❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀
*நம்ம ஊர் மதரஸா*
❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀❀
அஸ்ஸலாமு அலைக்கும்.
உலகம் பல சரித்திர வடுக்களை இம் மண்ணில் பதிய வைத்து தன் தேகத்தை தொட்டில் கொண்டு தாலாட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறது.
அதே வரிசையில் நமதூரின் பல சரித்திர வடுக்களையும் பதித்து வைத்துள்ளது.
அதில் பல சரித்திரங்கள் கால சூழலில் மறைந்து விட்டது.
சில சரித்திரங்கள் காலங்கள் கடந்தும் கம்பீரமாக தொடரவும் செய்கிறது.
அப்படி தொடரும் சரித்திரங்களில் ஒன்று நமதூர் பெரிய மதரஸா என்று அழைக்கப்படும் மக்தூம்மியா அரபி கல்லூரி இக் கல்லூரியை பற்றி பள்ளபட்டியை சார்ந்த ஒவ்வொரு இஸ்லாமியரும் அறிந்து உணர்ந்து செயல்பட வேண்டிய கடமை நமக்குள்ளது.
நமதூரின் பாரம்பரியமிக்க பெரிய மதரஸா என்று கண்ணியத்துடன் அழைக்கப்படும் மக்தூமியா அரபி கல்லூரி தோன்றிய வரலாறு பெரும் பாலோர் அறியா வண்ணம் புதைந்து கிடக்கிறது,
இம் மதரஸா யாரோ ஒருவர் ஆரம்பித்தார் எப்படியோ நடைபெறுகிறது என்று கருதாமல் இதன் தொடக்கத்தை அறிந்து
பள்ளப்பட்டியை சார்ந்த ஒவ்வொரு இஸ்லாமியரும் இம் மதரஸாவின் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம்.
காரணம் இம் மதரஸா அமைந்த பகுதி நமதூர் பொது கபரஸ்தானுக்கு மிக அருகில் இங்கிருந்து ஒதப்படும் குர்ஆனின் வார்த்தைகள் நம் முன்னோர்கள் அடங்கபெற்றுள்ள இடங்களில் எதிரொலித்து அவர்களுக்கு அமைதியை தருகிறது.
மேலும் இம் மதரஸா இறைநேசர்களால் உருவாக்கப்பட்டது.
இவர்களின் துவாவும்
இம் மதரஸாவில் இருந்து ஓதி வெளிவரும் அனைவர்களின் துவாவும் நமதூருக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
அதன் காரணமாகவே நாம் செழிப்புடன் வாழ்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
இன்று எத்தனையோ அரபிகல்லூரிகள் வந்தாலும் பாரம்பரியமிக்க இக் கல்லூரியின் சேவைகளை எளிதில் கடந்து விடமுடியாது.
மகத்துவம் வாய்ந்த அந்த மதரஸாவின் வரலாற்றை இன்ஷா அல்லாஹ் அதன் வளர்சிக்கு உறுதுனையாக இருப்போம் என்று உறுதி கூறி அதன் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.
≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐
பள்ளப்பட்டியின் பாரம்பரியமிக்க பெரிய மதரஸா என்று அழைக்கப்படும் மக்தூமியா மதரஸாவின் வரலாறு.
≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐≐
17 ம் நூற்றாண்டில் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் ஜமீன் ஆத்தூரில் பிறந்து வளர்ந்து குக்கிரமமாக திகழ்ந்த பள்ளப்பட்டிக்கு தன் இருப்பிடத்தை மாற்றி தன் பொற்பாதங்களை இம் மண்ணில் பதித்தார்.
அன்றைய நூற்றாண்டில் மக்கள் அடிமைகளாகவும், பெண்கொடுமை, வஞ்சகம் , சூழ்ச்சி , என பல இன்னல்களில் சூழ்ந்திருந்தனர். அன்னார் அவர்களின் நற் போதனையால் மக்கள் இஸ்லாத்தின் பக்கம் பார்வையை செலுத்தி இஸ்லாத்தில் இனைந்தார்கள்.
பல ஊர்களில் வசித்து வந்த மஹானின் சீடர்கள். அவர்களின் அன்பின் காரணமாக பள்ளப்பட்டியில் குடியேறி வாழத்துவங்கினர்.
அதன் பிறகு பள்ளபட்டி இஸ்லாமியர்கள் நிறைந்த ஊராகமாறியது. மஹான் அவர்களின் போதனையை ஏற்றும்.,
அவர்கள்மூலமாக மார்க்க கல்வியை அறிந்தும் நல் அமல்கள் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் மஹான் அவர்கள் காலத்திற்கு பிறகு மஹான் ஷேக் அப்துல்காதிர் வலியுல்லாஹ் அவர்களின் பேரரான புது சாஹிபு என்கிற ஷாஹ் முஹம்மது அப்துல் அஜீஸ் சாஹிப் ஹஜரத் அவர்கள்.
கி.பி1834 ல் பள்ளப்பட்டியில் பிறந்தார்கள்.
