⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞
ஹாஜி ஹபீப் நினைவு ஷாதி மஹால்
⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞⊞
திருமணம் என்றால் முதலில் நம் நினைவில் வரும் ஹாஜி ஹபீப் நினைவு திருமணக்கூடம்.
பள்ளப்பட்டி மக்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்று பள்ளப்பட்டி மாநகருக்கு இன்று வரை பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் பள்ளப்பட்டி ஹாஜி ஹபீப் நினைவு திருமணக்கூடம்.
சுமார் 50 வருடங்களாக திருமணங்கள் நடைபெற்று வரும் இத்திருமண மண்டபம் அதற்கு முன்பாக என்னவாக இருந்தது என்று பல பேர்களுக்கு தெரியாது.
இந்த கட்டுரையின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
அன்றைய காலத்தில் தமிழக அரசு ஏழை குடும்பங்கள் வாழ்வாதரங்களை மேம்படுத்த நூல் நூற்கும் கை ராட்டைகளை கொடுத்து அரசு சார்ந்த அன்றைய சுயஉதவிக்குழு மூலமாக கை ராட்டையில் நூல் நெய்யும் தொழில் ஏற்படுத்தப்பட்டு. அரவக்குறிச்சியில் இருந்து வாரம் ஒருமுறை பஞ்சை கொண்டு வந்து விநியோகித்து விட்டு மறு வாரம் கொடுத்த பஞ்சில் இருந்து நெய்யப்பட்ட நூலை வாங்கிச்செல்வார்கள்.
ஒரு கார்டில் குறித்து கொடுக்கப்பட்ட பஞ்சு பெறப்பட்ட நூல்களை ஒரு "கண்டுக்கு" இவ்வளவு கூலி என்று நிர்ணயம் செய்து கூலியை வழங்குவார்கள்.
அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட கை ராட்டையில் நூல் நெய்து வாரம் ஒரு முறை கிடைக்கும் கூலியை கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவார்கள் ஏழை மக்கள்.
இந்த பஞ்சு கொடுத்து நூல் வாங்கும் பணி வாரம் ஒரு முறை ஹாஜி ஹபீப் ஷாதி மஹாலில் நடைபெறும் அப்போது நூல்களை கொடுக்கவும் பஞ்சுகளை வாங்கவும் ஏழை நடுத்தர மக்கள் வரிசையில் நின்று வாங்கிச்செல்வார்கள்.
அடுத்து...
அன்றைய கால கட்டங்களில் நமதூரில் திருமணங்கள் சின்னக்கடைவீதி மையப்பகுதியில் வீடு போல் தோற்றம் தரும் பேக்ரவுண்ட் மேடை அமைத்து நடைபெறும்.
இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது மேலும் ஒவ்வொரு திருமணத்திற்கும் மேடை அமைத்து அதை கழட்டி வைக்க ஆட்கள் கூலி மற்றும் நேரம் போதவில்லை இதை கருத்தில் கொண்டு அப்போது தெற்கு பள்ளிக்கு சொந்தமான காலியாக இருந்த ஷாதி மஹாலில் கூறை கொட்டகை அமைத்து வீடு போல் தோற்றம் தரும் அதே மேடையும் நிறந்தர மண்பமாக அமைத்து வள்ளல் ஹபீப் ராஜா நினைவாக ஹாஜி ஹபீப் நினைவு திருமணக்கூடம் என்று பெயர் சூட்டி திருமணங்கள் நடைபெற்றது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹபீப் ஷாதி மஹால் கூறை கொட்டகையில் திருமணங்கள் நடைபெற்று வந்த நிலையில்.
திடீர் என ஒரு நாள் கூறை கொட்டகை தீப்பிடித்து ஒரு பகுதி சேதாரம் ஆகிவிட்டது.
அதன் பிறகு கூறை கொட்டகை அகற்றப்பட்டு இப்போது நாம் காணும் ஹபீப் ஷாதி மஹால் புதுப்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை பல ஆயிரம் திருமணங்கள் அங்கு நடைபெற்று நமதூருக்கு பெருமை சேர்த்துகிறது.
ஒரே நேரத்தில் பல திருமணங்கள் இந்த மண்டபத்தில் நடை பெறும்
உதாரனமாக.
ஒருவருக்கு அந்த மண்டபத்தில் திருமணம் நடந்து இருக்கும் பிற்காலத்தில் அவர் மகனுக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடக்கும் அதற்கு பிறகு இவர் மகனுக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடக்கும் மூன்று தலைமுறையினர்களின் திருமணமும் ஒரே மண்டபத்தில் நடப்பது வேறு எந்த ஊரிலும் இல்லாத நடைமுறை
அதிகபட்சமாக 1995 ல் 37 மாப்பிள்ளைகளுக்கு ஓரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
ஹாஜி ஹபீப் நினைவு திருமணக்கூடத்தில்
நடைபெறும் கூட்டுத் திருமணங்கள் பிரசித்தி பெற்றது.
