◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰
பத்துமணி வாத்தியார்.
◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰◱◰
பாரம்பரியமிக்க பள்ளப்பட்டியில்
சுமார் 300 ஆண்டுகளாக கல்வி சேவை செய்து வரும் முத்தவாத்தியார் பள்ளிக்கூடத்தை பற்றி நாம் அறிவோம்.
பொதுவாக பள்ளிக்கூடம் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை நடைபெறும் ஆனால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் 2 மணி நேரம் மட்டுமே செயல் பட்ட ஒரு பள்ளிக்கூடம் நமதூரில் நடைபெற்றது யாருக்கும் தெரியாது..
முத்தவாத்தியார் [சின்ன ஐயா] அவர்களின் மகளை ஈசனத்தம் அருகே உள்ள எல்லப்பட்டியை சொந்த ஊராக கொண்ட ரங்கசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
இவரை பள்ளப்பட்டி அழைத்து வந்து மேற்கு தெருவில் முத்த வாத்தியார்அவர்கள் ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார்.
1 ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்புவரை நடைபெற்ற இந்த பள்ளியில் காலை 8 மணிக்கு பள்ளி ஆரம்பித்து காலை 10 மணிக்கு முடிந்து விடும்...
ஏன் 2 மணி நேரம் மட்டுமே இந்த பள்ளி நடந்தது காரணம் என்ன...?
அதை விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு படிப்பை பற்றி தெளிவு இல்லாமல் படிப்பிற்கு முக்கியத்துவம் தராமல் ஆடு மாடு மேய்கவும் கூலி வேலைக்கு செல்லவும் குழந்தைகளை ஈடுபடுத்துவார்கள்.
நாம் ஏழை மக்கள் நமது பிள்ளைகள் படித்து கலெக்டர் ஆகவோ டாக்டர் ஆகவோ முடியாது.
நமக்கு கடைசி வரை கூலி வேலை தான் செய்யவேண்டும் என்ற மனநிலையில் படிப்பிற்கு முக்கியத்துவம் தராமல் மக்கள் வாழ்ந்தார்கள்.
அப்போது முத்தவாத்தியார் பள்ளி மட்டுமே ஊருக்குள் இருந்தது காலை 9 முதல் மாலை 4 மணி வரை பள்ளி நடக்கும்.
மாணவர்களும் குறைந்த அளவே படித்தார்கள்.
மற்ற மாணவர்கள் ஏன் படிக்க வருவது இல்லை என்று முத்து வாத்தியார் அவர்கள். (சின்ன ஐயா) மக்களிடம் சென்று படிக்காத பிள்ளைகளை படிக்க அனுப்பும்படி கேட்டார்.
அதற்கு நாங்கள் கூலி வேலை செய்பவர்கள் காலையில் வேலைக்கு போனால் மாலைதான் வருவோம்.
எங்கள் வீட்டு ஆடு மாடுகளை இந்த சிறுவர்கள்தான் மேய்க்கிறார்கள் இவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் கால்நடைகளை யார் மேய்ப்பார்கள் என்றனர்.
இதை கேட்ட சின்ன ஐயா அவர்கள் வேதனைபட்டு எப்படியாவது இந்த பிள்ளைகளையும் படிக்கவைக்க வேண்டும் என்று தன் மருமகனை பள்ளப்பட்டி அழைத்து வந்து மேற்கு தெருவில் இன்றைய முத்தலீபா டீக்கடை இருக்கும் இடத்தில் அப்போது பழைய ஓட்டு வீடு ஒன்று இருந்தது அந்த வீட்டில் ஒரு பள்ளியை துவக்கினார்.
ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்களை அந்த பள்ளியில் சேர்த்து காலை 8 மணிமுதல் காலை 10 மணிவரை மட்டுமே பாடம் நடக்கும் படி அமைத்தார்.
இதனால் ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு படிப்பும் கிடைத்தது மீதி நேரத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கும் இடையூறும் இல்லாமல் போனது..
இதன் மூலம் கல்வி கற்றவர்களை 4 ம் 5 ம் வகுப்பில் முத்தவாத்தியார் பள்ளியின் சேர்த்து படிக்கவைத்தனர்.
நமதூர் பிள்ளைகளும் படிப்பறிவு இல்லாமலும் படிக்க விருப்பம் இல்லாத பிள்ளைகளையும் முத்தவாத்தியார் அவர்கள் பிள்ளைகளின் பெற்றோர்களை சந்தித்து உங்கள் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்ற பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம் டேய் இரண்டு மணி நேரம் தானே நீ பள்ளிக்கூடம் சென்று படித்து விட்டு மீதி நேரம் நீ விளையாடலாம் என்ற ஆசைவார்த்தை கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள் அதன் மூலமாக அந்த பிள்ளைகளுக்கு படிப்பு கிடைத்தது.
1972 ல் உருஸ் கடை மைதானத்தில் அரசு சார்பில் உருஸ் கடை பள்ளி திறக்கப்பட்டது..
அந்த பள்ளி திறந்த பிறகு அந்த பகுதி பிள்ளைகள் அதில் சேர்ந்து படித்தார்கள்..
ஒரே இடத்தில் இரண்டு பள்ளிகள் இருக்ககூடாது மேலும் கிழக்கு பகுதி மக்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1978 ல் அந்த பள்ளியை
புளியமர தெருவில் இருக்கும் மஸ்தான் சாயபு தர்ஹா வளாகத்திற்கு மாற்றப்பட்டு கிழக்கு பகுதி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தரப்பட்டது.
முத்த வாத்தியார் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு முத்தவாத்தியார் அவர்களும் அவர் மருமகன் ரங்கசாமி வாத்தியார் அவர்களும் இனைந்து இப் பள்ளியை நடத்தினர்..
சில காலம் இயங்கிய பள்ளி
ஊரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அரசு பள்ளிகள் வந்த பிறகு 1992 ல் தன் பத்து மணி பள்ளி கல்விசேவையை நிறைவு செய்தது.
ரங்கசாமி வாத்தியார் அவர்களை மக்கள் பத்துமணி வாத்தியார் என்று அழைத்தனர்..
இன்றும் வயதான பெரியவர்களுக்கு பத்துமணி வாத்தியார் என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள்.
நம்மக்களும் நம்மை சுற்றி உள்ள மக்களும் கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று பாடுபட்ட இப்படிப்பட்ட ஆசிரியர்களை நன்றியுடன் நினைவுகூற நாம் கடமை பட்டுள்ளோம்
குறிப்பு:- பத்துமணி வாத்தியார் ரங்கசாமி அவர்களின் மகன் தான் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான செல்லமுத்து சார் ஆவார்.
▱▱ ▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