தன் இளம் வயதிலேயே ஹஜ் செய்ய நாடி ஹஜ் பயணம் புறப்பட்டார்கள்.
அவர்கள் மக்கா அடைந்து ஹஜ் கடமையை முடித்து அங்கு உள்ள மதரஸாக்களை பார்வையிட்டார்கள்.
அதில் மனம் ஈடுபட்டு
ஹரம் ஷரீபில் நடைபெறும் பகுதி நேர வகுப்புகளிலும் பின்னர் புனித மக்க முக்கராமாவில் உள்ள சவ்லாத்தியா அரபி மதரஸாவில் சில ஆண்டுகளும்.
(பிற்காலத்தில் அஃலா ஹஜரத் அவர்கள் இங்குதான் பயின்றார்கள்)
ஆக மொத்தம் பத்து ஆண்டுகள் மக்காவில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களிடம் ஓதி முடித்து அவர்களிடமே தீட்சை (பையத்) பெற்று
இறைவலிமை பெற்ற ஷேக்காக
தாயகம் திரும்பினார்கள்.
அவர்கள் தாயகம் திரும்பி தான் கற்ற மார்க்க கல்வியை தமிழகமெங்கும் பரப்ப புனித பயணம் மேற்கொண்டார்கள்.
அந்த பயணத்தில் அனேகமானவர்கள்
இவர்களின் போதனையால் இஸ்லாத்தை தழுவினர்.
மேலும் ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பவர்களும் இவரிடம் தீட்சை [பையத்] பெற்றனர்.
இதில் குறிப்பிடும் படியாக
இருவர்கள் ஒருவர் கம்பம் உத்தமபாளையம் பகுதிகளில் பிரசித்தி பெற்ற மாபெரும் வீரராக.
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முஸ்தபா சாகிப். என்பவரும்.
மாபெரும் வணிக வள்ளலாக திகழ்ந்த காயல் பட்டிணம்மக்தூம் மரைக்காயர் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவ்விரு பெரியார்களும் புது ஷாஹிபு அவர்களின் மீது மாறாத அன்பு கொண்டு அவர்களுக்கு எதையும் செய்யும் நிலையில் இருந்தனர்.
இந்த இருவர்களும் புது சாஹிபு ஹஜரத் அவர்கள் அருகிலேயே வாழ்ந்து மறைய வேண்டும் என்று பள்ளப்பட்டிக்கு குடி அமர்ந்து புது சாஹிபு அவர்களின் அருகிலேயே வாழ்ந்துஅவர்கள் கட்டளைக்கு அடி பணிந்தார்கள்.
இந்த நிலையில் அப்போது பள்ளப்பட்டியில் உலக கல்வியை போதிக்க தின்னை பள்ளிக்கூடங்கள் ஒன்றிரன்று இருந்தது ஆனால் மார்க்க கல்வியை போதிக்க மதரஸா என்று ஏதும் இல்லாத கால கட்டம்.
மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் காலத்தில்.
பள்ளப்பட்டி அருகில் உள்ள ஜமீன் ஆத்தூரை சார்ந்த பிரபல பாக்கு வணிகரும் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி சாஹிப் அவர்களின் நிதி உதவியில் கட்டப்பட்ட மேற்கு பள்ளி மட்டுமே இருந்தது.
( பெரிய பள்ளிவாசல் ௭ பாவா ஃபக்ருதீன் டிரஸ்ட் )
அதன் அருகிலேயே உள்ள காலி இடத்தில் மதரஸா ஒன்று ஏற்படுத்தி மார்க்க கல்வி போதிக்கலாம் என்ற எண்ணத்தில் தன் சீடரான மக்தூம் மரைக்காயர்அவர்களிடம் புது சாஹிபு ஹஜரத் அவர்கள் ஆலோசித்த வேலையில் மக்தூம் மரைக்காயர் அவர்கள் தன் செல்வம் முழுவதையும் மதரஸாவிற்கு அற்பணி்க்க முன் வந்து அம் மதரஸாவிற்கு அவர் சுமார் 9700 ரூபாய் மதிப்புள்ள (இன்றைய நிலையில் பல கோடிகள் மதிப்புமிக்க ) தென்னந்தோப்பினை வாங்கி....
அதன் மூலம் வரக்கூடிய மாத வருவாய் ஐம்பதிலிருந்து மதரஸாவை நடத்தலாம் என்று எண்ணி இந்த இருவர்கள் முழு முயற்சியுடன் கூரை கொட்டகை அமைத்து 1872 (ஹிஜ்ரி 1289) ம் ஆண்டு திருக்குர்ஆன் மதரஸாவை நிறுவி உள்ளூர்காரர்களுக்கு ஓதி கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.
அந்த சமயம் நிறுவனராகவும் முதல் ஆசிரியராகவும் உள்ள புதுசாஹிபு அவர்களுக்கு ஆண்டு ஊதியம் நூறுரூபாய் தரப்பட்டது.
மதரஸாவிற்கு தொடர்ந்து மாணவர்கள் சேர்ந்து மார்க்க கல்வியை கற்று வரும் நேரத்தில் பொருளாதார தேவைக்காக அரசின் உதவியை நாடி மனு செய்தனர்.
