மாணிக்க சார் அவர்கள் அமைதியே உருவான தோற்றத்துடன் சிரித்தமுகமாக. இருப்பார்.
மாணவர்களிடம் கண்டிப்புடன் பேசுவதோ அடிப்பதோ கிடையாது.
மாணவர்கள் தவறு செய்தால் மௌனமாக ஒரு பார்வைதான் சப்தநாடியும் அடங்கி போய்விடும்.
ஒரு சில நேரங்களில் மாணவர்களில் யாராவது தவறு செய்தால் அடிக்காமல் சிரித்த முகத்துடன் அந்த மாணவரை அழைத்து தன் அருகே அமர வைத்து.
மாணவர் தோளில் கைப்போட்டு நீ செய்தது தவறு இனி இது போல் செய்ய வேண்டாம் என்று சொல்லி சிறு பரிசு ஒன்றையும் கொடுப்பார்.
அவர் அன்பில் மயங்கிய மாணவன் மறுபடியும் அந்த தவறை செய்யமாட்டான்.
மாணிக்க சார் அவர்களுடன் இனைந்து.
கந்த சாமி ஆசிரியர்
(மோலையான்டி பட்டி) அவர்களும்.
D.பொண்ணையா ஆசிரியர் (மாலமேடு)அவர்களும்
பணியாற்றினார்கள்.
முத்து வாத்தியார் அவர்களிடம் பாப்புலர் மெடிக்கல் அஜீஸ் அவர்களும் இன்ஜினியர் முஹம்மதலி அவர்களும் (கரீம் டாக்டர் அவர்கள் தம்பி) இவர்களுடன் இனைந்து மானிக்சார்அவர்களும் சிறுவனாக தன் தந்தை முத்து வாத்தியார் அவர்களிடமே கல்வி கற்றார்.
அதன் பிறகு திருமலைசாமி (சின்ன ஐயா) அவர்கள் நடத்தினார்.
அவர்களை தொடர்ந்து மாணிக்கம் சார் அவர்கள் நடத்தினார்.
அதன் பிறகு முருகேசன்சார் அவர்கள்
நடத்திக்கொண்டிருக்கிறார்.
மொத்தம் பத்து தலைமுறையினர் இப்பள்ளியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
சாப்பானி வாத்தியார் அவர்கள் மாந்திரீக கலையை கற்றவர் இவர் ஆற்றில் தண்ணீர் ஓடும் போது தண்ணீரில் மிதக்கும் தன்மையை பெற்றவர்.
இவரிடம் இருந்து தொடர்ந்து திருமலைசாமிகவுண்டர் (சின்ன ஐயா)அவர்கள் வரை இவர்கள் கற்ற மாந்திரீக கல்வியை கொண்டு கக்குவான் வலிப்பு நோய் பூச்சிக்கடிகளுக்கு மந்திரித்து கொடுக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள்.
அதன் பிறகு அவர்களின் வாரிசான முருகேசன் சார் அவர்களுக்கு கற்றுக்கொடுக்காமல் அதன் ஓலை சுவடிகளை ராமேஸ்வரம் கடலில் கரைத்து விட்டார்கள்.
முருகேசன் சார் அவர்களுக்கு இதை கற்றுக்கொடுக்காததின் நோக்கம்.
இக் கலையை கற்றவர்கள் மிகவும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் இன்றைய தலைமுறையினால் கட்டுப்பாடுடன் இருக்க முடியாது என்ற நோக்கத்தில் கற்றுத்தரவில்லை.
மாணிக்க சார் அவர்களும்.
நம் ஊர் பிரபலங்களாக திகழ்ந்த E.X.M.L.A ஜப்பார் ஹாஜியார் ஹையப்பா ஹாஜியார் கரீம் டாக்டர். அவர்களும் ஒரே வகுப்பில் சக தோழராக இனைந்து பாடம் கற்றவர்கள்.
மாணிக்சார் அவர்களிடம் இவர்கள் நெருங்கிய நண்பராக கடைசிவரை வலம் வந்தவர்கள்.
கரீம் டாக்டர் அவர்கள் இன்றும் தன் வகுப்பு தோழனிடம் நட்போடு இருக்கிறார்.
மாணிக்சார் அவர்கள் .83 வயது வரை வாழ்ந்து சமீபத்தில் காலமானார்.
1994-95 க்கானமாநில நல்லாசிரியர் விருதை மாணிக்சார் அவர்கள் பெற்றுள்ளார்.
மாணிக்க சார் அவர்கள் சிறுவராக அதே பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போது முத்து வாத்தியார் அவர்களின் மகள் வயிற்று பேரன் செல்லமுத்து சார் அவர்களும் ஜுனியராக அதே பள்ளியில் படித்தார்.
அப்போது அவருடன் இனைந்து நம் மதிப்பிற்குறிய அக்பர் டாக்டர் அவர்களும் தமீம் டாக்டர் அவர்களும் கூட படித்தார்கள்.
அந்த நட்பு இன்றுவரை தொடர்ந்து வாடா போடா என்று இன்றும் அவர்கள் பேசுவதை காணலாம்.
புளியமரத்தெருவில் இயங்கிய பள்ளி வெளிச்சுவற்றில் சிவப்புக்கலர் சுண்ணாம்பு அடித்து இருக்கும்.
உள்ளே வகுப்பரைகள் சதுரமாக நான்கு பக்கமும் இருக்கும் அதில் வகுப்பு வாரியாக மாணவர்கள் தரையில் அமர்ந்து பெண்பிள்ளைகள் தனியாகவும் ஆண் பிள்ளைகள் தனியாகவும் பாடம் படிப்பார்கள்.
பள்ளியின் நடுப்பகுதியில் மண் போட்டு அதில் அரை நெல்லிக்காய் மரம் இருக்கும் அந்த நெல்லிக்கணி மிகுந்த சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
அதை மாணவர்கள் பள்ளி இடைவேலையில் பறித்து சாப்பிடுவார்கள்.
அன்றைய D.O ஷேக் அப்துல் காதர் அவர்கள் இப்பள்ளிக்கு வந்தால் அரைநெல்லிக்கனியை பறித்து மிகவும் விரும்பி சாப்பிடுவார்.
ஆத்தூர் இப்ராஹீம் ராவுத்தர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் எந்த வாடகையும் இல்லாமல் இலவசமாக இயங்கியது அந்த பள்ளி.
குமனன் கரீம் அவர்கள் அந்த காலத்திலேயே இப் பள்ளிக்கு 3000 ரூபாய் நன்கொடை கொடுத்தார்.
ஹபீப் ராஜா அவர்களும் அந்த காலத்தில் மிகப்பெறும் தொகையான பத்து ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார் அதனால் தான் அவருக்கு வள்ளல் ராஜா என்ற பட்டம் வந்தது.
சுல்தார் முஹம்மது அலி அவர்களும் ஹபீப் மன்றமும் இனைந்து மாணவர்கள் உக்காரும் பலகை 50 இலவசமாக கொடுத்துள்ளார்கள்.
அக்பர் டாக்டர் அவர்களின் தந்தை அப்துல் ரஹ்மான் B.A அவர்கள் பள்ளிக்கு எது தேவை என்றாலும் உடனே வாங்கி கொடுப்பார்.
தன் தந்தையை தொடர்ந்து அக்பர் டாக்டர் அவர்களும் இன்றுவரை இப்பள்ளிக்கு உதவி செய்துவருகிறார்.
தமீம் டாக்டர் அவர்களும் தான் படித்த பள்ளியை மிகவும் நேசிக்கிறார்.
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரை இருக்கும் இப்பள்ளியில்
கல்வி இலவசம்.
எந்த கட்டணமும் கிடையாது ஏழை பணக்காரன் வீட்டுப்பிள்ளைகள் அனைவர்களும் ஒரே சமம்.
பள்ளியின் நிர்வாக சிலவுகளை மக்களின் நன்கொடையில் சிலவு செய்வார்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் அரசு கொடுத்து விடும்.
அன்று யூனிபாஃரமும் கிடையாது.
ஒரு சில நேரத்தில் சில பணக்கார வீட்டுப்பிள்ளைகள் நல்ல துணிகள் அணிந்து வருவார்கள் ஏழை வீட்டு பிள்ளைகள் சாதரண துணிகளை அணிந்து வருவார்கள்.
பணக்காரன் ஏழை வேற்றுமை வந்து விடக்கூடாது என்று சில கட்டுபாடுகளை விதிப்பார்கள்.
பணக்கார வீட்டு பிள்ளைகளை நாளை முதல் பள்ளிக்கு சாதரண உடையில் தான் வரவேண்டும்.
விலை உயர்ந்த உடைகளை பள்ளியின் வெளியே உன் விருப்பப்படி அணிந்து கொள்ளவும் என்று ஆசிரியர்கள் சொல்லி விடுவார்கள்.
இதனால் வேற்றுமை தவிர்க்கப்பட்டது.
ஒரு கல்வி ஆண்டில் வகுப்புக்கு 40 பேர்கள் என்ற கணக்கில் மொத்தம் 200 மாணவர்கள் படிப்பார்கள்.
அப்போது பள்ளி காலை 8:30 க்கு திறக்கப்பட்டு மாலை 4:30 க்கு முடியும் மதியம் உணவு இடைவேலையாக 12 மணியில் இருந்து ஒரு மணி வரை
விடப்படும்.
12 To 1மணி வரை விடக்காரணம் பையன்கள் லுஹர் தொழுகையை தொழ வேண்டும் என்பதே அன்றைய காலத்தில் அனைத்து பள்ளி வாசல்களிலும் லுஹர் தொழுகை 12:45 க்கு நடைபெறும்.
அரசு விடுமுறை ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும்.
பள்ளப்பட்டியில் மட்டும் வெள்ளிக்கிழமை முழு விடுமுறை தினம் காரணம் மாணவர்கள் ஜும்மா தொழ போக வேண்டும்.
ஞாயிறு பள்ளி இருக்கும்.
திங்கள் கிழமை மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறை திங்கள் அன்று அரை நாள் விடுமுறை விடும் நோக்கம் சந்தைக்கு செல்ல வேண்டும் என்று அன்றைய நாட்களில் பெண்கள் யாரும் சந்தை செல்லமாட்டார்கள் வீட்டில் ஆண்கள் இருந்தால் செல்வார்கள்.
ஆண்கள் இல்லாத வீட்டில் சிறுவர்கள்தான் செல்வார்கள் அதன் காரணமாகவே திங்கள் அன்று அரை நாள் விடுமுறை.
மேலும் ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்கும் முன் நான்கு தினங்களுக்கு முன்பே பள்ளி விடுமுறை விடப்பட்டு ரம்ஜான் நோன்பு 30 நாட்கள் முழுவதும் ஒரு மாதம் லீவு வீட்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாடி மூன்று நாள் சென்று தான் பள்ளி திறக்கப்படும்.
இஸ்லாமிய பண்டிகைகளுக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
உலக கல்வியுடன் கூடிய மார்க்க கல்வியும் அந்த பள்ளியில் படிக்க வைக்கப்பட்டது கிழக்கு பள்ளியில் இருந்து ஒரு ஹஜரத் அவர்கள் வந்து மார்க்க கல்வியை போதிப்பார்கள்.
