<=><=><=•=><=•=><=><=><=><=><=>
புது சாஹிப் ஹஜரத் அவர்கள்
<=><=><=•=><=•=><=><=><=><=><=>
[மக்தூமியா மதரஸா நிறுவனர் ]
பள்ளப்பட்டியில் அடங்கி அரசாளும் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் மகன் ஷைய்குனா ஷாதாத் ஷாஹிபு அவர்களுடைய மகனாக புது ஷாஹிபு @ ஷைய்கு அப்துல் அஜீஸ் காதிரி அவர்கள் பள்ளப்பட்டியில் பிறந்தார்கள்.
சிறு வயதிலேயே மார்க்க கல்வியின் தாகம் நிறைந்தவராக காணப்பட்ட ஷைய்கு அப்துல் அஜீஸ் காதிரி
[ புது ஷாஹிபு ஹஜரத் அவர்கள். ]
அரபி பாரசீக மொழிகளில் மிகவும் பாண்டியத்துவம் பெற்றவர்களாக சிறந்து விளங்கினார்கள்.
அன்றைய நாட்களில் மிகவும் முதுமையை அடைந்த பின்பு குமர்கள் கரையேற்றிய பிறகு வஸியத் (உயில்) எழுதிய பின்புதான் ஹஜ் செய்வது வழக்கம்.
ஆனால் இவர்களோ மிக இளம் வயதிலேயே ஹஜ்ஜுக்கு சென்றார்கள்.
இவர்கள் ஹஜ்ஜுக்கு சென்ற சமயம் மக்காவில் உள்ள கல்வி நிலையத்தை காணச் சென்றார்கள்.
அங்கு போதிக்கப்படும் ஞானத்தால் ஈர்க்கப்பட்டு அங்கேயே மாணவராக சேர்ந்து விட்டார்கள் ஹரம் ஷரீபில் நடைபெறும் பகுதி நேர வகுப்புகளிலும் பின்னர் புனித மக்க முக்கராமாவில் உள்ள சவ்லாத்தியா அரபி மதரஸாவில்
(பிற்காலத்தில் அஃலா ஹஜரத் அவர்கள் இங்குதான் பயின்றார்கள்)
சில ஆண்டுகளும் ஆக மொத்தம் பத்து ஆண்டுகள் மக்காவில் ஓதி முடித்தார்.
ஹஜ் சென்றவர் திரும்பி வராததினாலும்
அன்றைய காலத்தில் கடித போக்குவரத்து வசதி இல்லாததாலும் தெரிவிக்க இயலாததாலும் இவர் ஹஜ் செல்லும் வழியில் கடலில் மரணித்து விட்டதாகவே பலர் எண்ணினார்கள்.
ஆனால் பத்து வருடங்கள் சென்று தான் பிறந்த பள்ளப்பட்டி மண்ணில் கால் பதித்தார்.
அப்போதுதான் இவர் உயிருடன் இருப்பது மக்களுக்கு தெரிந்தது.
பின்னர் தங்கள் முன்னோர்களின் அறவழியில் ஞான போதனைக்காக தமிழகமெங்கும் சுற்றுலா சென்றார்கள்.
தென் மாவட்டங்களில் கீழக்கரை செய்துங்கநல்லூர் கம்பம் உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் இவர்களின் அருட்கரம் பற்றி தீட்சை ( பையத்) பெற்று முரீதானவர்கள் ஏராளம் ஏராளம்.
அவ்வாறு முரீதான சீடர்கள் இவர்களின் பின்னாடியே வந்து பள்ளப்பட்டியில் குடியேறியவர்கள் பலர் அதில் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும்படியானவர்கள் இருவர்.
ஒருவர் கம்பம் உத்தமபாளையம் பகுதியிகளில் பிரசித்தி பெற்ற மாபெரும் வீரராக எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முஸ்தபா சாகிப் என்பவரும்.
மாபெரும் வணிக வள்ளலாக திகழ்ந்த காயல் பட்டிணம் மக்தூம் மரைக்காயர் அவர்களும். குறிப்பிடத்தக்கவர்கள்.
இவ்விரு பெரியார்களும் புது ஷாஹிபுஹஜரத் அவர்களின் மீது மாறாத அன்பு கொண்டு அவர்களுக்கு எதையும் செய்யும் நிலையில் இருந்தனர்.