அம்மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை மாகான அரசு கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்ட மாகானத்தின் ஐந்தாம் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்த.
W.R.கெர்ஷா(W.R.Kershaw)
என்பவரை அப்பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பணிந்தது அரசு உத்திரவுபடி பள்ளபட்டி முஹம்மது மக்தூம் மரைக்காயர் அவர்களின் பள்ளியினை ஆய்வு செய்த ஆய்வாளர் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
இவ்வறிக்கையில் மேல் நடவடிக்கை எடுத்த கல்வித்துறை மார்க்ககல்வி உலக கல்வி இரண்டையும் ஒருசேர இங்கு கற்பிப்பதால் துறையின் கீழ் நிதி வழங்க முடியாது என்றும் உலக கல்வி மட்டுமே கற்பித்தால் நிதி வழங்க முன்வரும் என்று பதில் வந்தது.
ஆனால் முஹம்மது மக்தூம் மரைக்காயர் அவர்கள் மார்க்க கல்வியை விட்டு உலக கல்வி மட்டும் கற்பிக்க முடியாது என்று பதில் கொடுத்ததால் அன்று அரசு நிதி பெறாமல் போனது.
(நன்றி:- தகவல் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி பொன் விழா மலர்)
இப்பள்ளியில் இரு வகை கல்வியும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்பித்து உள்ளனர்தொடர்ந்து
மக்தூமியா மதரஸா வளர்சி பாதையை நோக்கி செல்லும் வேலையில் வெளியூரில் இருந்தும் மாணவர்கள் வரத்துவங்கினார்கள்.
இதை கவனித்த மக்தூம் மரைக்காயர் அவர்கள் மேலும் நிதி உதவி செய்து கூரைக்கொட்டகையை கான்கிரீட் கட்டிடமாக மாற்றினார்.
மாணவர்கள் சேர்க்கையும் அதிகமான காரணத்தினால் நிதி பற்றாக்குறை மேலும் அதிகமானது.
அவர்களது உணவுக்காக நிதி தேவைபட்ட சமயம் மக்தூம் மரைக்காயர் தனது நிதியில் இருந்து தொடர்ந்து வழங்கினார்.
ஒரு கட்டத்தில் மக்தூம் மரைக்காயர் அவர்களிடம் இருந்த நிதிகள் அனைத்தும் காலியாகி மாபெரும் செல்வந்தராக இருந்தவர் ஏழையாகி விட்டார்.
தொடர்ந்து மதரஸாவை நடத்த நிதி தேவை.
அடுத்து என்ன செய்வது யாரிடம் உதவி வாங்குவது என்ற தீவிர யோசனையில் மக்தூம் மரைக்காயர் அவர்கள் மதரஸாவின் எதிரே அமர்ந்து கவலையுடன் இறைவனிடம் கையேந்திய நிலையில் அன்றைய வருடம் பக்ரீத் பெருநாள் வந்தது அன்றைய நாட்களில் குர்பானி கொடுக்கும் ஆடுகளின் தோல்களை பயன் படுத்தும் முறை தெரியாமல்.
ஆற்றோரத்தின் வேலிகளின் மேல் தூக்கி எறிந்து விடுவார்கள்.
நாய் நரிகள் இழுத்துக்கொண்டு போனது போக மீதியை ஆற்றுநீர் அடித்துக்கொண்டு சென்று விடும்.
சிறந்த வணிக வள்ளலாக திகழ்ந்த மக்தூம் மரைக்காயர் அவர்கள் இதை கவனித்தார்.
திடீர் என இவர் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
ஆம் அந்த எண்ணம்..
அது மிகவும் அறிவுடைமையான நீடித்து நிலைத்து நிற்கும் படியான தமிழகத்துக்கே முன்னோடியான சிறந்த மிகச் சிறந்த ஏற்பாடாகும்.
ஆம் அந்த சிறப்பான ஏற்பாடு தான்
அது....
அன்றிலிருந்து இன்று வரை
தொடர்ந்து மதரஸாக்கள் நடத்த மிகவும் உபயோகமான செயலாக விளங்குகிறது.
வணிக வள்ளலாக திகழ்ந்த மக்தூம் மரைக்காயர் அவர்கள் அந்த தோல்களை மதரஸாவில் கொண்டு வந்து போடும் படி கூறினார்கள்.
தூக்கி எறியும் தோல்களை இவர் மதரஸாவில் கொண்டு வந்து போட சொன்னது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது இருந்தாலும் பெரியவர் பேச்சை மறுக்கமுடியாமல் மக்கள் அனைவர்களும் தோலை மதரஸாவில் கொண்டு வந்து போட்டனர்.
முதல் வருடமே பலநூறு தோல்கள் சேர்ந்தன அதை பக்குவப்படுத்தி திண்டுக்கல் சென்னை போன்ற ஊர்களில் விற்பனை செய்தார்கள்.