அது ஒரு சப்ஜெக்டாக. பாட திட்டத்தில் இடம் பெறும்.
முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை சுற்றியே இவர்களின் நலனுக்காகவே இப்பள்ளி அன்று முதல் இன்று வரை
நடைபெறுகிறது.
அன்று பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த வேண்டும் என்றால் 5 வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும்.
அதுவும் மாணவர் தன் கையை தலைக்குமேல் வைத்து காதை தொடவேண்டும் காதில் விரல் பட்டால் தான் அட்மிஷன்.
(இன்று போல் குழந்தை பிறந்தவுடனேயே L.K.G வகுப்பில் சேர்க்கும் பழக்கம் அன்று இல்லை)
அன்றைய படிப்பில் மொத்தம் 5 சப்ஜெக்ட்தான் தமிழ். ஆங்கிலம். பூகோளம். சரித்திரம். கணக்கு.
கூடுதலாக அரபி ஓதுவது.
மொத்தம் ஐந்து புத்தகம் மட்டுமே இருக்கும்.
இவை அனைத்தையும் எழுத ஒரே ஒரு நோட்டு புத்தகத்தில் ஐந்து பாகமாக பிரித்து தனித்தனியாக. பாடம் எழுதப்படும்.
இன்று போல் அன்று விதவிதமான ஸ்கூல் பேக்குகள் கிடையாது
கலர் கலர் நோட்டு புத்தகமும் கிடையாது.
ஒரு மஞ்சள் பையில் மொத்தம் 6 புத்தகங்கள் மற்றும் ஒரு சிலேட் இவைகள் மட்டும்தான் கொண்டு செல்வார்கள்.
அதே போல் வீட்டுப்பாடம் என்ற கூடுதல் சுமை இல்லை பள்ளி விட்டதும்
விளையாட்டுத்தான்
இதனால் மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இயற்கையான முறையில் பாடம் கற்றார்கள்.
இன்று போல் அன்று டியூசனும் இல்லை.
அந்த காலகட்டத்தில் செங்கல்வராயன்
பேட்டையில் நடராஜன் சார் அவர்களின் தகப்பனார்
(நொண்டி வாத்தியார் அவர்கள் இந்த வார்த்தையை எழுதியதற்கு மன்னிக்கவும் அடையாளம் தெரிய வேண்டியே மேற்கண்ட வார்த்தையை உபயோகப்படுத்தினேன்)
ஒரு ஸ்கூல் நடத்தினார்.
அப்போது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகமெங்கும் அரசு பள்ளிகள் திறந்தார்கள்.
அப்போது அரசு சார்பில் முதன் முதலாக அரசு தொடக்க பள்ளி பள்ளப்பட்டியில் சந்தை பேட்டை தெருவில் ஒரு பள்ளி திறந்தார்கள்.(பஸ் ஸ்டாண்ட் பள்ளி)
அந்த பள்ளி பள்ளப்பட்டியின் அரசு சார்பின் முதல் பள்ளி அதுவரை பள்ளப்பட்டியில் முத்துவாத்தியார் பள்ளியை தவிர வேறு இல்லை.
90 சதவீத மாணவர்கள் முத்தவாத்தியார் பள்ளியிலும் 10 சதவீத மாணவர்கள் பஸ் ஸ்டான்ட் பள்ளியிலும் படிப்பார்கள்.
5 ம் வகுப்பு படித்து முடித்தவுடன் படிப்பு இத்துடன் முடிந்து விட்டது என்று கடைகளுக்கு சேர்ந்து போய் விடுவார்கள்.
காரணம் 6 ம் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்பு வரை படிக்க அன்று பள்ளப்பட்டியில் மேல் நிலைப்பள்ளி கிடையாது.
அதையும் மீறி 6 ம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் அரவக்குறிச்சி தான் செல்ல வேண்டும்.
அன்றைய காலத்தில் அரவக்குறிச்சி என்பது தூரத்தில் உள்ள வெளியூராக கருதப்பட்டது.
இன்றுபோல் போக்குவரத்து வசதியும் கிடையாது அதனால் அதிக அளவில் இங்கிருந்து யாரும் படிக்க செல்லவில்லை.
அதையும் மீறி படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மாட்டு வண்டியில் சென்று திரும்பினர் இந்த நிலை 1955 வரை நீடித்தது.
அதன்பிறகு நமதூரில் மஜீது ஹாஜியார் அவர்களின் தீவிர முயற்சியில் பள்ளப்பட்டி மேல் நிலைப்பள்ளி 23:05:1955ஆம் நாள் திறக்கப்பட்டது.
அதன் பிறகு தான் 6 வகுப்பு முதல் படிப்பை தொடர மாணவர்கள் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் படித்தனர்.
முத்து வாத்தியார் பள்ளியில் 5 ம் வகுப்புவரை படித்துவிட்டு 6 வகுப்பு சேர T.C யை கொண்டு சென்று மேல்நிலைப்பள்ளியில் காட்டினால்.
எந்த டெஸ்ட்டும் கேள்விகளும் இல்லாமல் உடனே அட்மிஷன் போட்டு விடுவார்கள்.
காரணம் முத்து வாத்தியார் ஸ்கூலில் படித்த மாணவன் தரமான படிப்பையும் ஒழுக்கத்தையும் கற்று இருப்பான் என்ற நம்பிக்கை.
இப்பள்ளியில் ஏட்டுக்கல்வி மட்டும் படிக்கவைக்கவில்லை.
நடைமுறைக்கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது.
4 அல்லது 5 ம் வகுப்பு மாணவர்களில் முதல் நாள் 3 மாணவர்களை அழைத்து.
சின்னக்கடைவீதியில் இருக்கும் யூனியன் பேங்க்.
(அப்போது பள்ளப்பட்டியில் இந்த ஒரு பேங்க் மட்டுமே இருந்தது)
அனுப்பி பணம் கட்டும் சலானை வாங்கி வரச் செய்து மாணவர்கள் கையாலேயே சலானை எழுத செய்து எழுதிய பிறகு 50 ரூபாயை கையில் கொடுத்து அதை பேங்கில் போட்டு விட்டு வரச் சொல்வார்கள்.
மறுநாள் அதே பையன்களை அழைத்து பணம் எடுக்கும் சலானை வாங்கி வரச்செய்து நேற்று போட்ட 50 ரூபாயை இன்று எடுக்க அந்த சலானில் எழுதச் செய்து நேற்று போட்ட 50 ரூபாயை எடுத்துவரச்சொல்வார்கள்.
இப்படியே அடுத்த நாள் அடுத்த மூன்று மாணவர்கள் இதை செய்யவேண்டும்.
அன்று அனுபவ படிப்பு படித்த மாணவர்கள் இன்று எந்த அலுவகத்திற்கும் சென்று யாருடைய உதவியும் இல்லாமல் செயல்பட முடிகிறது.
திடீர் என ஒரு மளிகை கடை பெயர்
சொல்லி பருப்பு கிலோ என்ன விலை என்று விசாரித்து வரச் சொல்லுவார்கள்.
இரண்டு நாள் சென்று வேறு ஒரு மளிகை கடை பெயர் சொல்லி அந்த கடையில் பருப்பு வாங்கி வரச்சொல்வார்கள்.
இரண்டு கடையிலும் ஒரே விலையாக இருந்தால் பரவாயில்லை.
தற்போது பொருள் வாங்கி வந்த கடையில் ஒரு ரூபாய் விலை அதிகம் கொடுத்து வாங்கி வந்து விட்டால் அவ்வளவுதான் மாணவன் வாத்தியார் இடம் மாட்டிக்கொள்வான்.
நேற்று அந்த கடையில் ஒரு விலை இன்று இந்த கடையில் ஒரு விலை எங்கு விலை குறைவு என்று ஏன் கணக்கு பார்த்து வாங்கவில்லை என்று பொருளாதாரத்தை உணர்த்துவார்கள்.
அடுத்து சக்கரை கிலோ 18 ரூபாய் என்றால் 100 கிராம் என்ன விலை என்று கேட்பார்கள்.
உடனே 1:80 பைசா என்று சொல்ல வேண்டும் சொல்லிய அடுத்த வினாடி.
கால் கிலோ என்ன விலை என்பார்கள் உடனே 18 ரூபாயை நாலால் வகுத்து 4:50 பைசா என்று சொல்ல வேண்டும்.
அடுத்த நொடி 400 கிராம் என்ன விலை என்ற விணா தொடுப்பார்கள்.
(இதை படிக்கும் நீங்கள் உடனே கால்குலேட்டரை தூக்கவேண்டாம்
உங்களுக்கே தலை சுற்றுகிறதா.)
7 ரூபாய் 20 பைசா என்ற சரியான விடையை மனக்கணக்கில் உடனே சொல்ல வேண்டும்.
இதில் நோட்டு புத்தகமோ சிலேடோ உபயோகப்படுத்தக்கூடாது மனக்கணக்கில் தான் விடை அதுவும் உடனடியாக சொல்ல வேண்டும்.
எல்லாம் மனக்கணக்குதான்.
முதல் முறையாக வாய்ப்பாடு சொல்லித்தருவார்கள்.
சில நாள் கழித்து அதே வாய்ப்பாட்டில் 16வு4 என்ன விடை என்று கேட்பார்கள்.
வாய்பாட்டை கையில் எடுத்து பார்க்காமல் உடனே 16வு4=64 என்று உடனே சொல்ல வேண்டும் தாமதித்தால் கையை நீட்ட சொல்லி பிரம்படி பரிசாக கிடைக்கும்.
அடுத்து "ஓரேடு" என்று ஒரு கணக்கு. (அதை ஐந்தொகை கணக்கு என்றும் சொல்வார்கள்)
ஒரு கடையின் ஒரு வருட கணக்கை ஒரே பேப்பரில் கொண்டு வருவது.
இதில் அந்த வருடத்தில் ஏதாவது ஒரு நாளில் வெறும் 1 ரூபாய் தவறு ஏற்பட்டு இருந்தாலும் அந்த ஓரேட்டு கணக்கு காட்டி கொடுத்து விடும்.
இந்த கணக்கு அங்கு படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இன்றைய தலைமுறையினர்களுக்கு அந்த கணக்கின் பெயர் கூட தெரியாது.
இப்படி கணக்கு பாடம் சொல்லி தந்தார்கள் (இன்று கால்குலேட்டரிலேயே கணக்கு போடத்தெரியாமல் தவிக்கும் மாணவர்கள்.)
கணக்கில் இவர்களுக்கு கால்குலேட்டர்கள்
தேவையில்லை. அவ்வளவும் மனக்கணக்குதான
அடுத்து சரித்திரம் பாடம் நடக்கும் போது உதாரணமாக.