செல்வமிக்க மாப்பிள்ளைகளும் செல்வமில்லா மாப்பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து அவர்களுக்கு ஒரே மேடையில் ஒரே நேரத்தில் நடத்தி வைக்கும் இக்கூட்டுத் திருமணத்தில் அனாவசிய சிலவுகள் இல்லாமலும் அனாச்சாரங்கள் இல்லாமலும் சாந்தி மார்க்கத்தின் சகோதரத்துவம் நிலை நாட்டப்படுகிறது.
ஊரில் அன்று நடைபெறும் திருமண மாப்பிள்ளைகள் அனைவர்களும்.
ஒன்றாக ஒரே மேடையில் அமர்ந்து
கண்கொள்ளா காட்சியாக திருமணம் நடைபெறும்.
இந்த வைபவத்தை பற்றி அரசியல் தலைவர்கள் முதல் வெளியூர் அன்பர்கள் வரை வியந்து பாராட்டி பேசி உள்ளார்கள்..
இதனால் வெளியூர் அன்பர்களிடையே பள்ளப்பட்டியின் மீது தனி மறியாதை கிடைக்கிறது.
1995 ம் ஆண்டுக்கு முன்னால் வரை இந்த நேரக்கட்டுப்பாடு இல்லை.
அப்போது நடைபெறும் திருமணங்களில் பல மாப்பிள்ளைகளுக்கு மத்தியில் ஒரு சில மாப்பிள்ளையின் குடும்பத்தினர்களுக்கு
பிரபலங்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் ஆன்மீக தலைவர்கள் மத்தியிலும் செல்வாக்குடன் இருப்பார்கள்.
அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சியின் தலைவர்கள் முன்னிலையிலும் பிரபலங்கள் முன்னிலையிலும் ஆன்மீக தலைவர்கள் முன்னிலையிலும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்து இருப்பார்கள்.
அந்த தலைவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டும் அவர்களை எதிர்பார்த்தும் சிறப்பு சொற்பொழிவுகள் நடந்தும் நேரம் கடந்து செல்லும் இதனால் மற்ற மாப்பிள்ளைகளுக்கும் அவர் சார்ந்த குடும்பத்தார்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது..
இந்த தாமதத்தை தவிர்க்க முடியாமலும் தீர்வு கிடைக்காமலும் நிர்வாகமும் திணறியது.
அப்போது.
பள்ளப்பட்டியில் வாழ்ந்த உலமாக்களில் மக்களால் மதிக்கப்பட்டு கண்ணியத்துடன்..
வடக்கு பள்ளியில்14 ஆண்டுகளும்.
மேற்கு பள்ளியில் 38 ஆண்டுகளும் பணி புரிந்து தன் 6 மகன்களையும் ஆலீமாக்கிய மர்ஹும் சூலப்புரம் ஹமீது ஹஜரத் அவர்களின் மகன்கள் அபூத்தாஹீர் ஹஜரத் அவர்களுக்கும் வடக்குப்பள்ளியின் இமாம் யஹ்யா ஹஜரத் அவர்களுக்கும் 1995 ல் இந்த மண்டபத்தில் திருமணம் நடந்தது.
அன்றைய தினம் இவர்களுடன் இனைந்து மொத்தம் 20 மாப்பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க இருந்தது.
ஹமீது ஹஜரத் அவர்கள் உலமாக்கள் மத்தியில் பிரபலமாகவும் மதிப்புடனும் அனைவர்களிடமும் தொடர்பு கொண்டவர்.
இதன் காரணமாக...
வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத் மதரஸா உலமாக்கள் அனைவர்களும் மேலும் தமிழகத்தின் தலை சிறந்த உலமாக்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த பள்ளப்பட்டி வந்தனர்.
அன்றைய தினம் திருமண மேடையில் 20 மாப்பிள்ளைகளும் உலமாக்களும் நிறைந்து கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
வந்துள்ள அனைத்து உலமாக்களும் தலை சிறந்தவர்கள் அனைவர்களையும் மரியாதை செய்யும் விதமாக 5 நிமிடம் பேச அனுமதி அளிக்கப்பட்டு காலை 10 மணிக்கு ஆரம்பித்த நிகழ்வு மதியம் 1:30 மணிவரை தொடர்ந்தது.