அது சமயம் பிரிட்டீஷ் ஏகாபத்திய அரசு இந்தியாவில் இருந்த படியால் லண்டன் சந்தைகளில் கூட பள்ளபட்டி குர்பானி தோல்கள் விற்கப்பட்டது.
அந்த குர்பானி தோலுடைய வருமானத்தைக்கொண்டு வெளியூர் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஒரு தோல் 1 தம்படி
(1 ரூபாயில் 200-ல் ஒரு பங்கு)க்கு விற்பனை ஆகும்.
அந்தகாலத்தில் துவங்கப்பட்ட அந்த திருப்பணி 150 ஆண்டுகளை
கடந்தும் இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
முதன் முதலில் பள்ளப்பட்டியில் துவங்கப்பட்ட அந்த ஏற்பாடு.
அதன் பிறகு தான் தமிழகமெங்கும் உள்ள மதரஸாக்கள் தோலை வசூலிக்கதொடங்கினர்.
பின்னர் மேலும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டபோது பிடி அரிசி திட்டமும் கொண்டு வரப்பட்டது.
பிடி அரிசி திட்டம் என்பது...
ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு துணிப்பையை கொடுத்து அவர்கள் தினசரி சமைக்கும் போது எடுக்கும் அரிசியில் ஒரு கைபிடி அரிசியை இப்பையில் போட்டுவிடவேண்டும்.
வாரம் ஒரு முறை அப்படி சேர்ந்த அரிசியை மதரஸா மாணவர்கள் வாங்கி வந்து அதன் மூலமாக தங்களின் உணவு தேவையை நிறைவு செய்வார்கள்.
அன்னலம் பெருமானார் (ஸல்)
அவர்கள் மவ்லீது நடத்தவும் வலிகள் கோமான் முஹையந்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் மீது கந்தூரி செய்யவும் புது சாஹிபு அவர்கள் விரும்பியபோது பெரிய மதரஸா கந்தூரி கமிட்டி அமைக்கப்பட்டு விசேங்களுக்குபாத்திரங்கள் சேர்கள் வாடகைக்குவிடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆண்டு தோறும் விமர்ச்சையாக கந்தூரி கொண்டாடப்பட்டது.
அன்னார் அவர்களின் துவாவினால் கந்தூரி கமிட்டி இன்றுவரை உயிர்ப்புடன் செயல் படுகிறது.
(முதன் முதலில் விஷேசங்களுக்கு பாத்திரங்கள் சேர்கள் வாடகைக்கு விடும் பழக்கம் நமதூரில் தான் கந்தூரி கமிட்டி மூலமாக செயல்படுத்தப்பட்டது
அதன்பிறகே மற்றவர்கள் இதை நடைமுறைப்படுத்தினார்கள்)
12ம் மவ்லீது ஓத இடம் பற்றாக்குறை ஏற்பட்டபோது புது சாஹிபு அவர்களின் நெருக்கமான சீடர் மணியக்காரர்களால் மக்தூமியா மதரஸாவில் மாடி அன்றைய காலத்தில் கானாவாக கட்டப்பட்டது.
மவ்லீது ஓதும் பொழுது மட்டும் திறக்கப்பட்டு மற்ற நாட்களில் அது பூட்டியே கிடக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்தூமியா அரபி கல்லூரி விரிவு படுத்த சமயம் மணியக்காரர்கள் கட்டிக்கொடுத்த அந்த மாடியை இடிக்காமல் அதன் மீது இன்னொரு மாடி எழுப்பும் அளவு வலுவான முறையில் கட்டி இருக்கிறார்கள்.
சரீரமும் சாரிரமும் வாய்க்கப்பெற்ற சிம்மக்குரலும் புஜ பலமும் பொருந்திய மறப்போர் வீரர் போன்ற தோற்றமும் கொண்ட புது சாஹிபு அவர்கள் அங்கு நாற்பது ஆண்டுகள் பணியாற்றி.
தனது 88 வது வயதில் கி.பி 1912 ல்
பொய்யுலகை விட்டு மெய்யுலகை அடைந்தார். (இன்னாலில்லாஹி......)
இவர்களது பொன்னுடல் தனது பாட்டனார் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்கள் தர்ஹா வளாகத்தில் அவ்லியாவின் நேர் மேற்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
புது சாஹிபு அவர்களின் மறைவுக்குப்பின்பு
சரியான ஆசிரியர்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் கல்வி கற்பிக்கும் பணி சில காலம் தடைபெற்றிருந்தது.
புது சாஹிபு ஹஜரத் அவர்களின் பேரர்
அறிஞருள் ஆதவன் ஷாஹ் முஹம்மது அப்துல் அஜீஸ் சாஹிபு (அரபிஹஜரத்) அவர்களை அணுகிய
பள்ளபட்டி ஊர் பெருமக்களில் சிலர் தங்கள் பாட்டனார் விட்டு சென்ற பணியைத் தாங்கள் நிறைவு செய்யுங்கள் என்று அன்புக்கட்டளையிட்டதை ஏற்றார்.
அரபி ஹஜரத் அவர்கள் எப்பொழுதும் எவரிடமும் கடிந்து பேச மாட்டார்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள்.