திப்பு சுல்தான் வேகமாக குதிரையில் டக் டக் என்று வந்தார் எதிரே ஆங்கிலேயன் இவரை தாக்க மறைந்து நின்றான் அவனை கண்டதும் திப்பு தாவிக் குதித்து போர் செய்தார் என்று நேரில் நடப்பது போல் உணர்ச்சி வசப்பட்டு கதை வடிவில் பாடம் நடக்கும். இதனால் மாணவர்கள் மனதில் பாடம் பசுமரத்தானிபோல் பதிந்து விடும்.
அடுத்து எழுத்து பயிற்சி.
முதலில் சிலேட்டில் கோடு போட்டு ஆசிரியர்கள் மாணவர்களின் கையை பிடித்து எழுதி பழக்குவார்கள்.
அதன் பிறகு மாணவர்கள்
சிலேட்டில் அழகாக எந்த தவறும் இல்லாமல் கோர்வையாக எழுத வேண்டும் எழுத்தில் வரிசை தவறினாலும் எழுத்து பிழை ஏற்பட்டாலும் எத்தனை பிழைகள் ஏற்பட்டுள்ளதோ அத்தனை பிரம்படிகள் விழும் அதனால் இங்குப் படித்த மாணவர்களின் கையெழுத்து அச்சடித்தது போல் அழகாக இருக்கும்.
அடுத்து மாணவர்களே ஆசிரியர்கள்...
ஒரு பாடத்தை நடத்த திடீர் என 4 வது படிக்கும் ஒரு மாணவனை அழைத்து நீ 3 வது கிளாஸ்ஸுக்கு சென்று மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்து என்று சொல்லி ஆசிரியர் அமர்ந்து விடுவார்.
எழுந்த மாணவர் 3 வகுப்பு படிக்கும் மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.
சூழற்சி முறையில் 5 வகுப்பு மாணவன் 4 ம் வகுப்புக்கும் 4 ம் வகுப்பு மாணவன் 3 ம் வகுப்புக்கும் 3 ம் வகுப்பு மணவன் 2 ம் வகுப்புக்கும் சென்று பாடம் நடத்த வேண்டும் அதில் ஏதும் குறை இருந்தால் அதை திருத்துவார்கள்.
திடீர் என ஒரு மாணவரை அழைத்து இன்று இந்த வகுப்புக்கு நீ தான் லீடர்.உன் சொல்லுக்கு அனைத்து மாணவர்களும் கட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள்.
லீடராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் மற்ற மாணவர்களை கண்காணிக்க வேண்டும் இதனால் நிர்வாக திறமை அம்மாணவருக்கு ஏற்படுகிறது.
ஒரு மாணவருக்கு ஒரு கேள்விக்கான விடை தெரியாது என்று ஆசிரியருக்கு நன்றாகவே தெரியும்.
இருப்பினும் அந்த மாணவனை நிற்க வைத்து அவனுக்கு விடை தெரியாத கேள்வியை கேட்பார்.
அந்த பையன் விடை தெரியாமல் திரு திரு என்று விழித்துக்கொண்டிருக்கும் போது மற்ற மாணவர்களை நோக்கி இதற்கான விடை தெரிந்த மாணவன் விடை சொல்லவும் என்று சொல்வார்கள்.
விடை தெரித்த மாணவன் விடையை சொல்லியதும் இது தான் அதற்கான விடை என்று விடை தெரியாத மாணவனுக்கு புரிய வைப்பார்கள்.
அடுத்து புவியியல் பாடம் சொல்லித் தரும் போது தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் என்ன பொருள் அதிகமாக விளைகிறது.
என்று கேள்வி கேட்டு தமிழ்நாடு மேப்பை எடுத்து இந்த ஊரில் இன்ன பொருள்கள் அதிகமாக விளைகிறது என்று சொல்லி மறுநாள் வேறு பாடம் நடக்கும் போது திடீர் என இந்த பொருள் எந்த ஊரில் விளைகிறது என்று கேள்வி கேட்பார்கள் உடனே பதில் சொல்லவேண்டும் இதன் மூலம் நினைவுத்திறனை மேம்படுத்துவார்கள்.
உதாரனமாக
திருச்சி செல்லும் வழியில் லாலாபேட்டை பகுதிகளில் வாழைப்பழம் வெற்றிலை விளைச்சல் அதிகம் அதை குறிப்பிட்டு பாடம் நடக்கும்.
அப்போது அவர்கள் அந்த பகுதியை பற்றி சொல்லிக்கொடுத்தது.
இன்றும் நாம் அந்த பகுதியை கடக்கும் போது அன்று ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தது நினைவில் வரும்.
ஒரு மாணவன் தொடர்ந்து பள்ளி வரவில்லை என்றால் ஆசிரியரே நேராக அவனது இல்லம் சென்று நிலைமையை விசாரிப்பார் உடல் நிலை சரியில்லை என்றால் விட்டு விடுவார்.
பள்ளிக்கு மட்டம் போடும் நோக்கத்தில் பள்ளி வரவில்லை என்றால் அங்கேயே இரண்டு அடி அடித்து காதை பிடித்து தர தர என்று தெருவில் அழைத்து வந்து பள்ளியில் முட்டிக்கால் போட்டு நிற்க வைத்து விடுவார்கள்.
அதன் பிறகு அந்த பையனுக்கு பள்ளிக்கு மட்டம் போடும் நினைவே வராது.
பள்ளியில் பாடம் நடந்து முடிந்த பிறகு கிடைக்கும் இடைவெளியில் மற்ற மாணவர்களிடம் அரட்டை அடிப்பது கூடாது அமைதியுடன் அமர்ந்து இருக்க வேண்டும்.
பாடபுத்தகங்களை பைண்டிங் செய்து கிழியாமலும் கசங்காமலும் பாதுகாக்கவேண்டும்.
மறு வருடம் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்லும் போது.
சிக்கனம் என்றால் என்ன என்பதை மாணவர்கள் உணரவேண்டும் என்ற நோக்கில் பழைய புத்தகங்களை புதிதாக வரும் இந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கவேண்டும் இதன் மூலம் மாணவர்களுக்கு சிக்கனத்தை கற்றுக்கொடுக்கப்பட்டது.
அடுத்து ஒரு லிட்டர் முதல் 100 M.L வரை உள்ள காலி பாட்டில்களை வரிசையாக இல்லாமல் இடம் மாற்றி வைத்து விடுவார்கள்.
திடீர் என ஒரு மாணவனை அழைத்து அங்கிருக்கும் பாட்டில்களில் ஒன்றை எடுத்து சென்று கால் லிட்டர் கடலை எண்ணை வாங்கி வரவும் என்று சொல்வார்கள்.
(அப்போது பாக்கெட்களில் எண்ணை கிடைக்காது சில்லரையில் பாட்டிலில் தான் கிடைக்கும்)
அந்த மாணவன் சரியாக கால் லிட்டர் கொள்ளவு உள்ள பாட்டிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அரை லிட்டர் பாட்டிலையோ அல்லது 100 Ml பாட்டிலையோ கையில் எடுத்தால் அடி விழும் இதனால் சிந்திக்கும் திறன் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
மாதம் ஒருமுறை கண்டிப்பாக முடி வெட்டி கொள்ளவேண்டும் அதுவும் சாதாரனமாக இருக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை நகம் வெட்டவேண்டும் இதனால் மாணவர்களுக்கு ஆரோக்கியம் என்றால் என்ன என்று உணர்த்துவார்கள்.
திடீர் என ஒரு மாணவனை அழைத்து இன்று உன் பெற்றோர்கள் உன் தின்பண்டசிலவுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் என்று கேட்பார்கள்.
அவன் பத்து பைசா கொடுத்துள்ளார்கள் என்றால் அதில் இரண்டு பைசாவை தர்மம் செய்து விட்டு வரவும் என்று வெளியில் அனுப்பி தர்மம் செய்யச்சொல்லி.
மீதம் உள்ள 8 பைசாவில் உன் தின்பண்டங்களை வாங்கிக்கொள்ளவும் என்பார்கள்
இதனால் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை மாணவனுக்கு வருகிறது இப்படி நடைமுறை கல்வியும் போதிக்கப்பட்டது.
அன்று அவர்கள் நம்மீது காட்டிய அக்கரையின் விளைவு இன்று நாம் தலை நிமிர்ந்து ஊரில் வலம் வருகிறோம் அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.
ஐந்தாம் வகுப்பிற்கு மானிக்சாரும்
நான்காம் வகுப்பிற்கு செல்லமுத்து சாரும் மூன்றாம் வகுப்பிற்கு முருகேசன் சாரும் ஆசிரியர்களாக இருந்து மாணவர்களை பக்குவபடுத்தி உள்ளார்கள்.
செல்லமுத்து சார் அவர்கள் கண்டிப்பானவர் இருப்பினும் அதன் பின்னனியில் ஒரு கனிவு இருக்கும்.
செல்லமுத்து சார் அவர்கள் அரசு தரும் நல்லாசிரியர் விருது பெறவில்லை என்றாலும்.
பள்ளப்பட்டி மக்களின் எத்தனையோ பொது நிகழ்வுகளில்
பல விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கி இருக்கிறார்கள் இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம் என்று கூறுகிறார்.
முருகேசன் சார் அவர்கள் கண்டிப்பானவர் இருப்பினும்
மாணவர்களின் சக தோழனை போல் பழகக்கூடியவர்.
முருகேசன் சார் அவர்கள் நல்லாசிரியர் விருதை பெற்றவர்.
இவர்கள் பாடம் சொல்லித்தரும் முறையே ஒரு வித்தியாசமாக இருக்கும் ஒரு பாடம் நடக்கும் போது அந்த பாடத்தின் நிகழ்வு நம் கண் முன்னால் நடப்பது போல் உணர்வு ஏற்படும்.
ஏதாவது ஒரு மாணவன் தவறு செய்து ஆசிரியர் இடம் மாட்டிக்கொண்டால் ஆசிரியர் அடிப்பதற்கு பிரம்பை ஓங்கினார் என்றால் அடிவிழும் முன்பே பயத்தில் டவுசரிலேயே சிறுநீர் பெய்து விடும் மாணவர்களும் இருப்பார்கள்.
அன்றைய மாணவர்கள் தன் பெற்றோர்களுக்கு பயந்ததை விட தன் ஆசிரியர்களுக்கு பயந்தது அதிகம்.
மாணவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் ஆசிரியர் அந்த பகுதியை கடந்து சென்றால் தங்கள் விளையாட்டை புறக்கணித்து ஆசிரியர் அவர்களுக்கு மறியாதை செய்யும் விதமாக பவ்வியமாக ஒதுங்கி மாணவர்கள் நிற்பார்கள்.
அதேபோல் ஆசிரியர்கள் ஒரு பகுதியை கடந்து செல்லும் போது அந்த பகுதியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அமர்ந்து இருப்பவர்கள் தன் குருவுக்கு மறியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்பார்கள்.
பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும்போது பெற்றோர்கள் பிள்ளைகளின் கைகளை பிடித்து ஆசிரியர் இடம் கொடுத்து இன்று முதல் என் பிள்ளையை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன் இவனை நல்ல பையனாக மாற்றும் பொருப்பு உங்களை சார்ந்தது என்று கண்ணீருடன் முழு பொருப்பையும் ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.