காஜா ஜுனைதுல் பக்தாதி என்ற மாபெரும் ஞானி அவர்கள் கூறுகிறார்கள்.
இறைநேசச் செல்வர்கள் பார்வையைக் கொண்டு களகத்ரைக்கூட மாற்றிடும் வல்லமை பெற்றவர்வர்கள்.
தனது அருட் பார்வையினால் திருட்டுக் கூட்டத்தினரை திருக்கூட்டமாக்குவர்.
விலைமாதர்களை ஞானக்கலை மாதர்களாக மாற்றுவார்கள்.
கொலைஞர்களை கலைஞர்களாக்குவார்கள்
தீயோர்களை தீனோர்களாகக்குவார்கள்.
அவ்வகையில் மாபெரும்.
முரடராக விளங்கிய முஸ்தபா சாகிப் என்பவரை தன் முத்தான போதனையால் முத்தப்பா சாஹிபாக ஆக்கினார்கள்.
முத்தபா ஷாஹிப் அவர்கள் இவரிடம் வந்து சேர்ந்த பின் சாந்தமே உருவான சான்றோராக மாறினார்கள்.
சதாவும் இறைவணக்கத்தில் திளைத்தார்கள் இவர்களின் தவ வாழ்வுக்கு பரிசாக அவர்களுக்கு கலீபா பதவி வழங்கி மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் தவம் செய்த அரங்கமலை என்ற ரெங்கமலை போய் சில்லா இருக்கும்படி உத்திரவிட்டார்கள்.
அவ்வாறு இருந்த பின் மீண்டும் பள்ளபட்டியில் சில காலம் தங்கி மணமுடித்து மக்கள் செல்வங்களை பெற்றெடுத்து பெருவாழ்வு வாழ்ந்தார்கள்.
புது ஷாஹிபு அவர்கள் காலமான பின்பு முத்தப்பா சாஹிபும் துறவாழ்வு மேற்கொண்டு தமது தர்ஹாவின் வடமேற்கில் உள்ள ஆற்றுக்கரையில் தனக்கு சொந்தமான நிலத்தில் தவச்சாலை நிறுவி வாழ்ந்து வஃபாத்தானார்கள்.
அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இவர்கள் தர்ஹாஆற்றுக்கு அக்கரையில் இருக்கிறது இவருடைய சீடர்கள் இன்றும் பள்ளபட்டியில் வசித்து வருகிறார்கள்.
புது ஷாஹிபு அவர்களின் இன்னொரு சீடர்.
வணிக வள்ளலாக திகழ்ந்த மக்தூம் மரைக்காயர் இவரும் தனது குருவான புது சாஹிபு அவர்களின் பேரன்பு கொண்டிருந்தார்கள்.
தனது குருநாதர் புது சாஹிப்பின் கட்டளை படி திருக்குர்ஆன் மதரஸாவை நிறுவி உள்ளூர்காரர்களுக்கு ஓதி கொடுக்க ஏற்பாடு செய்தார்.
அந்த சமயம் நிறுவனராகவும் முதல் ஆசிரியராகவும் உள்ள புதுசாஹிபு அவர்களுக்கு ஆண்டு ஊதியம் நூறுரூபாய் தரப்பட்டது.
பிறகு வெளியூரில் இருந்தும் மாணவர்கள் வரத்துவங்கினார்கள் அவர்களது உணவுக்காக நிதி தேவைபட்ட சமயம் மக்தூம் மரைக்காயர் தனது நிதியில் வழங்கினார்.
அது போதாத சமயம் வேறு ஒரு சிறந்த ஏற்பட்டை செய்தார் அது மிகவும் அறிவுடைமையான நீடித்து நிலைத்து நிற்கும் படியான தமிழகத்துக்கே முன்னோடியான சிறந்த மிகச் சிறந்த ஏற்பாடாகும்.
ஆம் அந்த சிறப்பான ஏற்பாடு.
அன்றைய நாட்களில் குர்பானி கொடுக்கும் ஆடுகளின் தோல்களை பயன் படுத்தும் முறை தெரியாமல் ஆற்றோரத்தின் வேலிகளின் மேல் தூக்கி எறிந்து விடுவார்கள்.