மார்க்க தீர்ப்புக்கலையில் சிறந்து விளங்கினார்கள் தன்னலம் கருதா இம் மேதையை பள்ளபட்டி மதரஸாவில் பணி புரிய அழைத்த சமயம் அப்போது இவர்களுக்கு கூத்தாநல்லூர் மதரஸாவில் சாப்பாட்டு மற்றும் போக்குவரத்து சிலவுகளும் கொடுக்கப்பட்டு வருடம் ஒன்றுக்கு ரூபாய் 400 ம் ஊதியமாக கொடுக்கப்பட்டு வந்தது.
அப்படி இருந்தும் தன் சொந்த ஊர் மதரஸாவில் எந்தவித சிலவு தொகைகளையும் பெற்றுக்கொள்ளாமல் வருடம் ஒன்றுக்கு 360 சம்பளம் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டு பணியாற்றிய இவர்கள்.
1928-ல் பள்ளபட்டி பெரிய மதரஸா என்று அழைக்கப்படும் மக்தூமியாவில் ஆசிரியராக பொறுப்பேற்று 1963-ம் வருடம் வரை அதாவது 35 ஆண்டுகள் மார்க்க கல்வியை போதித்து வந்தார்கள்.
ஷாஹ் முஹம்மது அப்துல் அஜீஸ் சாஹிபு (அரபிஹஜரத்) அவர்கள் இங்கு ஆசிரியராக பதவியேற்க்கும் போது லால் பேட்டை ஈன்றெடுத்த தவப்பெருமகனார் அல்லாமா கைருல் மில்லத் ஏ.கே. அப்துல்லாஹ் ஹஜரத் (நவ்வரல்லாஹு மகதஹு)
அவர்களே முதல் மாணவராக.
சேர்ந்தார்.
சுமார் 75 ஆண்டுகளுக்குமுன்..
லால் பேட்டையில் இருந்து திண்டுக்கல் வரை எப்படியோ பஸ் ரயில் மூலம் வந்து சேர்ந்து விட்ட. கைருல் மில்லத் ஏ.கே.அப்துல்லாஹ் ஹஜரத்
அவர்களுக்கு அங்கிருந்து பள்ளபட்டிக்கு செல்ல நடராஜா பஸ் சர்வீஸை தவிர வேறு எதுவும் வழி இப்பதாக தெரியவில்லை.
சுமார் 32 மைல்கள் 4 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து தமது ஆன்மீகத் தந்தையை கண்டு அளவில்லா மகிழ்சி அடைந்தார்கள்.
அங்கேயே தன் ஆன்மீகப் பாதையின் முதலாம் பாடத்தினைத் துவங்கினார்கள்.
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அரபி ஹஜரத் அவர்களிடம் கல்வி கற்ற.
பலர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்கள் இன்றும் விளங்குகிறார்கள்.
அவர்களில் குறிப்பாக காலம் சென்ற உத்தமபாளையம் அல்லாமா அபூபக்கர் ஹஜரத் அவர்களும்.
பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்திலும் கேரளா பட்டிக்காடு அந்நூரியா மதரஸாவிலும் காயல் பட்டினம் மதரஸாக்களில் முதல்வராகவும் மன்பஉல் அன்வார் அல் மஹல்லரத்துல் காதிரியா நாஜிராகவும் பணியாற்றிய.
அல்லாமா அப்துல்லாஹ் ஹஜரத் அவர்களின் தமையனார் அல்லாமா முஹம்மது இப்ராஹீம் ஹஜரத் போன்றோர் இவர்களுடைய மாணவச்செல்வங்களே ஆவார்கள்.
தேவ்பந்த் ஹஜரத் கிப்லா என்று அழைக்கப்படும் மௌலவி
என்.எம். முஹம்மது இப்ராஹீம்.
ஹஜரத் அவர்களும் மேற்கு மதரஸாவில் அரபி ஹஜரத் அவர்களிடம் அரபி கல்வியை 4 ஆண்டுகள் கற்றவர்களே.
அரபி ஹஜரத் அவர்கள் அதன் பிறகு அதை அரபி கல்லூரியாக மாற்றி அங்கு
பணியாற்றினார்கள்.
அவர்கள் காலத்திலேயே அவர்களுடைய மூத்த மகன் மௌலானா மௌலவி முஹம்மது ஸாலிஹ் பாஜில் பாகவி அவர்களும்.
புது சாஹிபு அவர்களின் இன்னோரு பேரர் ஷாஹ் அப்துல் காதிர் ஆலீம் பாகவி அவர்களும்இடை இடையே மூன்றாண்டுகள் பணியாற்றினார்கள்.
அரபி ஹஜரத் அவர்கள் தன் 70வது வயதில் 1971 ஜுலை 19-ல் ஹிஜ்ரி 1391
ஜமாதுல் அவ்வல் பிறை 25-ல்
(19-7-1971)காலமானார். (இன்னாலில்லாஹி)
இவர்களின் குடும்ப பாரம்பரிய வழக்கப்படி பாட்டனார் ஷைய்கு அப்துல் காதிர் (ரஹ்) அவர்களுடைய தர்ஹாவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அரபி ஹஜரத் அவர்களின் மறைவுக்குபின் அவர்களின் கடைசி மகன் மௌலவி ஷாஹ் முஹம்மது இப்ராஹீம் பாகவி நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்கள்.