"மாணிக்கம்" சார் அவர்கள் பெயரிலேயே மாணிக்கம் இனைந்து இருப்பதுபோல் குணத்திலும் மாணிக்கமாக திகழ்வார்.
அடுத்து செல்லமுத்து சார் மிகவும் கண்டிப்பானவர் ஆனால் அவர் பெயரிலேயே "செல்லம்" என்று இருப்பதை போல் மிகவும் செல்லமாக (முத்தாக) இருப்பார்.
அடுத்து முருகேசன் சார் அவர்கள்.
ஆசிரியர் என்ற முருக்கான தோரனை இல்லாமல் சக நண்பனைப்போல் பழகும் குணம் கொண்டவர்.
அந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவன் குணம் பழக்கவழங்களை தெரிந்து வைத்திருப்பார்கள்.
அதற்கு தகுந்தால் போல் அந்த மாணவனை அணுகுவார்கள்.
ஆசிரியர்களின் ஒரே குறிக்கோள் நம் பள்ளியில் படித்தவன் சோடை போகக்கூடாது வருங்காலத்தில் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே தன்பள்ளியில் படிக்கும் மாணவர்களை அடுத்தவர்கள் வீட்டு பிள்ளைகள் என்று நினைக்காமல் தன் சொந்த குடும்பத்து பிள்ளைகள் என்று நினைப்பார்கள்.
கடந்த 5 தலைமுறையாக இந்த குடும்பத்தார்கள் கல்விசேவையே குறிக்கோளாக நமதூரிலேயே வாழையடி வாழையாக ஊரின் மையப்பகுதியான கோவில் தெருவில் வசிப்பிடத்தை ஏற்படுத்தி தங்கள் வாரிசுகளுடன் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் நம்மோடு ஒட்டி உறவாடி மகிழ்கிறார்கள்.
அந்த குடும்பத்தை சார்ந்த பெண்கள் புர்கா அணியாத முஸ்லீமாகவும் ஆண்கள் தொப்பி அணியாத முஸ்லீம்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் குடும்பம் மத நல்லிணக்கித்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
முத்து வாத்தியார் (பெரிய ஐயா) அவர்கள் வெளியூர் செற்று நமதூரார்கள் கடைகளுக்கு சென்றால்.
ஐயா அவர்களை கல்லாவில் அமர வைத்து சுற்றி இருக்கும் தன் நண்பர்களை அழைத்து பெருமையுடன்.
இவர்கள் தான் எங்கள் பெரிய ஐயா அவர்கள் என்று அறிமுக படுத்தி கை கட்டி நிற்பார்கள்.
ஐயா என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை வராது.
பள்ளப்பட்டி கல்வி சங்கம் உறுப்பினர்கள் அனைவர்களும் இப்பள்ளியில் படித்தவர்களே.
பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டி ஆரம்பிக்கும் போது மாணிக்க சார் அவர்களிடம் கலந்தாலோசனை செய்து அவர் வழிகாட்டல் படி அரசை அனுகி அனுமதி பெற்றுள்ளார்கள்.
ஹையப்பா ஹாஜியார் அவர்கள்
கோஷா ஸ்கூல் நடத்துவதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாணிக்கசார் அவர்களிடம் ஆலோசித்தே முடிவு செய்வார்கள்.
காரணம் இருவரும் ஒரே வகுப்பு தோழர்கள் மேலும் இருவர்களும் கல்வித்துறையை சார்ந்தவர்கள்.
ஹையப்பா ஹாஜியார் அவர்கள் குடும்பத்து பெண் பிள்ளைகளை 1 ம் வகுப்பு முதல் 5 வகுப்புவரை முத்த வாத்தியார் பள்ளியில் படிக்க வைத்து.
அதன் பிறகுதான் கோஷா ஸ்கூலில் சேர்த்துவார்கள்.
காரணம் ஆரம்ப படிப்பை இப் பள்ளியில் படித்து விட்டு மற்ற பள்ளியில் படித்தால் கல்வி தரம் உயர்ந்து இருக்கும் என்று நம்புவார்கள்.
ராஜா பேட்டை தெருவில் இயங்கும் முத்து முஸ்லீம் உதவி பெறும் துவக்கப்பள்ளி இவர்களின் வாரிசுகளின் ஒருவர் நடத்தி வருகிறார்.
இப் பள்ளி ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தை பெற்று அதிகமான குடும்ப உறுப்பினர்களை கொண்டு குடும்பம் நடத்தி உள்ளார்கள்.
கந்த சாமி என்ற ஆசிரியர் ஒருவர் தினமும் பித்தளை தூக்கில் பழைய சோற்றை கொண்டு வந்து அதற்கு துனையாக பச்சை வெங்காயத்தை இனைத்து சாப்பிடுவதை
பல மாணவர்கள் பார்த்து தங்கள் வீட்டில் சுவையான உணவு தயாரித்தால் என் ஆசிரியர்களுக்கும் வேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டு வந்து கொடுத்தும் இருக்கிறார்கள்.
வறுமையை விரும்பி ஏற்று பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என்ற ஒரே குறிக்கொளுடன் செயல் பட்டுள்ளார்கள்.
இன்றும் ஆசிரிய பெருந்தகைகள் குடும்பம் நடுத்தர குடும்பமாகவே வாழ்கிறார்கள் ஆனால் இப்பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள
மானிக்கம் ஸார் அவர்கள் S.S.L.C வரை படித்து முடித்து விட்டு இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்து T.T.R வேலைக்கான அனுமதியும் வந்து விட்டது.
இந்த நிலையில் முத்து வாத்தியார் (பெரிய ஐயா) அவர்கள் நீ வேலைக்கு சென்று விட்டால் நம்மை நம்பி இருக்கும் இந்த பிள்ளைகளுக்கு யார் கல்வி புகட்டுவது இந்த கல்வி சேவையை யார் செய்வது நீ அரசாங்க வேலைக்கு செல்லக்கூடாது நீ பள்ளியில் கல்வி சேவை தான் செய்யவேண்டும் என்று உறுதியுடன் கூறிவிட்டார்.
வந்த வேலையை உதறி தள்ளி விட்டு கல்வி சேவை தான் இனி என் வாழ்க்கை என்று மாணிக்கம் ஸார் அவர்கள் அன்று முடிவு எடுத்தார்.
அவர் அன்று எடுத்த முடிவு நமக்கு மாணிக்கம் ஸார் என்ற "மாணிக்கம்" கிடைத்தது.
மாணிக்கம் ஸார் அவர்களுக்கு நான்கு ஆண் மக்கள் அதில் மூத்தவர் தமிழ் செல்வன்.
இவர் முத்து வாத்தியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும்
போது திடீர் என மாரடைப்பில் காலமாகி விட்டார்.
இரண்டாம் மகன் ராமதாஸ் அவர்கள் இன்றைய உருஸ்கடை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
மற்ற இரண்டு மகன்கள் வேலுச்சாமி மற்றும் சேகர் இருவரும் வியாபாரத்துறையில் இருக்கிறார்கள்.
ஒரு முறை தமிழாசிரியர் எழில்வானண் ஸார் அவர்கள் திடீரென சினிமாவுக்கு பாட்டெழுதப்போய் விட்டார்.
உடனே மாணிக்கம் ஸார் அவருக்கு போன்பண்ணி நமது வேலையே கற்பிப்பது உடனே ஊர் புறப்பட்டு வரவும் எனச்சொல்ல அவரும் சென்னையை விட்டுக்கிளம்பி ஆசிரியப்பணிக்கு வந்து விட்டார் .
புளிய மரத்தெருவில் இயங்கி வந்த பள்ளி கடந்த பத்து வருடமாக சொந்த கட்டிடத்தில் காலீஸ் ரோட்டில் இயங்கிவருகிறது.
தற்போது அதன் நிர்வாகியாக முருகேசன் ஸார் இருக்கிறார்.
இவர் முதல் முதலாக நிர்வாகியாக பொறுப்பேற்கும் போது இவர்களின் முன்னோர்களான மானிக்கம் ஸார் செல்லமுத்து ஸார் போன்றோர்கள் கண்ணீருடன் முருகேசன் ஸார் அவர்களிடம் கடந்த 200 வருடமாக இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவே இப்பள்ளி நடை பெற்று நற் பெயரை சம்பாதித்து உள்ளது.
அந்த நற்பெயர் கடைசிவரை பாதுகாக்க வேண்டும் என்று உறுதி மொழி வாங்கி நிர்வாகத்தை முருகேசன் ஸார் அவர்களிடம் இடம் ஒப்படைத்துள்ளார்கள்.
அவர்களுக்கு கொடுத்த உறுதி மொழியை இன்று வரை கடைபிடித்தும் வருகிறார்.
முருகேசன் ஸார் அவர்களுக்கு பிறகு இப்பள்ளியை தொடர்ந்து நடத்த முருகேசன் ஸார் அவர்களின் மகளை தற்போது டீச்சராக படிக்கவைத்துக்
கொண்டிருக்கிறார்.
தற்போது 220 மாணவர்கள் படிக்கிறார்கள் இதில் 190 மாணவர்கள் நமதூரை சார்ந்தவர்கள்.
இவர் பொருப்பேற்ற பிறகு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பள்ளியில் படிக்கும் 96 சதவீத மாணவர்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறார்.
கரூர்மாவட்டத்திலேயே அதிகமாக கல்வி உதவி தொகை மாணவர்களுக்கு பெற்று கொடுத்த பள்ளி இது தான்.
இதற்காக மாவட்ட ஆட்சி தலைவர் கல்வி தலைமை அதிகாரிகளிடம் பல முறை நேரில் சந்தித்து இந்த உதவி தொகையை பெற்றுத் தர முயற்சி செய்து வருகிறார்கள்.
மேலும் தங்கள் சிலவில் பொறுப்பேற்று இப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் 100 பேர்களை தேர்வு செய்து.
கோவையில் இருந்து சென்னை வரை விமானத்தில் அழைத்து சென்று பஸ்ஸில் கூட்டி வந்து இருக்கிறார்.
இதனால் ஏழை மாணவர்களும் விமானத்தில் பறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
என் தாத்தா தந்தைகள் கூட இதுவரை விமானம் ஏறவில்லை ஆனால் நம் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை விமானம் ஏறச் செய்துள்ளோம் என்று முருகேசன் ஸார் அவர்கள் சொல்கிறார்.
அதே போல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பெங்களூரில் நடை பெற்ற விமான கண்காட்சியை காண இப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் 60 பேர்களை தேர்வு செய்து பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யும் A/c சிலிப்பர் கோச் பஸ்ஸில் பெங்களூர் வரை அழைத்து சென்று திரும்பி உள்ளார்.
சென்ற ஆண்டு 70 பிள்ளைகளை தூத்துக்குடி அழைத்து சென்று கப்பல் முழுவதையும் சுற்றிக்காட்டி அழைத்து வந்துள்ளார்.
