㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀
பள்ளப்பட்டி -அரபி ஹஜரத் அவர்கள்
㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀㊀
பாரம்பரியமிக்க பள்ளப்பட்டியில் வாழ்ந்து மறைந்தும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியோர்கள் நல்லோர்களில் குறிப்பிடும் படியாக பல பெரியோர்களின் பட்டியலில் அரபி ஹஜரத் அவர்களுக்கு தனி இடம் உண்டு.
அரபி ஹஜரத் என்று தென்னாடெங்கும் அன்பாக அழைக்கப்பட்ட இவர்களின் இயற் பெயர் முஹம்மது அப்துல் அஜீஸ் என்பதாகும்.
மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் வம்சாவழியிலும் புது சாயபு ஹஜரத் அவர்களின் பேரனும் ஷைய்கு அப்துல் காதிரி ஆலீம் என்கிற (சூஃபி ஹஜரத்) அவர்களின் மகனுமாகிய அரபி ஹஜரத் அவர்கள் 1901 -ம் ஆண்டு பள்ளப்பட்டியில் பிறந்தார்கள்.
இவர்கள் சிறு பிராயத்திலேயே பல நற்குணங்கள் கொண்ட சீலராக திகழ்ந்தார்கள்.
இவர்களின் தந்தையார் உலக விசயங்களில் கவனம் செலுத்தாமல் இறை ஞானத்தில் திளைத்த ஞானியாகத் திகழ்ந்தார்கள்.
எனவே இவர்கள் தம் பெரிய சகோதரர் சாதாத் சாஹிபு அவர்களின் முயற்சியால்.
தன் மாமு மௌலவி U.M. அப்துல் வஹ்ஹாப் சாஹிபு ஆலீம் அவர்களிடம் அரபி கற்றார்கள் பின்பு 1914ல் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதர்ஸாவில் சேர்ந்து சங்கைக்குரிய அஃலா ஹஜரத் என்று அழைக்கப்பட்ட அப்துல் வஹ்ஹாப் ஹஜரத் குத்திஸஸிர்ரஹூ அவர்களிடமும் மற்றும் சங்கைக்குரிய உலமாக்களிடமும் கல்வி கற்று 1919-ல் ஸனது பட்டம் பெற்று ஊர் வந்த இவர்கள் பள்ளப்பட்டியிலேயே ஓராண்டு காலம் ஷைன் தோல் வியாபாரம் செய்து வந்தார்கள்.
அதன் பின்னர் ராஜகிரியிலும் கூத்தாநல்லூரிலும் மதரஸாக்களில் மாணவர்களுக்கு மார்க்க கல்வி கற்பித்துச் சிறந்த ஆசானாக விளங்கினார்கள்.
அது சமயம் இவர்களின் பாட்டனார் புது சாஹிபு ஹஜரத் அவர்களுடைய நினைவாகக் கட்டப்பட்ட மதரஸா மக்தூமியாவில் புது சாஹிபு அவர்களின் மறைவுக்குப்பின்பு சரியான ஆசிரியர்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் கல்வி கற்பிக்கும் பணி தடைபெற்றிருந்தது.
பள்ளபட்டி ஊர் பெருமக்களில் சிலர் தங்கள் பாட்டனார் விட்டு சென்ற பணியைத் தாங்கள் நிறைவு செய்யுங்கள் என்று அன்புக்கட்டளையிட்டதை ஏற்று 1928-ல் பள்ளபட்டி பெரிய மதரஸா என்று அழைக்கப்படும் மக்தூமியாவில் ஆசிரியராக பொறுப்பேற்று 1963-ம் வருடம் வரை அதாவது 35 ஆண்டுகள் மார்க்க கல்வியை போதித்து வந்தார்கள்.
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இவர்களிடம் கல்வி கற்ற பலர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார்கள்.
இன்றும் விளங்குகிறார்கள்.