அரபி கல்லூரி ஆரம்பிக்கபட்டபின்பும் கூட குர்ஆன் மதரஸா நடந்து வந்தது.
அதில் புதுசாஹிபு அவர்களின் பேரர்கள் மௌலானா மௌலவி ஷாஹ் அப்துல் ஹமீது பாகவி சைதா முஹம்மது ஹஜரத் அவர்கள் ஆறாண்டுகளும்
இன்னொரு பேரர் அப்துல் அஜீஸ் சாஹிப் எட்டாண்டுகளும் தனது அந்திமக் காலத்தில் பணியாற்றினார்கள்.
கடைசியாக புது சாஹிபு அவர்களுடைய பேரர் சதாத் சாஹிப் அவர்களின் மகன் முஹம்மதுஇஸ்மாயில் பாகவி 6 ஆண்டுகள் பணிபுரிந்தார்கள்.
புது சாஹிபு அவர்கள் காலத்திற்கு பின் பணியாற்றிய அவருடைய மகனார் ஷாஹ் முஹம்மது யூசுப் சாஹிப் காதிரி ஹஜரத் அவர்களது காலத்தில் நிறைய மாணவர்கள் சேர்ந்ததினால்.
ஆத்தூர் வெள்ளையப்பா சாஹிப் வகைரா அப்துல் லத்தீப் காதிரி (சின்ன பள்ளி நிறுவனர்) பணியாற்றினார்கள்.
பிறகு காயல் பட்டினம் பகுதியில் இருந்து வந்த புகாரி ஷாஹிப் பணியாற்றினார்கள் (இவர் குத்துப்புதீன் தர்ஹாவின் வெளி வாளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.)
அரபி ஹஜரத் அவர்கள் காலத்தில் நடைபெற்று வந்த குர்ஆன் மதரஸாவில் அன்னம்பாரி ஆஸ்முஹம்மது ஹஜரத் கதீப் லெப்பை அப்துல் கபூர் ஹஜரத் ஆகியோரும் பணியாற்றி உள்ளார்கள்.
கடந்தசில ஆண்டுகளுக்கு முன்
சதீதுதீன் பாஜில் பாகவி அவர்களும் சில ஆண்டுகள் இங்கு பணியாற்றி உள்ளார்கள்.
இம் மதரஸாவில் பணியாற்றிய அனைவர்களும் சாதாரனமானவர்கள் இல்லை கைதேர்ந்த மார்க்க அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிப்ழுப் பிரிவும் ஏற்படுத்தி 1981 ஆம் துவக்கப்பட்டு முதல் பட்டமளிப்பு விழா 1984 (ஹிஜ்ரி 1405) ஆண்டு முதல் ஹிப்ழு பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸனதும் கொடுக்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு தஹ்ஸீல் மதரஸாவாக ஆக்கப்பட்டு மௌலவி ஆலீம் பட்டமும் 1993 (ஹிஜ்ரி 1414)
முதல்கொடுத்து தொடர்ந்து தஹ்ஸீல் மதரஸாவாக இயங்கி வருகிறது.
அன்று முதல் அந்த கலா ஞான பீடத்தில் இன்று வரை பல நூறு மாணவர்கள் பயின்று பல்வேறு துறைகளில் மேதைகளாக ஞானம் பல கற்ற மெய்ஞானிகளாக பணியாற்றி வருகின்றனர்.
சிலர்களோ இறையடி சேர்ந்து விட்ட நல்லடியார்களாக ஆகி விட்டனர்...
இந்த மதரஸா மகத்துவமிக்க இறை நேசர்களால் உருவாக்கப்பட்டது.
அதன் காரணமாக இங்கு இதுவரை பயின்ற இப்போது பயிலும் இனி பயிலபோகும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களின் துவா தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
இதனால் இங்கு பயின்றவர்கள் இதுவரை சோடைபோகவில்லை மேலும் மேலும் உயர்வடைந்து சமூகத்தில் தலை நிமிர்ந்து செல்வதை காணலாம்.
அரபி ஹஜரத் அவர்களிடம் ஓதியவர்கள் மதரஸாவில் பாடம் நடத்துபவர்களாகவும் பெரும்பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள்.
அரபி ஹஜரத் அவர்கள் காலத்தில் கேரளாவில் இருந்து வந்து பல மாணவர்கள் இம் மதரஸாவில் பயின்றுள்ளார்கள் அப்போது கோட்டா அடிப்படையில் மாணவர்களை சேர்த்துள்ளார்கள்.
அதாவது பாதி மாணவர்கள் கேரளாவை சார்ந்தவர்களாகவும் பாதி மாணவர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்று கோட்டா அடிப்படையில் மாணவர்களை சேர்த்து பாடம் நடத்தி உள்ளார்கள்.
