➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢
பள்ளப்பட்டி தோன்றிய வரலாறு.
➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢➢
வரலாறு என்பது ஒரு வற்றாத அருவி.
அதில் ஈரம்பட்டு சிலிர்ப்பது ஒரு அறிவுசார் அனுபவமாகும்.
அதுவும் நாம் பிறந்த மண்ணின் வரலாற்றை தெரிந்துகொள்வதில் மிகப் பெரும் நீர் அருவியில் நீராடிய சந்தோசமும் புத்துணர்ச்சியும் நிகழும்.
பல ஊர்களின் வரலாறுகளை நாம் அறிவோம்.
அந்த வரிசையில் நாம் பிறந்து வளர்ந்த நமதூரின் வரலாறுகள் முற்றிலும் பதியப்பெறாமல் காலச்சூழலில் கறைந்தும் மறைந்தும் விட்டது.
சில வரலாற்று சான்றுகள் இன்று வரை தொடரவும் செய்கிறது.
ஒரு ஊரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதன் கடந்த கால வரலாறுகளை தெரிந்தால் நிகழ்காலம் நம் முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடி போல் தெள்ள தெளிவாக தெரியும்.
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க பள்ளப்பட்டி தனக்குள் பல சரித்திர சான்றுகளை பதிய செய்து அமைதியுடனும் கண்ணியத்துடனும் காணப்படுகிறது.
இறைவன் இவ்வுலகில் பல நாடுகளையும் நகரங்களையும் ஊர்களையும் படைத்து அதில் ஒரு சில நகரங்களையும் ஊர்களையும் தேர்தெடுத்து தன் அருள் பார்வையை செலுத்தி கண்ணியம் மிகுந்த ஊர்களாக ஆக்கிவைத்துள்ளான்.
அந்த வரிசையில் நமதூர் பள்ளப்பட்டிக்கும் அல்லாஹ் மாபெரும் சிறப்பை வழங்கி உள்ளான்
இன்றைய பள்ளப்பட்டி நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் இன்று காணும் காட்சிகள் மட்டுமே ஆனால் நாம் இன்று நம் முன்னால் பரந்து விரிந்து காணப்படும் பள்ளப்பட்டி எப்படி தோன்றியது எப்போது தோன்றியது.
கடந்த காலங்கள் எப்படி சென்றது என்று காலசக்கரத்தை பின்னோக்கி செலுத்தினால் சுமார் 700/800 ஆண்டுகள் பின்னோக்கி நிலை பெற்று நிற்கிறது.
அதன் உள்ளே நுழைந்து அதிலிருந்து நமது சரித்திரத்தை தேடி தெரிந்து கொள்வோம்.
ஆரம்ப காலத்தில் பாண்டிய மன்னர்களாலும். பிறகு சேர மன்னர்களாலும், நாயக்கர் மன்னர்களாலும்
இறுதியாக திப்புசுல்தான் அவர்களாளும் ஆண்ட பகுதி,
கலை இலக்கியங்களில். சிறப்புகள் விளங்கிய கரூர் மாவட்டத்தில்
தென் பகுதி கடைசியில் அமைந்த பள்ளப்பட்டி.
தீன் மணம் கமழும் இந்த மண்ணில்
பல பெரியோர்கள் நல்லோர்கள் வலிமார்கள் மார்க்க மேதைகள் பாதம் பட்டு வாழ்ந்து மறைந்த வாழ்ந்துகொண்டிருக்கிற. பழமை வாய்ந்த இந்த ஊர் இப்படி பல சிறப்புக்கள் உள்ளடக்கிய பள்ளபட்டியின் முழு சரித்திரத்தை இன்ஷா அல்லாஹ் தெரிந்து கொள்வோம்...
சுமார் 700/800 ஆண்டுகளுக்கு முன் பள்ளப்பட்டி என்ற ஊரோ அல்லது கிராமமோ இல்லாமல் விவசாய பூமியாக இருந்தது.
அப்போது விவசாயம் செய்பவர்கள் தங்களின் இடத்திலேயே குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.
அப்போதைய நாயக்கர்களின் ஆட்சியில் பாளையக்காரர்கள் மூலம் மிக மோசமான சுரண்டலை குடிமக்களிடம் நடத்தியது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டோர் வேளாண்குடிகளான 'பள்ளர்களே'
[ பள்ளு இலக்கியங்கள் அன்றைய பள்ளர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளன. ]
பள்ளர் குலப் பெண்களும் ஆண்களும் ‘கொத்தடிமைகளாக’ வும் குறிக்கப்பட்டுள்ளனர் .
