சென்று கொண்டே இருக்கவேண்டும்.


அதன் காரணமாகவே இவ்வூர் தொடர்ந்து.

கிழக்கும் தெற்கும் நோக்கி பல நகர்கள் பெயர் கொண்டு விரிவடைந்து கொண்டே செல்வதை காணலாம்.


இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வருடங்களில் திண்டுக்கல் கரூர் பைபாஸ் ரோடு வரை சென்று அங்கேயே புதிய பஸ் நிலையம் கூட அமைய வாய்ப்புள்ளது.


மஹான் ஷைய்கு அப்துல் காதிர்வலியுல்லாஹ். அவர்கள் நம் ஊருக்காக கேட்ட துவாக்களில் ஒன்று  இந்த ஊரில் எல்லா நாட்களிலும் தேக்ஷா வில் சமையல் செய்து விருந்து உபச்சாரம் நடக்கவேண்டும்.


அந்த துவாவின் காரணமாகவே வருடம் முழுவதும் நம் ஊரில் ஏதாவது ஒருவகையில் தேக்ஷாவில் சோறு ஆக்கி விருந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது 


உதாரணமாக திருமணம் நடை பெறாத நாட்களில் கூட ஏதாவது ஒரு விருந்து என்று ஊரில் ஏதாவது ஒரு பகுதியில் தேக்ஷாவில் தினமும் சோறு ஆக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.


ரம்ஜான் நேரத்தில் கூட முப்பது நாளும் தேக்ஷாவில் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்கள்.


நமது வரலாற்று நாயகர் வஹ்தானியத்தின் காவலர் ஷைகு அப்துல் காதிர் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள்.


பள்ளபட்டியில் வாழ்ந்து  வந்த நாட்களில் எப்பொழுதுமே அவர்களை சுற்றி மக்கள் மொய்த்துக்கொண்டிருந்த காட்சி ஒருவருக்கு  பொறாமை கொள்ள வைத்தது.,


பொறாமை மிகைத்துப் போன அவர்.. அன்றைய ஆட்சியாளர்களிடம் இங்கே ஒரு போலியானவர் (நவூதுபில்லாஹ்)

மக்களை ஏமாற்றி வருகிறார் அரசு அதை தடுத்திடவேண்டும் என்று புகார் கொடுத்தார்..


குளித்தலையில் உள்ள அன்றைய அரசு பிரதிநிதிக்கு ஆற்காடு நவாப் கட்டளையிட்டு இதை விசாரிக்க உத்திரவிட்டார்.


அதுவரை தன்னுடைய "வலி" த்தன்மையை மறைத்து வந்த நாயகர். அதை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது எனவே அந்த நவாப்புடைய அதிகாரிகள் முன்பு தனது கராமத்தை வெளிப்படுத்தினார்கள்.


மஹான் அவர்கள் தன்னுடைய சகலையும் சிஷ்யருமான மணியக்காரரிடம் தஸ்பீஹ் மாலையை கொடுத்து இப்படியே உக்கார்ந்து இதை ஓதிக்கொண்டு இருக்கவும் என்று ஒரு "இஸ்மை"  திருவசனத்தை சொல்லிக்கொடுத்தார்கள்.


பின்னர் தன்திருக்கரங்களால் அவருடைய தலையில் ஏதோ ஓதி தடவியுள்ளார்கள்.

பின்னர் நிறைய வைக்கோல்களை போட்டு மூட சொல்லி இரவு முழுவதும் நெருப்பு எரிக்கும்படி கூறினார்கள்.


நடைபெறும் இந்த அற்புதத்தை காண அருகில் உள்ள ஊரிலிருந்து கூட பலர் திரளாக வந்து கூடினர். மறுநாள் காலையில் அனைத்து வைக்கோல்களும் எரிந்து சாம்பலாக ஆன பின் அந்த மணியக்காரர் எவ்வித பதட்டமும் இன்றி சிரித்தபடி வெளியே வந்தார்.


இந்த கராமத் இன்று சொட்டல் தெரு என்று அழைக்கப்படும் மையபகுதியில் நடைபெற்றதாகவும் அந்த இடத்திற்கு சுட்டதெரு என்ற பெயர் மருவி சுட்டல் தெரு என்று அழைத்து இன்று சொட்டல் தெரு என்று அழைக்கபடுவதாக மஹானின் முன்னோர்கள் சொல்கிறார்கள்.


இச்செய்தி நவாபுக்கு தெரியப்படுத்தபட்டது. நவாப் அவர்கள் நேரில் வந்து ஹஜரத் அவர்களுக்கு நிறைய பொன் முடிப்புகளை அன்பளிப்பு தந்தார்கள்.


அதை உடனே அப்படியே வறியவர்களுக்கு வழங்கி விட்டார்கள்.


அதே சமயம் இவர்களுக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்து வரக்கூடாது என்று எண்ணிய. அவர்கள்.


உர்துவை தாய்மொழியாக கொண்ட அந்த நவாப் தன்னுடைய இராணுவ வீரர்கள் சிலரை இவர்களுக்கு காவலுக்காக அனுப்பி வைத்தார்கள்.