இங்கு கல்விபயின்றவர்கள் இன்றும் கேரளா முழுவதும் பரவி இமாமத் பணி செய்துவருகிறார்கள்.
மேலும் இம் மதரஸாவில் ஓதக்கூடிய ஓவ்வொரு மாணவர்களுக்கும்.
அரபி ஹஜரத் அவர்களின் விஷேச துஆ உண்டென்று அவர்களிடம் ஓதிய மாணவர்கள் அனுபவப்பூர்வமாக கூறுகின்றனர்.
இம் மதரஸாவிற்கு பெரிய பெரிய ஆலீம்கள் மார்க்க மேதைகள் வந்து சென்றும் இருக்கிறார்கள்.
அவர்கள் பாதம் பட்ட இம்மதரஸாவில் பயிலும் மாணவர்கள் எக்காலத்திலும் வெற்றியே பெறுவார்கள். என்பது நிஜம்.
ஆலீமாவதற்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.
பள்ளபட்டியில் இருந்து அரபி ஹஜரத் அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனே எந்த பரீட்சையும் இல்லாமல் அடுத்த ஜும்ராவில் சேர்த்துக்கொள்வார்கள்.
அந்த அளவு இம் மதரஸாவின் மீதும் அதன் ஆசிரியர் அரபி ஹஜரத் அவர்கள் மீதும் நம்பிக்கை.
அரபி ஹஜரத் அவர்களில் மாணவர்களில் விசேஷ மானவர்கள் பலர் அதில் ஒருவர்...
காலஞ்சென்ற நஹ்வீ பாகவி என்று பெயர் பெற்ற மௌலானா மர்ஹூம் அப்துல் ஷுக்கூர் ஹஜரத் பாகவி அவர்கள் கொடுவாயூர் என்பது இவர்களின் சொந்த ஊராகும்.
இவர்கள். பள்ளபட்டி. சேலம். மேட்டுப்பாளையம். கோவை. ஆகிய ஊர்களில் உஸ்தாதாக சேவையாற்றியுள்ளார்கள்.
இவர்களைபோல் இம்மதரஸாவில் பயின்ற எத்தனையோ ஹாபீஸ்கள் ஆலீம்கள் தமிழகமெங்கும் இமாமத் பணி செய்து பெயரோடும் புகழோடும் வாழ்வதை நாம் பார்க்கிறோம்.
அரபி ஹஜரத் அவர்களின் பாட போதனைகளில் அந்த அளவு குறிப்பிட்ட விசயங்கள் மகத்துவம் வாய்ந்தது.
அக் காலத்தில் இம் மதரஸாவில். அபூர்வ மான அரபி கித்தாபுகள் எல்லாம் இருந்துள்ளது.
இதை கேள்விப்பட்ட பெரிய பெரிய உலமாக்களில் பலர் இங்கு வந்து அக்கிதாபுகளில் இருந்து பயன் பெற்று சென்றுள்ளார்கள்.
" அல்ஜாமிஉல் கபீர்"
என்ற நூல் இருக்கிறது என்று கேள்விப்பட்டு லால் பேட்டை அமானி ஹஜரத் கூட இங்கு வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒரு உஸ்தாதுக்கு "கத்ருன்னாதா"
எனும் கிதாபில் இரண்டு விசயங்கள் விளங்கவில்லை.
அதற்கு ஓர் அரிய விளக்கஉரை இங்கு இருக்கிறது என்று கேள்விப்பட்டு இங்கு வந்து அக்கிதாபை பார்த்த பின்புதான் தெளிவு கிடைத்ததாக கூறுகிறார்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
அடுத்து முதன் முதலில் கூட்டுக்குர்பானி என்ற திட்டத்தை நமதூரில் அறிமுகபடுத்தியதும் இம் மதரஸாவே.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
பேரூரில் கூட்டு குர்பானியின் தோற்றம் பல வருடங்களுக்கு முன் மார்க்க ஞானம் குன்றிப்போய் குறுமதியாளர்கள் தலையெடுத்திருந்த சமயத்தில் நமது மாண்பறு மக்துமியா பெரிய மதரஸாவின் பேராசிரிய பெருமக்கள் ஒன்றினைந்துஒரு குர்பானி மாடு வாங்கும் நோக்கில் மாடு வாங்கி விற்கும் நமது இஸ்லாமிய பெரியவர் ஒருவரிடம் சென்ற போது.
மெலிந்த பல மாடுகளுக்கு மத்தியில் பெரிய வண்டி மாடு ஒன்றை கண்டனர்.
கண்ணியமிகு உஸ்தாதுமார்கள் அது பற்றி வினவ மாட்டுக்காரர் இது கூறுக்காக உள்ள மாடு என பதில் கூறினார் அந்த மாடு சுமார் 100 கிலோவைத்தாண்டும்.
கூறு என்றால் என்ன என்று வினவியபோது ஒரு மாட்டுக்கு ஏழு பங்கு என்பதை மாற்றி ஒரு பங்குக்கு ஏழு கிலோ எனக் கூறினார்.