விதைப்பு முதல் அறுவடை வரை செய்த பள்ளர்களுக்கு கூலியாக எதுவுமே தரப்படவில்லை.
இவர்களுக்கு கிடைத்த பங்கு குடிசுதந்திரம், பிள்ளையாரடி, அரிநெல் என்றழைக்கப்பட்டது.
ஆனால் இவை பள்ளர்களின் தேவைக்குப் போதவில்லை என்றும் இவையும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது இதனால் பள்ளர்கள் மிக வறுமையில் வாடினர்.
சுமார் 700/800 வருடங்களுக்கு முன் ஒருநாள்.
அந்தி சாயும் மாலைப்பொழுது
இங்கொன்றுமாக. அங்கொன்றுமாக சிறு சிறு குடிசைகள் உள்ள ஒரு சிற்றூறாக காட்சி அளித்த பள்ளப்பட்டிக்கு பக்கீர்கள் கூட்டத்துடன் விஜயம் செய்தார்கள்,
அக்கூட்டத்தில் முகிலை கிழித்து வரும் வெண்மதிபோல் ஓர் உருவம் முழு வெண் துகில் அங்கியணிந்து அக்கூட்டத்திற்கு தலைமையேற்று நடந்து வந்தது
அன்றைய மாலை பொழுதில் தங்க ஒரு இடத்தை தேடி இன்றைய மேற்கு பள்ளி அமைந்து இருக்கும் இடத்தில் தங்கினார்கள்,
மறுநாள்.
எவரோ பக்கீர் குழுவினர் வந்திருப்பதாக கேள்வியுற்ற சுற்றுவட்டார பகுதி மக்கள் இவர்கள் யார் என்று பார்க்க கூடினர்
சீஸ்தான் நாட்டு சுல்தானின்மகனாக பிறந்து அரசு சுகங்களை உதறி தள்ளிவிட்டு
சில தோழர்கள் பின் தொடர காடு மலை வனாந்திரம் ஆகியவற்றை எல்லாம் கடந்து கைபர் காணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்து வடமேற்கு எல்லைப்புறம் பஞ்சாப் காஷ்மீர் ஆகிய நாடுகளில் எல்லாம் திரிந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை இஸ்லாத்தில் இணைத்தபின் பல்வேறு நகரங்களையும் கடந்து தமிழகம் வந்து சேர்ந்து இறுதியாக அவர்கள் தம் குருநாதர் வாழ்ந்து வந்த திரு நகராம் திருச்சியை நெருங்கி திருச்சியில் வள்ளுவர் தெருவில் வாழ்ந்த நத்ஹர் வலி அவர்கள் முன் நின்று சலாம் உரைத்து அவர்களிடம் தீட்சை பெற்ற பாவா பக்ருதீன் (வலி) அவர்கள் உத்தம பாளையம் செல்லும் வழியில் பள்ளப்பட்டியில் தங்கி இருக்கிறார் என்ற விபரம் தெரிந்து அந்த மஹான் அவர்களின் அறபோதனைகளை செவி தாழ்த்தினர்.
அங்கேயே சிறு தவசாலை அமைத்து இப்பகுதி மக்களுக்கு சில மாதங்கள் அறபோதனை செய்தார்கள் அதன் பலனாக பெரும்பாலோர் இஸ்லாத்தில் இனைந்தனர்.
பாவா பக்ருதீன் கி.பி 1564- கால கட்டம்.என்று வரலாறு கூறுகிறது.
பாவா பக்ருதீன் அவர்கள் பள்ளப்பட்டியில்
தங்கி இருந்த சமயத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களுக்கு நற்போதனைவழங்கி வந்தார்,
அந்த நேரத்தில் அருகில் உள்ள பகுதியை அரசாண்ட மன்னனின் மனைவிக்கு தீராத நோய் இருந்தது,
மன்னர் இவரை நேரில் சந்தித்து மனைவிக்கு ஏற்பட்டிருக்கும் நோயை நீக்க உங்களிடம் ஏதாவது வழி உள்ளதா என்று வினவ அந்த நோயை நீக்கினால் நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க,
நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன்,
ஏன் இந்த ஊரையே தருகிறேன் என்று மன்னன் சொல்ல ஊர் தேவையில்லை நான் தங்கி இருக்கும் இந்த இடத்தை மட்டும் தந்தால் போதும் என்று அந்த அரசனின் மனைவியை நேரில் வரவழைத்து சில சூராக்களை தண்ணீரில் ஓதி ஊதி தீராத அந்த நோயை குணப்படுத்தினார்.