இது வரை ரயிலே ஏறாத மாணவர்களை கரூரில் இருந்து திருச்சி வரை ரயிலில் பிரயானம் செய்ய வைத்துள்ளார்.
இப்படி மாணவர்களை கூட்டிக்கொண்டு வெளியூர் செல்லும் போது அவர்களின் உணவு தேவைகளை அந்த அந்த ஊர்களில் கடை வைத்து இருக்கும் பள்ளப்பட்டியை சார்ந்தவர்கள்.
தங்கள் சிலவில் பொருப்பேற்று கடைசிவரை கூடவே இருந்து உதவி செய்தார்கள் என்று பெருமையுடன் பாராட்டுகிறார்.
ஒரு முறை பள்ளப்பட்டி மேல் நிலைப்பள்ளிக்கு முருகேசன் ஸார் சென்றுள்ளார்.
ஏற்கனவே முத்தவாத்தியார் பள்ளியில் படித்த ஒரு மாணவனை சந்தித்தார்.
தன் பள்ளியில் படித்த மாணவனின் கல்வியை சோதிக்கும் விதமாக.
14 வது வாய்ப்பாட்டை சொல்லச்சொல்லி உள்ளார் அவன் முழு வாய்ப்பாட்டையும் மனப்பாடமாக சொல்லி விட்டு முருகேசன் ஸாரே மயக்கம் போட்டு விழும் அளவு.
அதே வாய்பாட்டை திருப்பி (ரிவர்சில்) சொல்லி உள்ளான்.
இப் பள்ளி கரூர் மாவட்டத்தின் சிறந்த பள்ளி என்று பாராட்டை பெற்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியிலும் மாணவர்களின் உயரம் எடை போன்றவற்றை ஒவ்வோரு மாதமும் ஒரு டைரியில் குறித்துக்கொண்டு வருகிறார்கள் இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் தெரிகிறது.
அதே போல் வருடத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை பெற்றோர் ஆசிரியர்கள் மீட்டிங் நடத்தப்பட்டு மாணவர்களின் கல்வியை பற்றி கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த நடைமுறை வேறு எந்த பள்ளியிலும் நடைபெறுவதில்லை.
மேலும் பள்ளப்பட்டி பையன்கள் அதிக புத்தி கூர்மைஉள்ளவர்கள் ஒரு தடவை சொன்னால் போதும் அனைத்தையும் கற்றுக்கொள்வார்கள்.
மற்ற மாணவர்களை விட பள்ளப்பட்டி மாணவர்கள் தன் குருவுக்கு மரியாதை தருவதில் முன்னிலையில் இருக்கின்றார்கள்....
முன்னால் மாணவர்கள் டூவீலரில் செல்லும் போது சில நேரங்களில் ஆசிரியர்களை ரோட்டில் கண்டால் வண்டியில் இருந்து இறங்கி மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
பள்ளப்பட்டி மாணவர்கள் கூச்ச சுபாவம் இல்லாமல் அனைவர்களிடமும் சாதாரனமாக பழகும் குணம் கொண்டுள்ளார்கள்.
இதனால்தான் சென்ற இடம் எல்லாம் சிறப்பை பெறுகிறார்கள்.
என்று முருகேசன் ஸார் அவர்கள் பாராட்டுகிறார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முன்பாகவே புது அட்மிஷன் முடிந்து பள்ளியில் இடம் பூர்த்தியாகிவிடும்.
பல பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு இப்பள்ளியில் இடம் கிடைக்கவில்லையே என்று ஏமாற்றத்துடனும் கவலையுடம் செல்வதை பார்க்கும் போது மனது மிகவும் வேதனையாக இருக்கும்.
கரூர் மாவட்டத்திலேயே இப்பள்ளியில் தான் பள்ளி திறக்கும் முன்பாகவே இடம் பூர்த்தியாகிவிடும் என்று முருகேசன் ஸார் அவர்கள் சொல்கிறார்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம் கற்று தரப்படும் இரண்டாவது தான் கல்வி கற்றுத்தரப்படும்.
வருமானத்தின் அடிப்படையாக கொண்டு பள்ளியை நடத்தாமல் சேவையை அடிப்படையாக கொண்டு கடந்த பத்து தலைமுறையாக இப்பள்ளி நடைபெற்றுவருகிறது.
இந்த பள்ளியில் படித்தவர்கள் இதுவரை 3 பேர்கள் M.L.A க்களாக
உருவாக்கி உள்ளார்கள்.
முன்னால் M.L.A ஜப்பார் அவர்கள்.
S.S. இஸ்மாயில் அவர்கள்.
லியாவுதீன் சேட் அவர்களாவார்கள்.
இப்பள்ளி படித்தவர்களில் 15 க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர்களாக உருவாகி இருக்கிறார்கள்.
அதில் முதல் டாக்டர் ஹாஜி கரீம் டாக்டர் அவர்களாவார்.
இப்பள்ளி படித்தவர்களில் பல பேர்கள் மிகப்பெறும் தொழிலதிபர்களாகி இருக்கிறார்கள்.
இப்பள்ளி படித்தவர்களில் பல பேர்கள் சிறந்த மனிதர்களாக உருவாகி இருக்கிறார்கள்.
இப்பள்ளியில் படித்தவர்களில் பல பேர்கள் சிறந்த கல்விமான்களாக உருவாகி இருக்கிறார்கள்.
இப்பள்ளியில் படித்தவர்களில் பல பேர்கள் சமூக சேகவர்களாக உருவாகி இருக்கிறார்கள்.
இப்பள்ளியில் படித்தவர்களில் சிலபேர்கள் விஞ்ஞானிகளாகவும் உருவாகி உள்ளார்கள்.
(அதில் ஒருவர் மக்காத குப்பைகளில் இருந்து பயோடீசலை கண்டு பிடித்து உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த கூலச்சி காஜா மொய்னுதீன் என்பவர்.)
ஆரம்பக் கல்வி என்ற அடித்தளம் சரியாக அமைந்தால் தான் கட்டிடம் என்ற உயர் கல்வி நன்றாக இருக்கும் என்ற உயர் நோக்கத்தில் செயல்பட்டுள்ளார்கள் இந்த ஆசிரிய பெருந்தகைகள்.
முத்து வாத்தியார் பள்ளியில்.
நமதூர் நகரத் தந்தை மஜீது. ஹாஜியார் அவர்களின் தந்தை வாப்பு ஹாஜியார் அவர்கள்.
நகரத்தந்தை மஜீது ஹாஜியார் அவர்கள்.
அவர்களின் சகோதரர்கள்.
அக்பர் டாக்டர் அவர்களின் தகப்பனார்.அப்துல் ரஹ்மான் B.A அவர்கள்
அக்பர் டாக்டர் அவர்கள்.
தமீம் டாக்டர் அவர்கள்.
மம்தாஸ் ஹாஜியார் அவர்கள்.
அவர்களின் மகனார் இன்றைய கிழக்கு பள்ளி முத்தவல்லி ஜைனுல் ஆபிதீன் ஹாஜியார் அவர்கள்.
மாமாஞ்சி சலாம் அவர்கள்.
அவர்களின் சகோதரர் டீலக்ஸ் லத்தீப் ஹாஜியார் அவர்கள்.
தலையூர் சமது ஹாஜியார் அவர்கள்.
தலையூர் குத்தூஸ் ஹாஜியார் அவர்கள்.
ரஜாக் ஸ்வீட்ஸ் ரஜாக் அவர்கள்.
ஜின்னா பொடிக்கடை அவர்கள்.
குமனன் பாரி அவர்கள்.
முன்னால் M.L.A லியாவுதீன் சேட் அவர்கள்.
தாடிக்கார சலாம் (முன்னால் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளர்)அவர்கள்.
கரீம் டாக்டர் அவர்கள்.
வள்ளல் ஹபீப் ராஜா அவர்கள்.
வகாப்தீன் ஹாஜியார் அவர்கள்.
முஹம்மதலி மெடிக்கல் அவர்கள்.
ரஹீம் ஸ்டோர் ரஹீம் அவர்கள்.
கரீம் டாக்டர் அவர்களின் மகனார் டாக்டர் முபாரக் அலி அவர்கள்.
(மாணிக்க சார் அவர்களின் மாணவர்)
M.J.R என்று அன்போடு அழைக்கப்பட்ட மலுக்ஷா ரஜாக் அவர்கள்.
கட்டமுஹம்மது ஹாஜி மெஹ்பூப் அலி அவர்கள்.
போன்ற அன்றைய இன்றைய பிரபலங்கள் அனைவர்களும்.
இவர்களை போல் உள்ள மற்ற பிரபலங்கள் முதல் சாதாரன மனிதர்கள் அனைவர்களும் இப்பள்ளியின் மாணவர்களே.
அதில் படித்த மாணவர்களின் பட்டியலை வாசித்தால் இந்த பக்கம் போதாது அந்த அளவு ஊரில் உள்ள அனைவர்களும் அந்த பள்ளியில் படித்து பள்ளப்பட்டிக்கும் அந்த பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
புகழ் பெற்றவர்களில் இருந்து சாதாரனமானவர்கள் வரை இப்பள்ளியில் படித்தவர்கள் இது வரை சோடை போனது இல்லை.
அன்று இப்பள்ளியில் 5 ம் வகுப்பு வரை படித்தவர்களின் கல்வித் தரத்தை இன்றைய கல்லூரிகள் கூட தரமுடியாது.
இன்று நமதூர் மக்கள் பல மாநிலங்களிலும் பல ஊர்களிலும் வியாபாரம் செய்து பொருள் சேர்த்து வழமோடு வாழ்கிறோம்.
சென்ற இடங்களில் எல்லாம் சிறப்போடும் மறியாதையோடும் பாராட்டப்படுகிறோம் இவை அனைத்தும் அன்று இவர்கள் நம்மீது காட்டிய அக்கரையாலும் அவர்கள் நமக்கு போதித்த கல்வியாலும் கிடைத்ததே தவிர வேறில்லை.
அன்று நமக்கு கசப்பாக தெரிந்த நாம் ஆசிரியர்கள் இடம் வாங்கிய அடி இன்று நாம் தலை நிமிர்ந்து வாழ வைத்துள்ளது என்ற உண்மை இன்று தெரிகிறது.
இப்பள்ளியில் படித்த முன்னால் மாணவர்களின் அனுபவ தொகுப்பு.
<><><><><><><><><>
நம் மதிப்பிற்குறிய அக்பர் டாக்டர் அவர்கள் அனுபவம்.
என் தகப்பனார் என்னை அங்கு அழைத்துப்போய் பள்ளியில் சேர்த்த போது பெரிய ஐயா (முத்து வாத்தியார் அவர்கள்) சொன்ன வார்த்தை உங்க அத்தாவும் இங்கதான் படித்தார் நீயும் நல்லாப்படித்து டாக்டர்ஆகனும்.
நினைவில் நிற்கும் வார்த்தை.
என் தாத்தா தம்பண்ண ராவுத்தர் .
என் தகப்பனார் M.S.Tஅப்துல் ரஹிமான் B.A.அவர்கள் இங்கே தான் படித்தார்கள்.