அவர்கள் தான் இன்று பள்ளபட்டியில் வாழும் பட்டானியர்கள்.


நதிக்கரை ஓரம் ஒரு தவச்சாலை நிறுவி அங்கே இருந்து மக்களுக்கு அறபோதம் செய்து வந்த மஹானவர்கள்..


ஹிஜிரி 1020 ம் ஆண்டு (28:12: 1611 ம்ஆண்டு ) ஷவ்வால் பிறை 22 ஞாயிற்றுக்கிழமை  தம் இல்லத்தில் காலமானார்கள்

( இன்னாலில்லாஹி....)


இச்செய்தி காட்டுத்தீ போல் தமிழகமெங்கும் இவர்களிடம் தீட்சை (முரீது) பெற்றவர்கள் மத்தியில் பரவியது.


கண்ணீருடன் அலை அலையாக பள்ளப்பட்டி நோக்கி விரைந்தனர்.


இவர்கள் முன்னிலையில் அவர்களின் தவச்சாலையிலேயே அவர்களை நல்லடக்கம் செய்யப்பட்டது பிறகு ஊர்மக்களின் உதவியுடன்

ஒரு தர்ஹா ஷரீபும் கட்டப்பட்டது.


அவர்கள் மரணமடையும் நேரத்தில் தற்போதைய புதுசாயபு தெருவில் ஒரு இல்லத்தில்  வசித்து வந்தார்கள். என்றும்

வேறு ஒரு இல்லத்தில் வசித்து வந்தார்கள் என்று இரு கருத்துக்கள் நிலவுகிறது.


ஆனாலும் புது சாயபுதெருவில் உள்ள அந்த இல்லத்தில் அவர்களின் வாரிசுகளில் சிலர் இன்றும் வசித்து வருகிறார்கள்


இன்று அந்த வீடு பல மாறுதலுக்குட்பட்டு இன்றைய நவீன கால கட்டிடமாக காட்சி தருகிறது அந்த வீட்டில் இருந்துதான் இன்றும்  உருஸ் நேரத்தில் சந்தனக்குடம் எடுத்துச்சென்று மக்பராவில் பூசுகிறார்கள்.


அவர்களது மக்பரா ஊரின் மேற்கு பகுதியில் நங்காஞ்சி நதிக்கரை ஓரம் அமைந்துள்ளது.


அதுவே இன்று அழகுடன் காட்சி தரும் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் தர்ஹா ஷரீப் ஆகும் அது இன்றுவரை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.


இவர்களின் நினைவாக வருடா வருடம் ஷவ்வால் பிறை 15 முதல் 22 வரை உருஸ் நினைவு நாள் கொண்டாடி இவர்களின் மக்பராவுக்கு சந்தனம் பூசி கூடு தூக்கப்படுகிறது.


மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களை பற்றி "பஹாவுதீன் ஆலீம்" என்பவர் அரபியில் ஒரு 'மர்ஸிய்யா' எனப்படும் இரங்கற்பா புனைந்துள்ளார்.


அது  கையெழுத்துப் பிரதியாக உள்ளது.

அந்த பாடல்களின் மூலம் பள்ளப்பட்டிக்கு முற்காலத்தில் "மங்காபுரம்" என்ற பெயர் இருந்ததாகவும் இவர் சதா திக்ரிலேயே இருந்ததால் இவருக்கு "திக்ரு சாஹிபு" என்ற பெயர் வழங்கியதாகவும் தெரியவருகிறது



மஹான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும் கூட அன்னார் அவர்கள் பல ஜின்களை வசப்படுத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிய வருகிறது


அன்னார் அவர்கள் எப்போதும் தன் கையில் ஒரு செங்கோல் வைத்து இருந்ததாகவும் தெரியவருகிறது.


இவர்கள் பச்சை தலைப்பாகை அணிந்து காணப்படுவார்கள் என்றும் எப்போதும் திக்ரிலேயே இருப்பார்கள் என்றும் நடுத்தர உயரமாக காணப்பட்டார்கள்.என்றும்

கூறப்படுகிறது.


அன்னார் அவர்கள் நமதூருக்காக கேட்ட துவாக்கள் அனைத்தும் இறைவனால் அங்கிகரிக்கப்பட்டு அதை இன்றுவரை நாம் அனுபவித்தும் வருகிறோம்.


ஆதாரம் -

தமிழகத்தில் சுல்தான்கள் - திரு.சொக்கலிங்கம் எழுதியது.


பள்ளுர் இலக்கியம்.

மக்தூ மிய்யா அரபிக்கல்லூரி மலர்.

1984 ல் திருக்குர்ஆன் மாநாட்டில் வெளியிடப்பட்ட மலர்.

மற்றும் மிக பழமையான

பல குறிப்புக்கள் மூலமாகவும்

அன்னார் அவர்களின் வயதான  வாரிசுகள் மூலமாகவும் திரட்டப்பட்ட செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டுள்ளது.


▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