இன்னும் சற்று விசயத்தை கிளறியபோதுதான் பல்வேறு அதிர்சியான தகவல்கள் மனதை அதிரவைத்தன.
1 ஒரு பெரிய கொழுத்த மாட்டை வாங்கி பங்குதாரர்கள் எண்ணிக்கை நிர்ணமின்றி ஒரு மாட்டின் 10 க்கும் மேற்பட்டோர் கூட கூட்டுச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 பெயர் கூறி அறுக்கப்பட வேண்டியதின் அவசியம் அறியப்படாமல் இருந்தது.
3 மொத்தத்தில் நபருக்கு 7 கிலோ கறி வீடு வந்து சேரும் அத்துடன் தன் கடமை கழிந்தது என்று எண்ணி வைத்திருந்தனர்.
4 குர்பானிதோல் போய் சேர வேண்டிய இடங்களுக்கு போய் சேராது.
இது போல இன்னும் பல மார்கத்திற்கு முரணாவை நிதர்சன நிகழ்வுகளாக நடந்தேறுவதைக் கண்டு மனம் வெதும்பி இம்மதரஸாவின்ஆசிரிய பெருந்தகைகளின் ஆவலும் கனவும் சில ஆண்டுகளாக கலந்தாய்வு செய்யப்பட்டன.
பின்னர் ஏகமனதாக 1996 ஆம் ஆண்டு நம் மதரஸாவின் கண்காணிப்பின் கீழ் ஷரீஅத் சட்ட ஒழுங்கின் படி கூட்டுக்குர்பானி நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு அந்த வருடமே சுமார் 100 மாடுகள் முதன் முதலாக கூட்டுக்குர்பானி நிறைவேற்றப்பட்டது.
அல்லாஹ் வின் அருள் நாடி தொடங்கப்பெற்ற கூட்டுக்குர்பானி.
திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் வாழ்த்தையும் பெற்றுத்தந்தது.
இந்த கூட்டுக்குர்பானி திட்டத்தை மதரஸாவே நேரடியாக நடத்துகிறது இதில் வரும் வருமானம் மதரஸாவிற்கே சிலவு செய்யப்படுகிறது.
மதரஸா துவக்கிய காலம் முதல் இன்று வரை பஜருக்கு பிறகு தினசரி இம் மதரஸா மாணவர்கள்.
அருகில் இருக்கும் கபரஸ்தானில் அடக்கப்பட்டவர்களுக்காக யாசீன் ஓதி ஹதியா செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
மேலும் இம் மதரஸாவில் இருந்து தொடர்ந்து குர்ஆன் ஓதும் சத்தம் கபரஸ்தானில் எதிரொலித்து.
அங்கு அடக்கப்பட்டுள்ளவர்கள் அதாபுகள் லேசாவதாக பெரியோர்கள் சொல்கிறார்கள்.
முன்பெல்லாம் வாழ்ந்த பெரியவர்கள்.
தாங்கள் மரணித்தால் மதரஸாவின் மிக அருகில் தன்னை அடக்கம் செய்யுங்கள்.
அங்கு இருந்து வரும் குர்ஆன் ஓதும் சத்தத்தை கேட்டுக்கொண்டே நான் இருக்கவேண்டும் என்று வஸியத் செய்து மரணிக்க செய்தவர்களும் இருந்தார்கள்.
பாரம்பரியமிக்க இம் மதரஸா
முழுக்க முழுக்க சுன்னத்துல் ஜமாத் அடிப்படையிலேயே இயக்கப்படுகிறது.
பள்ளப்பட்டி முன்னோர்களின் கொள்கைகளை சற்றும் மாறுதல் இல்லாமல் கடை பிடிக்கப்படுகிறது.
இம்மதரஸா தன் மாணவர்களுக்கு முறைப்படி தொழவைக்கவும்
மேடை பேச்சு பேசவைக்கவும்
தனி கவனம் செலுத்தி பயிற்றுவைக்கிறது.
தமிழகத்தின் தலை சிறந்த மதராஸாக்கள் வரிசையில் இம் மதரஸா விற்கு தனி இடம் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இம்மதரஸா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை கட்டணங்கள் ஏதும் பெறாமல் கல்வி போதிக்கபடுகிறது.
ஒரு சில மாணவர்கள் தங்கள் விருப்பபட்டு கட்டணம் செலுத்தினாலும் அதை அவர்களுக்கே சிலவு செய்யப்படுகிறது சந்தா நன்கொடை போன்றவகளை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க சேவை அடிப்படையிலேயே நடைபெறுகிறது.
விண் முட்டும் தோற்றத்தோடு எழிலாய் காட்சியளித்து இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பது பேர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்மீகத்தாகம் தீர்க்கும் தாடகமாய் விளங்கி வருகிறது.
நூற்றாண்டு களைத் தாண்டியும் தழைத்திருக்கும் ஒரு அர்ப்பணிப்பின் வலிகளை நிச்சயம் இம்மண்ணும் மக்களும் உணர்ந்தே ஆக வேண்டும்
இது காலத்தின் கட்டாயம்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