❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁
பழைய ஈத்ஹா மைதானத்தில் உள்ள சில கபர்கள்.
❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁
இருள் அகற்றும் ஒளிக்கதிராம் திருமறையை புவிக்களித்த ஒப்பற்ற இறைவனுக்கே புகழனைத்தும்...
ஈருலக நாதர் ஏகனின் தூதர் எம் பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் மீதும் அவர்கள் அடிச்சுவட்டை பின்பற்றி நடந்து காட்டிய. சத்திய சஹாபாக்கள் நல்லோர்கள் இறைநேசர்கள் மீதும் நம் அனைவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....
❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁❁
பாரம்பரிய மிக்க பள்ளப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொது கபரஸ்தான் அமைந்து நமதூர் தோன்றிய காலம் முதல் இன்று வரை மறைந்த அனைவர்களும் ஒரே கபரஸ்தானில் அடக்கப்பட்டு வருகிறார்கள்.
அதில் பல வலிமார்கள் மார்க்க மேதைகள் நல்லோர்கள் பெரியோர்கள் சாதாரன மக்கள் அனைவர்களும் அடங்கி இருக்கிறார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கபரஸ்தான் நமது மேற்கு பள்ளி வளாகத்தில் உள்ளதை நாம் அறிவோம்.
அடுத்து மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் மஹான் அவர்களின் வம்சாவழியை சார்ந்தவர்களை அடக்கப்பட்டு வருகிறார்கள்.
அதில் மஹான் அவர்களின் மகனார் ஷாதாத் சாஹிபு அவர்கள்.
மஹான் அவர்களின் பேரர் புது ஷாஹிபு ஹஜரத் அவர்கள்.
அவர்களின் மகனார் சூஃபி ஹஜரத் அவர்கள்.
புது ஷாஹிபு ஹஜரத் அவர்களின் மற்றொரு மகனார் தங்கள் ஹஜரத் அவர்கள்.
சூஃபி ஹஜரத் அவர்களின் மகனார் அரபி ஹஜரத் அவர்கள்.
இவர்களை போல் சிறப்பு வாய்ந்த பல பெரியோர்கள் அடங்கி இருக்கிறார்கள்.
நமதூரின் மேற்கு பகுதியில் பொது கபரஸ்தானில் பொது மக்களும் ஆற்றின் ஓரத்தில் மஹான் ஷேக் அப்துல் காதிர் வலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் அவர்களின் வாரிசுகளும் அடங்கி இருக்கிறார்கள்.
இந்த இரண்டு கபரஸ்தானுக்கு நடுவில் பழைய ஈத்ஹா மைதான ஒரு ஓரத்தில் சில கபர்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
இந்த இடத்தில் அடங்கி இருக்கும் இவர்கள் யார்..?ஏன் இங்கு இவர்களை இந்த இடத்தில் அடக்கி இருக்கிறார்கள்.?
இவர்களின் சிறப்பு என்ன.?என்ற கேள்விக்கு விடை தெரியாது..
அதை இன்று தெரிந்து கொண்டு அதன் வரலாற்றையும் தெரிந்து கொண்டு.
அவர்களின் சிறப்புகளையும் தெரிந்து கொள்வோம்.
மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் பள்ளப்பட்டியில் ஹயாத்தாக வாழ்ந்த காலத்தில் குத்புஸ்ஸமானாக இருந்தார்கள்.
இவர்களுக்கு தமிழகமெங்கும் பல ஆயிரம் பேர்கள் முரீதாக இருந்தார்கள்.
அதில் முதல் இடத்தில் மஹான் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக பள்ளப்பட்டியில் பிறந்து ஜமீன் ஆத்தூரில் திருமணம் முடித்த மணியம் ஹிதாயத்துல்லாஹ் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார்.
இவரின் மனைவின் தங்கையை மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் திருமணம் முடித்திருந்தார்கள்.
அந்த வகையில் மஹான் அவர்களும் மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களும் சகளையாக இருந்தார்கள்.
சகளை ஆகவும் நெருங்கிய சீடராகவும் விளங்கிய ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்.
ஒரு சமயம் மஹான் அவர்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது அதை அகற்ற மஹான் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஒரு இரவு முழுவதும் நெருப்பில் இருந்து சிரித்துக்கொண்டே மறு நாள் வெளியில் வந்தவர் அந்த நிகழ்வு [கராமத்] நமதூர் சொட்டல் தெருவில் நடைபெற்றது.