நாய் நரிகள் இழுத்துக்கொண்டு போனது போக மீதியை ஆற்றுநீர் அடித்துக்கொண்டு சென்று விடும்.
வணிக வள்ளலாக திகழ்ந்த மக்தூம் மரைக்காயர் அவர்கள் அந்த தோல்களை மதரஸாவில் கொண்டு வந்து போடும் படி கூறினார்கள்.
அதை பக்குவப்படுத்தி திண்டுக்கல் சென்னை போன்ற ஊர்களில் விற்பனை செய்தார்கள்.
அது சமயம் பிரிட்டீஷ் ஏகாபத்திய அரசு இந்தியாவில் இருந்த படியால் லண்டன் சந்தைகளில் கூட பள்ளபட்டி குர்பானி தோல்கள் விற்கப்பட்டது.
அந்த குர்பானி தோலுடைய வருமானத்தைக்கொண்டு வெளியூர் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஒரு தோல் 1 தம்படி (1 ரூபாயில் 200-ல் ஒரு பங்கு)க்கு விற்பனை ஆகும்.
அந்தகாலத்தில் துவங்கப்பட்ட அந்த திருப்பணி நூற்றான்டுகள் கடந்தும் இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
பின்னர் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டபோது பிடி அரிசி திட்டமும் கொண்டு வரப்பட்டது.
பிடி அரிசித் திட்டம் என்பது.
ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு துணிப்பையை கொடுத்து விடுவார்கள்.
தினசரி அவர்கள் வீட்டு உணவு தேவைக்கு சமைக்க அரிசி எடுக்கும் போது எடுக்கும் அரிசியில் ஒரு கை பிடி அரிசியை இப் பையில் போட்டு விட வேண்டும்.
[ ஆனால் நடந்தது என்னவென்றால் ஒரு பிடி அரிசிக்கு பதிலாக ஒரு "படி" அரிசியை தாராளமாக துணிப் பையில் போட்டார்கள் இதனால் தேவைக்கு அதிகமாகவே அரிசி சேர்ந்தது மாஷா அல்லாஹ்..]
வாரம் ஒரு முறை அப்படி சேர்ந்த அரிசியை மதரஸா மாணவர்கள் வாங்கி வந்து அதன் மூலமாக தங்களின் உணவு தேவையை நிறைவு செய்வார்கள்.
இது தான் பிடி அரிசித் திட்டம் என்பது
இதனால் இரண்டு நன்மைகள் கிடைத்தது.
முதல் நன்மை ஏழை மாணவர்களுக்கு தினசரி உணவு வழங்கிய நன்மை பள்ளப்பட்டி மக்களுக்கு கிடைத்தது.
இரண்டாவது நன்மை மதரஸா மாணவர்களின் பசியை தீர்த்தது.
தன் பசியை தீர்த்த மக்களுக்காக மாணவர்கள் இரு கரமேந்தி துவா செய்தனர்.
இதன் காரணமாக பள்ளப்பட்டி மக்களின் பொருளாதாரத்தில் பரக்கத் ஏற்பட்டது.
அன்னலம் பெருமானார் (ஸல்)
அவர்கள் மவ்லீது நடத்தவும் வலிகள்கோமான் முஹையந்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் மீது கந்தூரி செய்யவும் புது சாஹிபு அவர்கள் விரும்பியபோது பெரிய மதரஸா கந்தூரி கமிட்டி அமைக்கப்பட்டு ஆண்டு தோறும்
விமர்ச்சையாக கந்தூரி கொண்டாடப்பட்டது.
12ம் மவ்லீது ஓத இடம் பற்றாக்குறை ஏற்பட்டபோது புது சாஹிபு அவர்களின் நெருக்கமான சீடர் மணியக்காரர்களால் மக்தூமியா மதரஸாவில் மாடி அன்றைய காலத்தில் கானாவாக கட்டப்பட்டது.
மவ்லீது ஓதும் பொழுது மட்டும் திறக்கப்பட்டு மற்ற நாட்களில் அது பூட்டியே கிடக்கும்
பதினைந்து. ஆண்டுகளுக்குமுன்பு மக்தூமியா அரபி கல்லூரி விரிவு படுத்த சமயம் மணியக்காரர்கள் கட்டிக்கொடுத்த அந்த மாடியை இடிக்காமல் அதன் மீது இன்னொரு மாடி எழுப்பும் அளவு வலுவான முறையில் கட்டி இருக்கிறார்கள்.