லுஹர் தொழுகையும் முடிந்து
மதிய விருந்துக்கான நேரமும் வந்து திருமண நிகழ்வு தாமதமாகி
மதியம் 2 மணி அளவில் திருமணம் முடிந்தது இதனால் வெளியூரில் இருந்து வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் உள்ளூர் விருந்தினர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
இதையே காரணமாக வைத்து யார் வந்தாலும் வராவிட்டாலும். அது அரசியல் தலைவர்களாக இருந்தாலும் ஆன்மீக தலைவர்களாக இருந்தாலும் யாருக்காகவும் திருமண நிகழ்வு தாமதிக்கபடாது.
சரியாக 11:30 க்கு திருமண நிகழ்வு ஆரம்பித்து விடும் என்ற அறிவிப்பை நிர்வாகம் செய்தனர்.
இதனால் அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஆன்மீகவாதிகளாக இருந்தாலும் அனைவர்களுக்கும் ஒரே நடைமுறை தான் என்பதால் வீன் சர்ச்சைகளில் இருந்து நிர்வாகத்திற்கு நிரந்தர தீர்வு கிடைத்தது.
நேரக்கட்டுப்பாட்டின் காரணமாக ஒரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது..
கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த கால கட்டத்தில் பள்ளப்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு முன் கூட்டியே வந்து காத்திருந்து திருமணத்தை நடத்திவைத்தார்.
அரவக்குறிச்சி தொகுதி முன்னால் M.L.A ஜனாப் மர்ஹும் S.S. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இல்லத்திருமண விழாவை ஹாஜி ஹபீப் நினைவு திருமண மண்டபத்தில் கலைஞர் தலைமையில் நடத்தினார்.
அதில் கலைஞர் அவர்கள் முன்கூட்டியே மேடை வந்து அமர்ந்தார்.
அப்போதைய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அவர்கள் தாமதமாக வந்தார்.
ஆற்காடு வீராச்சாமியை நோக்கி கலைஞர் அவர்கள் கட்சி நிகழ்சி என்றால் தாமதமாக வரலாம்.
ஆனால் திருமணம் போன்ற நிகழ்சிகளுக்கு முன் கூட்டியே செல்லவேண்டும்.
காரணம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் சடங்குகள் நடைபெறும் அதிலும் குறிப்பாக இந்த பள்ளப்பட்டியில் ஹாஜி ஹபீப் திருமண மண்டபத்தில் சரியாக காலை 11:30 திருமணம் நடைபெறும்.
எவ்வளவு பெரிய ஆன்மீகவாதியாக இருந்தாலும் அரசியல் வாதியாக இருந்தாலும் அவர்களுக்காக காத்திருக்கும் வழக்கம் இங்கு இல்லை.
மிகப்பெரிய ஆன்மீக வாதிகளுக்கே இந்த நிலை என்றால் நம்மை போன்ற அரசியல்வாதிகளில் நிலையை என்னிப்பார்த்தேன் அதனால்தான் என் மறியாதை நான் காப்பாற்றிக்கொள்ள முன்கூட்டியே வந்தேன் என்று கலைஞர் குறிப்பிட்டார்.
இந்த மண்டபத்திற்கு மிகப்பெரும் ஆன்மீக தலைவர்கள் அரசியல்வாதிகள் சமூக சேவையாளர்கள் மிக பெரிய வணிக நிறுவன நபர்கள் போன்ற அனைவர்களும் வந்து இருக்கிறார்கள்.
திருமணங்களை தவிர மற்ற நிகழ்சிகளும் இந்த மண்டபத்தில் நடைபெறுகிறது.
மண்டப மேடை வளைவு பகுதியில்
27 மாப்பிள்ளைகளை அமர வைக்கலாம்.
அதை விட அதிகமாக மாப்பிள்ளைகள் வந்தால் கீழ் வரிசையில் அமர வைக்கலாம்.
இப்படியே நான்கு கீழ் வரிசையில் மாப்பிள்ளைகளை அமர வைத்து.
மொத்தம் 108 மாப்பிள்ளைகள் வரை அமர வைத்து திருமணம் நடத்தமுடியும்.
பார்வையாளர்கள் வரிசையில் 1200 பேர்கள் வரை எந்த வித நெருக்கடியும் இல்லாமல் அமரலாம்.
ரம்ஜான் மாதத்தை தவிர மீதி நாட்களில் திருமணங்களும் மற்ற நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று எப்போதும் பரபரப்புடனே காணப்படுகிறது.
தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் கூட்டுத்திருமணம் நடக்கும் மண்டபம் இருக்காது என்றே கருத வேண்டும்.
இன்று பள்ளப்பட்டியின் அடை யாளமாக திகழ்கிறது
நமதூருக்கு மட்டுமே இந்த சிறப்பு.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