இதை கண்ட மன்னர் மனம் மகிழ்ந்து அவர் கேட்ட இடத்தை மானியமாக கொடுத்தார் என்று வரலாறு சொல்கிறது.
அதன் பின்னர் பக்ருதீன் வலியுல்லாஹ் அவர்கள் இங்கிருந்து கிளம்பி உத்தம பாளையம் சென்றார்கள்.
(இவர்கள். ஆந்திர மாநிலம் பெணுகொண்டா நகரில் அடங்கி அரசாலும் பாவா பக்ருதீன் (வலி) அவர்களாவார்கள்)
அவர்கள் இங்கு சென்ற பிறகு அப்போது இஸ்லாத்தை ஏற்றவர்கள்.
அபூபக்கர் சித்தீக் அவர்களுடைய குலத் தோன்றல் பாவா பக்ருதீன் வலியுல்லாஹ் (ரஹ்)
அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரு தவச்சாலை நிறுவி பாவா பக்ருதீன் வலியுல்லாஹ் தர்ஹா என்ற பெயரில் அங்கு மவ்லீது ஓதியும் திக்ர்கள் செய்தும் தொழுதும் வந்தனர்.
பாவா பக்குருதீன் ரஹ் அவர்கள் போதனையால் சமய சமூக மக்களில் ஒரு சிலர் இஸ்லாத்தை தழுவினர்.
ஒரு சிலர் தங்களின் மதத்திலேயே தொடர்ந்தனர்.
இவர்கள் இஸ்லாத்தை தழுவும் முன் அவர்களின் சமூகத்தை சாந்தவர்களிடம் பெண் கொடுத்து எடுத்து வாழ்ந்தவர்கள்.
இவர்கள் இஸ்லாத்தை தழுவினாலும் உறவு முறை என்பது தொடர்ந்தே வந்தது.
தாய் தந்தை அண்ணன் தம்பி சகோதர சகோதரிகள் மாமன் மச்சான் போன்றவர்கள் சமய சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்.
தன் உறவினர்களில் சிலர் இஸ்லாத்தில் இருந்தாலும் உறவுகளை பிரிக்க முடியவில்லை.
தாய் தந்தை அண்ணன் தம்பி உறவு என்பது அவர்கள் காலத்துடன் முடிந்து விடுகிறது.
ஆனால் தன் முன் சமூகத்திடம் இருந்து பெண் எடுத்து வாழ்ந்தால் உறவு தொடர்ந்து நடைபெறும் அந்த அடிப்படையில் இவர்கள் இஸ்லாத்தை தழுவினாலும் தன் உறவு முறைகளிடமே பெண் எடுத்து வந்தனர்.
மதம் மாறினாலும் உறவு முறை தொடர்ந்தது.
பல காலங்கள் இந்த நிலை தொடரவே செய்தன பிற்காலத்தில் அனேகமானோர் இஸ்லாத்தை தழுவிய பிறகு இஸ்லாமியர்களிடமே பெண் எடுக்கும் வழக்கம் வந்தது.
அதுவரை தன் முன் சமூகத்தினர் இடையேதான் பெண் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றது.
இவர்கள் இஸ்லாத்தை தழுவினாலும் அதே மாமன் மச்சான் உறவு முறையில் தொடர்ந்து அதே பெயர் சொல்லியே அழைத்து வந்தனர்.
அதன் படி மதம் மாறினாலும் மாமன் மச்சான் உறவின் பெயர் மாறாமல் நிலைத்தது.
மதங்கள் மாறினாலும் ரத்த பந்தம் ஒன்றுதான் அதை யாராலும் பிரிக்க முடியாது.
அதன் காரணமாக நம் சுற்று வட்டார மக்களின் பழக்கவழகங்களும் இஸ்லாமியர்களின் பழக்க வழகங்களும் ஒரே மாதிரி இருப்பதை இன்றும் காணலாம்.
அதன் தொடர்சியாகவே இன்று வரை மாமன் மச்சான் உறவு முறை சொல்லியே அழைக்கும் பழக்கம் தொடர்கிறது.
வணக்கவழிபாடுகள் மட்டுமே வேறு அடிப்படையில் நாம் அனைவர்களும் சகோதரர்களே மாமன் மச்சார்களே.
வாழையடி வாழையாக வம்சங்கள் வந்து தலைமுறைகள் மாறினாலும் இந்த உறவை யாராலும் பிரிக்க முடியாது.
அன்வர் பாஷா அன்வாரி