<><><><><><><><><>
பாப்புலர் அபு அவர்கள்.
என்தகப்பனார் அந்த பள்ளியில் படித்தவர்.
என் தகப்பனார் அவர்கள் கடையில் அமர்ந்து இருக்கும் போது.
பெரிய ஐயா முத்து வாத்தியார் அவர்கள் எங்கள் கடையை தாண்டி நடந்து சென்றார்கள் என்றால்.
என் தந்தை அஜீஸ் அவர்கள்
கல்லாவில் இருந்து எழுந்து இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தலை குனிந்து நின்று விடுவார்கள்.
காரணம் தன் குருவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று இதை நான் நேரில் பலமுறை பார்த்து இருக்கிறேன்.
நான் 6 வகுப்பு முதல் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது.
என் வகுப்பு தோழர்களாக அந்த குடும்பத்தை சார்ந்த திருமலை சாமி சார் அவர்களின் பேரன் அவர் பெயரும் திருமலை அவர்களும் மானிக்சார் அவர்கள் மகன் அருள்தாஸ் அவர்களும் என் வகுப்பு தோழர்களாக வலம் வந்தவர்கள்.
மானிக்க சார் அவர்களின் மகன் இன்று உருஸ்கடை அரசு பள்ளியில் தலைமை ஆசியராக பணிபுரிகிறார்.
தற்போது பதிவு செய்யும் பதிவுகளை பற்றி பள்ளியின் வாரிசுதாரர்களாக தற்போது பயணித்து வரும் முருகேசன் வாத்தியார் திருமலை அரவிந்த் உள்ளிட்டோர் உடபட அவர்கள் மிகவும் பாராட்டி பேசினார்.
<><><><><><><><><>
சவ்வாஸ் ஜைனுல்லாபுதீன்அவர்கள்
கிழக்கு பள்ளி முத்தவள்ளி.
என் நினைவில் நின்றவைகள்.
முதல் வகுப்பு பொன்னுசாமி அவர்கள் ஆசிரியர்.
இரண்டாவது வகுப்பு கந்தசாமி அவர்கள் ஆசிரியர்.
மூன்றாம் வகுப்பு சின்னையா அவர்கள் ஆசிரியர்
நான்காம் வகுப்பும் ஐந்தாம் வகுப்பும் மாணிக்கம்சார் அவர்கள். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
<><><><><><><><><>
முஹம்மது ரியாஸ் என்ற நான்
நான் அந்த மருதா முத்து பள்ளியில் 3 வது வரை படித்தேன்
பின் செங்கல்பட்டில் படித்து புதுக்கல்லூரியில் Gardutae முடித்து பின் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலைபட்டமும் பெற்ற மாணவர்.
சவ்வாஸ் ஹாஜி S.k muhamed Riyas
M.A. DPGT.ADAT.SMP.
தற்போது செங்கல்பட்டில். பாத கூஸா அழுத்த மருத்துவம். Foot care therapist. and accupantur.therapist.hijama. flower
madicine therapist. யாகவும்/அல் ஷிஃபா அக்கு மற்றும் பாத அழுத்த மருத்துவம் சென்டரின் தலைமை மருத்துவராக இருக்கிறேன் ஆரம்ப கல்வியை அந்த பள்ளியில் படித்ததை இன்று நினைத்து பெருமையாக கருதுகிறேன்.
<><><><><><><><><>
வீனி முபாரக் அலி அவர்களின் அனுபவம்.
நான் முத்தவாத்தியார் பள்ளியில் பெரிய அய்யா அவர்களிடம் 4 வகுப்புவரை படித்தேன்.
சிலேட்டில் ரூல் போட்டு அங்கல குச்சியில் எழுதுவோம்.
ஐயா அவர்கள் கையைபிடித்து அங்கல குச்சியில் அழகாக எழுதிப்பழக்குவார்.
இன்று எனக்கு வயது 72
இன்றுவரை என் எழுத்து அச்சுக்கோர்த்தால்போல் இருக்கும்.
அதற்கு காரணம் அந்த ஆசிரிய பெருந்தகை முத்துவாத்தியார் அவர்களே
<><><><><><><><><>
கரீம் டாக்டர் அவர்களின் மகனார் டாக்டர் முபாரக் அலி அவர்கள்.
நான் இன்று கோவை அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டராக பணி புரிகிறேன்
நான் மானிக்கசார் அவர்களின் மாணவன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
<><><><><><><><><>
சேலம் பார்மஸி கப்ளி சேட் அவர்கள்.
நான் ஆரம்பக்கல்வியை
பள்ளப்பட்டியில் பயிலாதவன்.
இருப்பினும் இந்தப்பள்ளியின்
சிறப்பினை கூறுவது
பெருமையானது.
இங்குப்படித்த மாணவர்களின்
கையெழுத்து அச்சடித்ததுபோல்
இருக்கும் கணக்கில் இவர்களுக்கு கால்குலேட்டர்கள் தேவையில்லை.
வாய்ப்பாட்டில் அவ்வளவு சூப்பர்.
மாணிக்சாரும் ஹைஸ்கூல் HM அவர்களும் ஒரே சமயங்களில் ஓய்வு
பெற்றார்கள்.
அப்போது ஹைஸ்கூலில் நடந்த
ஒருவிழாவில் இவர்கள் இருவரையும் பாராட்டி கவிதை படைத்து
மேடையில் படித்து அவர்களுக்கு
நினைவு பரிசாகவும் வழங்கினேன்.
தலைப்பு
கிழக்கும் மேற்கும்
சந்திக்கின்றன!
<><><><><><><><><>
தின்டுக்கல்லாம் ஆஸிக் அலி அவர்கள் அனுபவம்.
இந்த பள்ளியில் தான் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயின்றவன்.
அப்புறம் மேற்படிப்பிற்காக..
லண்டன் செல்ல...வில்லை...
பள்ளப்பட்டி அவிக்கறியையும்.. தெரு விளையாட்டையும் பிரிந்து செல்ல மாட்டேன் என்றதால் என் தாய் தமிழ் நாடு தன் தலை நகர் மதராசு பட்டிணத்தில் அவரை அரவணைத்து கல்வி அமுதூட்டியது..
கரீம் டாக்டர் அவர்களின் மூன்று புதல்வர்களும் இப்பள்ளியில் படித்தவர்கள்.
முஸ்தாக் அண்ணன்.
டாக்டர் முபாரக் அலி.
டாக்டர் சாதிக் அலி.
இவரும் நானும் 1~5 வகுப்பு வரை ஒன்றாக பயின்றோம்..
அவரது தந்தை டாக்டர் கரீம் அவர்களின் கிளினிக்கிலிருந்து சிரஞ்ச் ஊசி களை எடுத்துவருவார் ..
இரண்டு பேரும் சேர்ந்து ஓணானுக்கு ஊசி போட்டு பரிசோதிப்போம்.. (நாங்களாம் அப்பவே டாக்டரா திறிஞ்சவய்ங்க )
இரண்டு பேரும் ஒன்றாக தான் படித்தோம் அவரு மட்டும் டாக்டராயிட்டாரு..
மருத்துவ கல்லூரிக்கு என்னையும் கூட்டி சென்றிருந்தால்....
இரண்டு பேரும்..... டாக்டர் ஆகியிருக்க மாட்டோம்..
1ம் வகுப்பு ஆசிரியர் பொன்னையா பார்த்தால் மென்மையய்யா..
பிரம்பெடுத்தால் ரௌத்திரம் தான்..
அந்த neat & clean.. always fresh look அவரை பார்த்தே பழகிவிடுவர் மாணவர்கள்..
2ம் வகுப்பு கந்தசாமி அய்யா..
சாந்த சொரூபியாக.. சாதுவாக பயிற்றுவிப்பார்..
தேர்வுகளை சரியாக எழுதும் வரை அப்படி தான் காட்சியளிப்பார்..
தேர்வில் தேறாத மாணவர்களை..பார்த்ததும்.. சாது மிரண்டாலாக அவதாரம் எடுப்பார் ..
எங்களுக்கு அப்போதே கால்குலேட்டரையும்..UCMAC ம் எதிர்க்காலத்தில் வர இருப்பதை சிம்பாளிக்க புளியங் கொட்டையில் கணிதம் கற்பித்து அடையாளம் காட்டிய ஆசான்..
3ம் வகுப்பு செல்ல முத்து சார் (இன்றும் அதே தடித்த கருமையான மீசையுடன் காட்சியளித்து மூன்றாம் வகுப்பறையை காட்சிபடுத்துகிறார்)
என்னுள்ளே புதிய மொழியின் அதிர்வை தந்து ஆவலை தூண்டியவர்.. ஆங்கில பாடாங்களை கற்று தந்து..
4&5 ம் வகுப்பு
மாணிக்கம் சார் இவரது வரலாற்று பாட வகுப்புகள் கதை சொல்லி அனைத்து மாணவர்களும் வெகு இயல்பாக அறிந்து கொள்ளும் படி அனைத்து மாணவர்களும் ஆர்வமுடன் கவனிப்பார்கள்...
முத்துவாத்தியார் ஸ்கூல் (மருதா பள்ளி) பயின்ற மாணவர்களுக்கு..
அது ஆரம்ப கல்வி பயின்ற ஒரு பள்ளியாக மட்டும் கடந்து செல்ல இயலாது..
அன்றைய 'பள்ளப்பட்டி கல்வியின் இன்குபேட்டர்'
பொத்தி.. பொத்தி... பாதுகாத்து வளர்தெடுக்கும் குழந்தையை போன்று.. நம்மை போதித்து வார்த்தெடுத்தது..
<><><><><><><><><>
நான் ராஜாமுஹம்மது பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன்.
ஓரேடு கணக்கு என்றால் என்ன என்று எனக்கு தெரியாது.
அந்த ஓரேடு கணக்கு எனக்கு சொல்லிக் கொடுத்தால் நல்லா இருக்கும்.
<><><><><><><><><>
எனது பெயர்
கீரனூர்.முஹம்மது அலி ஜின்னா
நான் மருதா முஸ்லீம் உதவி துவக்கப்பள்ளியில் படித்த ஆண்டு 1994 முதல் 2000 ஆண்டு வரை அந்த பள்ளியில் நான் முதலாவதாக அடியெடுத்து வைத்த சம்பவம் இன்றும் என் நினைவிலும்,மனதிலும் அழியாமல் உள்ளது.
எனது வீட்டில் என்னை மருதா ஸ்கூலில் சேர்த்தார்கள் முதல் நாள் எனக்கு வயது இல்லையென்று அருகில் செயல்படும் தர்ஹா ஸ்கூலில் உட்காரவைத்தார்கள்.
திடீரென மாணிக்க சார் ஐயா வந்து என்னை ஒன்றாம் வகுப்புக்கு அழைத்து சென்றார்கள்.
அப்போதுதான் கண்டேன் இன்ன பிற ஆசிரியர்களான செல்லமுத்து சார் முதல் பிரேமா டீச்சர் வரை.
கையை தலை மேல் வளைத்து காதை தொட சொன்னார்கள் திறம்பட செய்தேன் செலக்ட் செய்தார்கள்.