காலம் பூராவும் மஹான் அவர்கள் அருகிலேயே இருந்து அவருக்கு சேவைகள் செய்தவர்.
இந்த நிலையில்...
இறைவன் நியதி படி உலகில் பிறந்த அனைத்து உயிர்களும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும்...
அந்த அடிப்படையில் மஹான் அவர்களுக்கும் இறுதி நாள் நெருங்கியது அதை உணர்ந்த மஹான் அவர்கள் தன் நெருங்கிய சீடர் மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களிடம் தான் இவ்வுலகை விட்டு மறைப்போகும் செய்தியை சொன்னார்..
அதை கேட்ட மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் துடி துடித்து கண்ணீர் வடித்தார்..
மஹான் அவர்கள் மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களை ஆறுதல் படுத்தி இது சிறிது கால பிரிவு தான்
நிறந்தர பிரிவு இல்லை இன்ஷா அல்லாஹ் விரைவில் நாம் அனைவர்களும் நிறந்தரமாக. என்றுமே அழிவில்லாத சொர்க்கத்தில் வாழலாம் கவலை பட வேண்டாம் என்று ஆறுதல் படுத்தினார்.
மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்..
இந்த சிறிது கால பிரிவைக்கூட என்னால் தாங்கமுடியாதே என்று கண்ணீர் வடித்து.
அண்ணலே! எங்கள் ஆருயிரே!
காலம் முழுவதும் தங்களுக்கு ஊழியம் செய்து வந்தேன்.
தங்களின் மரணத்திற்கு பின்பும் என்னையும் தங்கள் அருகிலேயே அடக்கம் செய்திட அனுமதித்தால் பாக்கியம் பெற்றவனாவேன் என்றுரைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று மஹான் அவர்கள் அனுமதி கொடுத்தார்.
நங்காஞ்சி நதிக்கரை ஓரம் ஒரு தவச்சாலை நிறுவி அங்கே இருந்து மக்களுக்கு அறபோதம் செய்து வந்த மஹானவர்கள்..
ஹிஜிரி 1020 ம் ஆண்டு (28:12: 1611 ம்ஆண்டு ) ஷவ்வால் பிறை 22 ஞாயிற்றுக்கிழமை தம் இல்லத்தில் காலமானார்கள்
( இன்னாலில்லாஹி....)
இச்செய்தி காட்டுத்தீ போல் தமிழகமெங்கும் இவர்களிடம் தீட்சை (முறீது) பெற்றவர்கள் மத்தியில் பரவியது.
கண்ணீருடன் அலை அலையாக பள்ளபட்டி நோக்கி விரைந்தனர்.
இவர்கள் முன்னிலையில் அவர்களின் தவச்சாலையிலேயே அவர்களை நல்லடக்கம் செய்யப்பட்டது
பிறகு ஊர்மக்களின் உதவியுடன்
ஒரு தர்ஹா ஷரீபும் கட்டப்பட்டது.
மஹான் அவர்கள் மறைந்து
இதுகாறும் மனிதக் கண்கள் கண்டறியா மாபெறும் பொன்னுலகை விண்ணுலகை அடைந்து விட்டார்கள்.
மஹான் அவர்கள் மறைவுக்கு பிறகு மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் எப்போதும் தர்ஹா வளாகத்திலேயே தங்கி தன் வாழ்நாளை கழித்தார்
அதன் பிறகு சில காலம் வாழ்ந்த மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களும் ஒரு நாள் மறைந்தார்..
அன்னார் அவர்கள் வசியத் செய்த படி தற்போது இருக்கும் பழைய ஈத்ஹா மைதானத்தில் தர்ஹாவிற்கு அருகில் ஒரு ஓரத்தில் அடக்கப்பட்டார்
கபரில் ஒருவரை அடக்கினால் கிப்லாவின் திசையின் பக்கம் தலையை திருப்பி வைத்து அடக்கம் பன்னுவார்கள்.
அந்த அடிப்படையில் தர்ஹா வளாகத்தில் இருந்து கிழக்கு பகுதியில் இவரை அடக்கம் செய்தனர்.
இவர் தலை கிப்லாவின் திசைபக்கம் திருப்பி வைக்கப்பட்டது
மஹான் அவர்களின் தர்ஹாவும் அதே திசையில் இருப்பதால்
எப்போதும் மஹான் அவர்களை பார்த்துக்கொண்டே கபரில் வாழ்கிறார்கள்.