புது சாஹிபு அவர்கள் அங்கு நாற்பது ஆண்டுகள் பணியாற்றினார்கள்.
.பெருந்தகையின் குடும்பம்.
புது சாஹிபு என்கிற ஷாஹ் முஹம்மது அப்துல் அஜீஸ் சாஹிப் அவர்களுக்கு.
ஜமீன் ஆத்தூரில் உள்ள தனது தாய் மாமனார் முஹம்மது மீரான் லெப்பை அவர்களின் மகள் பாத்திமாவை திருமணம் செய்யப்பட்டது.
அந்த அம்மையார் மஹான் அவர்களோடு இனைந்து இல்லறம் நடத்திவரும் வேலையில் அவருக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது அவ்வம்மையார் இல்லறத்தில் மட்டுமல்ல இபாதத்திலும் தனது மனம் கவர்ந்து மணாளரை ஒத்து இருந்தார்.
அவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இறை வணக்கத்தில் கழித்தார்.
அவர்கள் இபாதத்திலே திளைத்திருக்கும் சமயம் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்து.
கணவரிடம் அனுமதி கோரினார்.
தம் அருமைத் துணைவியாரின் தவ வாழ்வினை மெச்சி அவர்களும் அனுமதி தந்தார்.
எனினும் தன் கணவருக்கு துணையாக தானே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார்.
தனது ஒரே மகன் மாபெரும் தவசீலர் அந்நாளில் சூஃபி ஹஜரத் என்றழைக்கப்படும் ஷைய்கு அப்துல் காதிர் சாஹிப் அவர்களுடன் தனித்து வாழத் துவங்கினார்.
இரண்டாம் மனைவி மூலம் மூன்று ஆண் மகவும் ஐந்து பெண் பிள்ளைகளும் பிறந்தன.
எனினும் மூத்த மனைவியார் தனது கணவனுக்கு செய்யும் பணிவிடைகளில் குறை ஏற்படக் கூடாது என்பதினால்.
இரவு 3 மணிக்கு தஹஜ்ஜுது தொழுது விட்டு வந்து கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து விட்டு காலை சிற்றுண்டிகூட செய்து முடித்து விட்டு தன் இல்லம் திரும்புவார்.
புது சாஹிப் அவர்களுக்கு முதல் மனைவின் மூலம் ஒரே ஆண்பிள்ளை 1 ஸுஃபி ஹஜரத் என்று அழைக்கப்படும் ஷைகு அப்துல்காதிர் ஹஜரத் காதிரி. (இவர்கள் தான் அரபி ஹஜரத் அவர்களின் தந்தையாவார்.)
2 இரண்டாவது மனைவி மூலம் பிறந்த தங்கள் ஹஜரத் என்கிற ஷாஹ் அப்துல் மஜீத் காதிரி.
3 ஷாஹ் முஹம்மது யூசுப் காதிரி.
4 வெள்ளையப்பா சாஹிப் என்கிற ஷாஹ் முஹம்மது இஸ்ஸாக் சாஹிப் காதிரி.
இந்நால்வரும் தனது தந்தையிடம் ஞானதீட்சம்(முரீது) பெற்றவர்கள்.
இவர்களுக்கு ஐந்து பெண்பிள்ளைகளும் இரண்டாம் மனைவி மூலம் பிறந்தது.
மண்ணரை.
தனது 88 வது வயதில் காலமான இவர்களது பொன்னுடல் தனது பாட்டனார் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் தர்ஹா வளாகத்தில்.
அவ்லியாவின் நேர் மேற்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
புது சாஹிப் அவர்களின் முதல் துணைவியார் காலமான சமயம் அவர்கள் ஜியாரத் செய்வதற்கு வசதியாக அவர்கள் நிறுவனம் செய்த பெரிய மதரஸா வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
அதன் பின் அவர்கள் இல்ல பெண்கள் அனைவர்களையும் அங்கேயே அடக்கம் செய்து வருகிறார்கள்.
வேறுயாரும் அங்கு அடக்கம் செய்ய அனுமதி இல்லை.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