மேலும் ஆசிரியர்கள் வெறும் ஆசிரியராகவே மட்டும் தெரியவில்லை உறவினர்கள் போன்றானார்கள்.
செல்லமுத்து சார் என்னை தனது சைக்கிளில் எத்தனையோ முறை அழைத்து சென்றிருக்கிறார்கள்.
நானும் எனது நண்பர்கள் சிலரும் எத்தனையோ முறை அவரது இல்லத்திற்கும் கற்கும்,
முருகேசன் சார் இல்லத்திற்கும் சென்றுள்ளோம்.
பள்ளியில் படிப்பை மட்டும் கற்றுத்தராமல் எங்களை பேங்க் வரை சென்று வரும் வாழ்வியலையும் அறிமுகப் படுத்தினார்கள்.
நானும் என் நண்பனும் தான் அடிக்கடி இந்தியன் வங்கிக்கும்,
ஏன் சந்தைக்கு கூட சென்றுள்ளோம்.
அன்றும் நாங்கள் அதனை இனிமையாகவே எடுத்துக்கொண்டோம்.
பழமையான குரு குல கல்வியை பெற்ற அனுபவமும் எங்களுக்கு கிடைத்தது.
ஐயா மாணிக்க ஆசிரியர் மிக மிக அன்பானவர்.
முருகேசன் சார் நன்றாக கண்டிக்க கூடியவர்.
அவரது அடி பொறுக்க முடியாதவர்கள் மாணிக்க சாரிடமே ஆறுதல் தேடுவார்கள்.
எல்லா ஆசிரியரும் அன்பானவர்கள் தான் ஆனால் கண்டிப்பு விஷயத்தில் மிக கண்டிப்புடனே இருப்பார்கள்.
மேலும் என்னைப் போன்ற நன்றாக படிக்கும் மாணவர்களை
ஒன்றாம் வகுப்பு மாணவர்களை ஆசிரியர் விடுப்பு நேரத்தில் கவனித்துக் கொள்ள மட்டுமின்றி ஏதாவது சொல்லிதர கூறுவார்கள்.
நம்மை அன்றே கற்பித்தல் திறனையும், பொறுப்பையும் கற்றுத்தந்திருக்கிறார்கள்.
நான் ஒரு முறை இவ்வாறு கத்தி கத்தி ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது எல்லா ஆசிரியரும் தங்களது வகுப்பை அமைதியடையச் செய்து சுற்றி நின்று எனது வகுப்பை பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
எனக்கு அந்த நிகழ்வு மிகுந்த உற்சாகத்தையும் எனக்குள் ஒரு தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியது.
அன்று கண்டிப்பு (அடி)என்ற ஒன்று ஆசிரியரிடம் இருந்ததால் மட்டுமே அனைவரும் கட்டுப்பாட்டுடனும்,
கவனத்துடனும் கல்வி கற்றோம்.
முத்துவாத்தியார் ஸ்கூல்
என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கும்,மருதா முஸ்லீம் உதவி துவக்கப்பள்ளி உண்மையிலேயே எங்களைப் போன்ற மாணவர்களுக்கு பேருதவிதான் செய்திருக்கிறது.
அன்றைய காலத்தில் எந்த பொருளாதார நிலையில் வாழும் மக்களையும் கல்வி கற்க உதவியுள்ளது.
அஸ்திவாரம் நன்றாக இருந்தால் தான் கட்டிடம் நன்றாக இருக்கும் என்பார்கள்...
எங்களுக்கு அஸ்திவாரமே ம.மு.உ.து பள்ளி என்பதால் மேற்படிப்பான உயர்நிலைப் பள்ளியிலும்,
கல்லூரியிலும், எளிமையாக தொடர்ந்து படிக்கக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது.
வெற்றியும் கண்டோம்..!
கற்ற கல்வியை பயன்படுத்தி வாழ்க்கையையும் நகர்த்துகிறோம்..!
இன்று சேலத்தில் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டும் இன்னும் பிற தொழில்களையும் மேற்கொண்டும் வருகிறேன்.
<><><><><><><><><>
ஒரு நண்பர்.
கட்டுரை மிக சிறப்பாகவும்,
வரலாற்று சுவடுகளின் சுவைகளை அருமையாக அள்ளித்தருகிறது.
நான் படித்த பள்ளி என்பதிலும் பெருமையடையச் செய்கிறது.
மாணிக்க சார்,
செல்லமுத்து சார்,
முருகேசன் சார்
ஆகியோரை நினைவுபடுத்தி என்னை சிறு வயதிற்கே அழைத்துச் சென்றுள்ளீர்கள்.
இன்றும் இந்த ஆசிரியர்கள் என்னை அடையாளம் கண்டு புன்முறுவலுடன் சந்திப்பது வழக்கமாக உள்ளது.
<><><><><><><><><>
கூலச்சி காஜா மொய்னுதீன் ஆகிய நான்.
நான் இந்த பள்ளியின் மாணவன் என்பதை பெருமையுடனும் தலை நிமிர்ந்தும் கூறுகிறேன்.
நான் சிறுவனாக இருக்கும் போது சற்று அதிகமாக குரும்பு செய்யக்கூடியவன்.
எனது வீடு பள்ளிக்கு மிக அருகில் உள்ளது.
ஒரு நாள் என் தாய் என் குரும்பை பொருக்க முடியாமல் பள்ளி வந்து செல்லமுத்து சார் அவர்களிடம்.
இவன் அதிகமாக குரும்பு செய்கிறான் அவனை நாலு அடி அடித்து அவனை திருத்தவும் என்று முறையிட்டார்.
செல்லமுத்து சார் மிகவும் கண்டிப்பானவர்.
என்ன நடக்கப்போகிறதோ என்று பயந்து நடுங்கிக்கொண்டு நான் இருக்கும் போது.
செல்லமுத்து சார் அவர்கள் என்னை அவர் அருகே வரும்படி அழைத்தார் நான் பயத்தில் நடுங்கியபடி அவர் அருகே சென்றேன்.
சார் அவர்கள் என் தோல் மீது கைபோட்டு என் தாயார் இடம்.
இவனையா குறை சொல்கிறீர்கள்
இவன் மிகவும் நல்லவனாச்சே.
இவன் நன்றாக படிக்ககூடியவனே.
இவனை பார்த்தா குறைகூறுகிறீர்கள் இவன் அப்படி செய்யமாட்டான்.
நீங்கள் ஏதாவது அவனுக்கு கோபம் வருமாறு பேசி இருப்பீர்கள் சரி சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று
என் தாய் இடம் கூறி அனுப்பி விட்டார்.
என் தாயார் வீடு வந்து மூலையில் உக்கார்ந்து விட்டார் என் சகோதரிகள் நடந்த விபரத்தை என் தாய் இடம் விசாரித்தனர்.
அதற்கு என் தாய் அடி போடி வாத்தியாரே இவனுக்கு ஆதரவாக பேசி என்னை குறை கூறுகிறார் என்று சொல்ல அதை நான் காதில் கேட்ட அடுத்த நொடி நம் ஆசிரியரே நம் மீது நல்ல எண்ணம் கொண்டுள்ளார் அவருக்கு நாம் துரோகம் இழைக்ககூடாது என்று அன்றைய தினமே என் குரும்புகள் அனைத்தையும் மூட்டை கட்டி மூலையில் எரிந்தேன்.
மாணவர்களில் குணம் அறிந்து அனுகுவார்கள் நான் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு முழுகாரணம் என் ஆசிரிய பெருந்தகைகளே.
<><><><><><><><><>
குர்ண குளத்துப்பட்டி முஜி அவர்கள் பின்னூட்டம்.
கரூர் மாவட்டத்திலேயே சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பென்ஷன் வாங்கிய முதியவர் என்ற சாதனையும் முத்து வாத்தியாருக்கே சாரும்.
<><><><><><><><><>
ஆஸிக் அலி அவர்களின் பின்னூட்டம்.
கையெழுத்து ,மற்றும் அ ஆ எழுதிப் பழக அங்கே பயின்றிருக்க வேண்டும்.
பி பி டி யின் முதல் கேம்பிரிட்ஜ்... நல்ல தலைசிறந்த மாணவர்களுக்கு டபுள் புரமோஷன் 4 வதிலிருந்து 6 வது தாவலாம்..
திங்கள் மதியம் விறகு எடுத்து போட 1/2 நாள் லீவ் கிடைக்கும்...
ஒண்ணாவது சார்,இரண்டாவது சார், மூனாவது சார் என மரியாதையாக அழைக்க வேண்டும்.
கணக்கு வாத்தியார் வாரத்தில் ஒரு நாள் புளியங்கொட்டை வைத்து கூட்டல் கழித்தல் சொல்லி கொடுப்பார்
ஒவ்வொரு மாணவ மாணவியின் வகையரா எல்லா வாத்தியாருக்கும் அத்துப்படி..
<><><><><><><><><>
வாலி பாபு அவர்கள்
நாம் எல்லாருக்கும் சொந்தமான ஊர் இது சின்ன கிராமமாக இருந்தாலும்
இந்த பள்ளியில் உள்ள விசயங்கள் பெரியது.
<><><><><><><><><>
பள்ளப்பட்டி சோஷியல் மீடியா அட்மீன் குழுவினர்களின் மதிப்புரை.
400 ஆண்டுகள் பழமைவாயந்த, நமதூரின் வரலாற்றை இத்தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வாசிக்கவும், அதை பதிவாக சேமித்து வைத்தும் வருகிறார்.
நமதூரின் வரலாற்று தொகுப்பாளர். ஜனாப் .அன்வர் பாஷா அவர்கள்..
உலகத்தின் அனைத்தும் சேனல்களிலும், 'சோசியல் மீடியா' க்களிலும், கொரானா மற்றும் அது சார்ந்த செய்திகளையே பார்த்து மிகவும் சோர்ந்துவிட்ட நிலையில்,,
தனது வரலாற்று தேடலைத்தேடி புறப்பட்டார் பாஷா அவர்கள்..
அத்தேடல் கல்வி சார்ந்த வரலாற்று தேடல்தான்.,
பள்ளப்பட்டியில் 1890 களில், கருப்பன கவுண்டர் அவர்கள்தான் முதன் முறையாக தனது வீட்டின் தின்னையை பள்ளிக்கூடமாக துவக்கிய முதல் பள்ளிக்கூடம்..!
இவர்களது குடும்பத்தினர் இன்னும் 110 ஆண்டுகளை கடந்து - கல்விப்பணியை தொடர்ந்து செய்துவருகின்றனர்.
ஆரம்பத்தில் செவ்வகவடிவ ரீப்பரில் மணல் கொட்டி கல்வியை துவங்கியப்பள்ளி பிறகு பனை ஓலையால், சிலேடு அங்குலத்தினாலும், தற்போது நோட்டு புத்தகம், கம்பியூட்டர் கீபோர்டு வரை சென்றுள்ளதுவரை இன்னும் இவர்களது தலைமுறையினர் கல்விச்சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடம் கல்வி கற்ற நமது முன்னோர்கள், இன்று வரை இந்த வரலாற்றை படித்து விட்டு கடந்த நினைவுகளை அசைபோடுகின்றனர்.