மஹான் அவர்கள் கபரும் மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் கபரும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளது.
கால சுழற்சியின் காரணமாக மஹானின் சீடர் மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தளம் மண்ணோடு மண்ணாக மறைந்து அடையாளமே இல்லாமல் போய் விட்டது...
அடுத்து...
ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் குடும்பத்தில் முதல் குழந்தை ஆணாக பிறந்தால் அன்னார் அவர்களின் நினைவாக ஹிதாயத்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள்..
அப்படி பெயர் வைத்தவர்கள் இறந்தாலும் அந்த வளாகத்திலேயே அவருக்கு அருகிலேயே அடக்கம் செய்யும் வழக்கம் வந்தது..
குமனன் வகைராவும் மணியம் வகைராவும் மிக நெருங்கிய வாரிசு பந்தம் கொண்டவர்கள்..
அதன் காரணமாக குமணன் வகைராவை சார்ந்த தலைமகன் ஆணாக இருந்தால் அந்த வளாகத்திலேயே அடக்கம் செய்கிறார்கள்..
அந்த வளாகத்தில் மணியம் மற்றும் குமணன் வகைராவை சார்ந்த தலைமகனுக்கு மட்டுமே அங்கு அடக்க அனுமதி மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது..
இவர்கள் குடும்பத்தில் ஹிதாயாத்துல்லாஹ் என்று பெயர் வைத்தவர் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர் இருப்பார்கள்.
அந்த வரிசையில்...
1909 பிறந்து 1977 ல் மறைந்த மணியம் ஹிதாயத்துல்லாஹ் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார்.
அப்போது அவர் இவ்வூரின் நாட்டாமையாக பணி புரிந்து மக்களுக்கு முறையான தீர்ப்பை வழங்கி வந்தார்.
அந்த சமயத்தில் பள்ளப்பட்டி திருச்சி ஜில்லா போர்டு கட்டுப்பாட்டில் இருந்தது..
அப்போது திருச்சி ஜில்லா கலெக்டர் பள்ளப்பட்டிக்கு ஒரு முறை விஜயம் செய்தார்.
ஜில்லா கலெக்டரை ஊரின் முக்கியஸ்தர்கள் எழுந்து நின்று மரியாதை செய்து வரவேற்றனர்.
ஆனால் மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் வயது முதிர்சியின் காரணமாக எழுந்து நிற்க முடியாமல் கலெக்டரை உக்கார்ந்தே வரவேற்றார்.
ஜில்லா கலெக்டருக்கு நாட்டாமை தன்னை எழுந்து நின்று வரவேற்காமல் உக்கார்ந்த நிலையிலேயே வரவேற்றது பிடிக்க வில்லை.
இவர் தன்னை அவ மறியாதை செய்து விட்டார் என்று கோபப்பட்டு கோர்ட்டில் கேஸ் போட்டு விட்டார்.
வழக்கு கோர்டுக்கு போய் மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு சம்மன் அனுப்பி இவர் கோர்ட் சென்று நீதிபதி முன் நின்றார்.
விசாரனை செய்த வக்கீல் ஜில்லா கலெக்டர்க்கு உக்கார்ந்த நிலையிலேயே நீங்கள் வரவேற்பு கொடுத்தது தவறு என்று சொல்ல மணியம் ஹிதாயத்துல்லா அவர்கள் நான் வயதானவன் என்னால் எழுந்து நிற்கமுடியவில்லை வேறு எந்த காரணமும் இல்லை என்று வாதம் செய்தார்.
மேலும் ஜில்லா கலெக்டர் வந்தால் எழுந்து நின்று தான் வரவேற்க வேண்டும் என்று சட்டமும் இல்லை அது ஒரு மரபே தவிர சட்டம் இல்லை என்று வாதாடி வெற்றி பெற்று வந்தார்.
அன்னார்அவர்களின் கபரும் அதே வளாகத்தில் உள்ளது.
-+++++++++++++++++++++
மஹான் அவர்களின் சீடர் மணியம் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நினைவாகவே உருஸ் நேரத்தில் இரண்டாம் கூடு தூக்கப்படுகிறது.
அதை முன் நின்று நடத்துபவர்கள் மணியம் வகைராவை சார்ந்தவர்கள் அதன் காரணமாகவே இரண்டாம் கூடுக்கு மணியார் கூடு என்று அழைக்கப்படுகிறது.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