வரலாற்றை வாசிப்பது மட்டுமல்ல, அதை பாதுகாப்பது, வரலாற்று தொடர்புள்ளோர்களை சந்தித்து பேசுவது மிக சுவாரஷ்யமானது..
மறவாமல் வாசியுங்கள், கல்விநிலையங்கள் வசூல்நிலையமாக மாறிவரும் சூழலில்.
தங்கள் சொந்த சிலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற பெருமை இக்கல்வியாளர்களுக்குள்ளது..
நமதூரின் முத்தோர்கள், கல்வியாளர்கள் வரலாற்று தொகுப்பாளரான பாஷா அவர்களை தொடர்பு கொண்டு பல வரலாற்று பின்னனிகளை பேசி மகிழ்கின்றனர்..
இவ்வரலாற்றை மீண்டும் வாசிக்க வரலாற்று தொகுப்பாளரை தொடர்புகொண்டு பெறுங்கள்.
<><><><><><><><><>
வணக்கம். நான் முத்தவாத்தியார் பள்ளியின் ஒன்னாவது சார் திரு.பொன்னையா அவர்களின் மகன் மணிவண்ணன்.
ம.மு.உ.து. பள்ளி வரலாற்றை வாட்ஷப் மூலமாக பதிவு செய்ததை நானும் படித்தேன்.
மிக்க மகிழ்ச்சி. மிகவும் பெருமை.மிகுந்த நெகிழ்ச்சி.
1990 ல் எனது தந்தை பணி ஒய்வு பெற்றபின் 1992 மே மாதம் எங்கள் சொந்த ஊரான மாலமேடு (மணல்மேடு அல்ல)கிராமத்திற்கு குடிபெயர்ந்தோம்.
அதன்பின்பு 2000 முதல் 2007 வரை அரவக்குறிச்சியில்தான் குடியிருதோம்.
தற்போது தாராபுரத்தில் வசித்துவருகிறோம்.
தந்தையார் நலமுடன் இருக்கிறார்.தற்போது 89 வயது.ஞாபகம் சிறிது தேய்ந்துவருகிறது.
அவரை இன்னும் நமது ஊர்(நான் அவதரித்தது பள்ளபட்டியில் தான்.அண்ணாநகர் சேகாண்டி பாஷா அவர்களின் வீட்டில்தான்). கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது
இன்று வரை எனது இல்லம் வரை தொடரும் ஆத்ம நண்பன் சேகாண்டி பாபு(மாஷா பாபு)எனும் அப்பாஸ் அவர்கள் .
நானும் 4,5 ஆம் வகுப்புகளை இந்தப்பள்ளியில்தான் படித்தேன். 5ஆம் வகுப்பு நிறைவு நாளன்று Farewell party ஒன்று நடக்கும்.
அதற்கு இணையான ஒன்று இன்றுவரை கண்டதில்லை.
ஒரிஜினல் நன்னாரி சர்பத் + எலுமிச்சம்பழம்+ சர்க்கரை. அத்துடன் பிஸ்கட்+ரஜாக் கடை மிக்ஸர். அடடா ஆனந்தம்.
அப்பொழுது யாரும் தண்ணீர் கொண்டுபோகமாட்டோம். இடைவேளையில் பள்ளியைச்சுற்றிய வீடுகளில் மாணவர்கள் தண்ணீர் கேட்டுப்பருகுவார்கள்.
ஆசிரியர்களுக்கு செம்பில் தண்ணீர் தருவார்கள்.
பள்ளியை அடுத்து வடக்குப்பக்கம் இருக்கும் SP. சௌகத் அலி அவர்களின் வீடுதான்.
என்னுடன் SP. முபாரக்அலி படித்தார். அவர்களின் சகோதரி அபிபுன்னிஸாதான் தண்ணீர் கொடுப்பார்கள்.
C.K. சையது அலி,O.M.உபைதுரஹ்மான்,கார்சா மளிகைக்கடை புதல்வர்கள்,
ஷா நகரில் இருந்து அப்துல்கலாம்,ஜைனுலாப்தீன் பாப்புலர் அபு இன்னும் பலர்.
1958ஆம் ஆண்டு முதல் 1990 வரை 32 ஆண்டுகள் எனது தந்தை பணியாற்றினார்கள்.
ஒரே பள்ளி ஒரே இடம் ஒரே வகுப்பு ஒரே இருக்கை...சாதனை.
ரம்ஜான் வந்தால் வேட்டி,சட்டடைத்துணி அன்பளிப்பாக நிறைய வந்துசேரும்.
பக்ரீத்துக்கு மூன்று நாட்களும் கறியும் பிரியாணியும் வந்து குவியும்.
பள்ளிப்படிப்பை முடித்து வியாபாரத்துக்குச் சென்ற மாணவர்கள் ஊர் திரும்பியதும் வீட்டிற்கு வந்து நினைவுப்பரிசாக ஏதாவது தந்துவிட்டு நலம் விசாரித்துட்டு தவறாமல் என் அம்மா (சந்தைப்பேட்டை பள்ளி ஆசிரியை இரஞ்சிதம்) தரும் தேநீரையும் பருகிவிட்டுச்செல்வார்கள்.
பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் தினமும் ஒவ்வொரு மாணவரும் மேசைக்கருகில் வந்து புத்தகத்தின்மேல் ஆட்காட்டிவிரலை வைத்து பாடம் வாசிக்கவேண்டும். தவறானால் முட்டியில் ஸ்கேலால் அடி விழும்.
1...2..100 வரை ஏறு வரிசை இறங்கு வரிசை, 2...4....100 வரை, 5...10...100 வரை ஏறு வரிசை இறங்கு வரிசை இவை அனைத்தும் தினசரி பாடங்கள்.
நான் 4,5 வகுப்புகள் மட்டுமே அங்கு படித்தேன்.
மாணிக்கம் ஸார் ஒவ்வொரு மாணவனையும் அழைக்கும் அழகே அலாதி.
டேய் கான்ரத்தான், மாமாஞ்சி, கீரனூரான்,மார்க்கம்பட்டியான்,செல்லு, கூளச்சி, திண்டுக்கல்லான் என வகையராக்கள் வலம் வரும்.
ரோஜாப்பாக்கின் அடிமை அவர். அடிக்கடி பாக்கு போடுவார்.
நடந்தே ராஜாப்பேட்டைத் தெருவிலிருந்து புளியமரத்தெருப்பள்ளிக்கு வருவார். மதிய உணவிற்கும் வீடு சென்று திரும்புவார்.அதிகம் கோபப்படாதவர்.
இன்னும் நிறைய நினைவுக்குளத்தில் .நிறைவு செய்கிறேன் நிமிடங்கள் நீளுவதால்.
நன்றி.
பொன்னையா ஸார் அவர்களின் மகன்.மணிவண்ணன்.
<><><><><><><><><>
அருமை நிறைந்த பள்ளப்பட்டி எங்கள் இஸ்லாமிய சகோதரர்களுக்கு முத்து வாத்தியார் குடும்பத்தினர் சார்பாக வணக்கங்கள்.
வற்றாது வளங்கொழிக்கும் ஆறுகளைக்கொண்டோ.
வானுயர்ந்த மலைகளை கொண்டோ ஒரு ஊரை மதிப்பிட முடியாது.
மக்களின் மனவளத்தைக்கொண்டே அவ்வூரின் வளத்தை மதிப்பிடமுடியும்.
அது போல் இந்த முத்து வாத்தியார் பள்ளியின் வெளிச்சத்திற்கு வராத பல நிகழ்வுகளை கண்முன் நிறுத்திய தங்களுக்கு முத்த வாத்தியார் குடும்பத்தினரின் நன்றிகள் பல.
எங்கள் முன்னோர்களை பத்து தலைமுறைக்கு முன் சோழவந்தானில் இருந்து எந்த அன்புடனும் பாசத்துடனும் இவ்வூர் மக்கள் அழைத்து வந்தார்களோ.
அதே அன்புடனும் பாசத்துடனும் இந் நாள் வரை எங்களுடன் இவ்வூர் சகோதர சகோதரிகள் பழகி எந்த வித சிறு பாகுபாடும் இன்றி எங்களை பாதுகாப்புடன் வைத்துள்ளார்கள்.
இதன் காரணமாகவே எங்கள் குடும்பம் கடந்த 300 ஆண்டுகளாக கல்வி சேவை செய்ய முடிகின்றது.
பறவைகளுக்கு இரு சிறகுகள்.
மனிதனுக்கு இரு கால்கள் இரு கைகள் இரு கண்கள்.
புகை வண்டிக்கு இரு தண்டவாளங்கள் இருப்பது போல்.
மாணவர்களுக்கும் இரு குணங்கள் இருக்க வேண்டும்
ஒன்று அடக்கம் மற்றொன்று குரு பக்தி இந்த இரண்டும் நம் ஊர் மாணவர்களிடம் பெறும்பாலும் இருக்கின்றது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என ஔவையார் வாக்குப்படி.
இவ்வூர் மக்கள் இருக்கின்ற காரணத்தால் எங்களால் தொடர்ந்து கல்வி சேவை செய்ய இயலுகிறது.
ஆங்கிலேயர்கள் கூட இந்த நாட்டை 200 வருடங் கள்தான் ஆண்டார்கள்.
ஆனால் நாங்கள் 300 ஆண்டுகளாக இவ்வூரில் கல்விசேவையாற்றி வருகிறோம்.
300 ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து கல்வி சேவை செய்வது என்பது மக்களின் ஆதரவு இல்லாமல் அரங்கேறாது.
இது இவ்வூர் மக்களின் ஆதரவையும் அன்பையும் கொண்டே வெற்றி பெற முடிந்தது.
எழுத்தறிவித்தவன் இறைவனுக்கு சமம் என்று குரு பெருவாக்காக எண்ணி.
எங்கள் குடும்பத்தின் மீது அன்பும் அறவனைப்பும் கொண்டுள்ள இவ் பள்ளப்பட்டி மக்கள் இருக்கும் வரை.
இன்னும் பல தலைமுறைகள் இந்த கல்விச் சேவை ஆற்றுவோம் என உறுதி கூறுகிறோம்
மத நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்வூரை அன்றும் கண்டோம் இன்றும் காண்கிறோம் இனிமேலும் காணுவோம்.
நன்றி
🙏🏽
முத்து வாத்தியார்
குடும்பத்தினர்கள்.
<><><><><><><><><>
சுருக்கமான முடிவுரை.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
ஆனால் இந்த பள்ளியில் படித்த ஏட்டுச்சுரைக்காய்(கல்வி) முழு வாழ்க்கைக்கும் உதவும் என்றும்.
முத்தவாத்தியார் ஸ்கூலுக்கு பள்ளிக்கூடம் என்ற பெயரே தவிர
அது பள்ளிக்கூடம் இல்லை
பல்கலைக்கழகம் என்று சொல்லி நிறைவு செய்கிறோம்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