அவர்களில் குறிப்பாக காலம் சென்ற உத்தம பாளையம் அல்லாமா அபூபக்கர் ஹஜரத் அவர்களும் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்திலும் கேரளா பட்டிக்காடு அந்நூரியா மதரஸாவிலும் காயல் பட்டினம் மதரஸாக்களில் முதல்வராகவும் மன்பஉல் அன்வார் அல் மஹல்லரத்துல் காதிரியா நாஜிராகவும் பணியாற்றிய அல்லாமா அப்துல்லாஹ் ஹஜரத் அவர்களின் தமையனார்.
அல்லாமா முஹம்மது இப்ராஹீம் ஹஜரத்.
போன்றோர் இவர்களுடைய மாணவச்செல்வங்களே ஆவார்கள்.
தேவ்பந்த் ஹஜரத் கிப்லா என்று அழைக்கப்படும் மௌலவி
என்.எம். முஹம்மது இப்ராஹீம்.
ஹஜரத் அவர்களும் மேற்கு மதரஸாவில் அரபி ஹஜரத் அவர்களிடம் அரபி கல்வியை 4 ஆண்டுகள் கற்றவர்களே.
அரபி ஹஜரத் அவர்கள் காலத்தில் மதரஸாவாக இருந்ததை அரபி கல்லூரியாக மாற்றி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக மத்தூமியா மதரஸாவை மாற்றினார்.
மேலும் அரபி ஹஜரத் அவர்களிடம் ஓதிய ஓவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களின் விஷேச துஆ உண்டென்று அவர்களிடம் ஓதிய மாணவர்கள் அனுபவப்பூர்வமாக கூறுகின்றனர்.
இவர்களுக்கு ஆறு ஆண் மக்களும் ஆறு பெண் மக்களும் உள்ளர்.
அரபி ஹஜரத் அவர்கள் எப்பொழுதும் எவரிடமும் கடிந்து பேச மாட்டார்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள்.
மார்க்க தீர்ப்புக்கலையில் சிறந்து விளங்கினார்கள்.
நம் மார்க்கத்தில் பிஃக்வு கலை
ஹதீஸ்கலை பஃத்வாகலை
என்று ஏழு கலைகள் உள்ளது.
பெரும் பாலானவர்கள் ஏதாவது ஒரு கலையில் தான் சிறந்தவர்களாக விளங்கமுடியுமாம்.
ஆனால் ஹஜரத் அவர்கள் ஏழு கலைகளில் சிறந்து விளங்கி எந்த சந்தேகம் கேட்டாலும் கித்தாபுகளை பார்த்து சொல்லாமல் உடனடியாக சொல்லும் வல்லமை பெற்றவர்.
தன்னலம் கருதா இம் மேதையை பள்ளபட்டி மதரஸாவில் பணி புரிய அழைத்த சமயம்.
இவர்களுக்கு கூத்தாநல்லூர் மதரஸாவில் சாப்பாட்டு மற்றும் போக்குவரத்து சிலவுகளும் கொடுக்கப்பட்டு வருடம் ஒன்றுக்கு ரூபாய் 400 ம் ஊதியமாக கொடுக்கப்பட்டு வந்தது.
அப்படி இருந்தும் தன் சொந்த ஊர் மதரஸாவில் எந்த வித சிலவு தொகைகளையும் பெற்றுக்கொள்ளாமல் வருடம் ஒன்றுக்கு 360 சம்பளம் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டு பணியாற்றிய இவர்கள் மறு வருடம் மதரஸாவிற்கு வசூல் சரியில்லை என்று நிர்வாகம் கொடுத்த ரூபாய் 300 சம்பளத்திற்கு ஒப்புதல் அளித்தார்கள்.
அதை அடுத்த வருடம் இன்னும் குறைவாக ரூபாய் 250. ஐ மதரஸா நிர்வாகம் கொடுத்ததையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட பண்பாளர் இவர்கள்.
அது சமயம் திண்டுக்கல் டவுன் பள்ளி மதரஸாவில் தங்களுக்கு சாப்பாடு மற்றும் போக்குவரத்து சிலவுகளையும் கொடுத்து வருடம் ஒன்றுக்கு ரூபாய் 450 தருகிறோம் என்று அழைத்தபோதும் அன்புடன் மறுத்து அதே 250 ரூபாய் வருமானத்தில் உள்ளூர் மதரஸாவிலேயே பணிபுரிந்தார்கள்.
அவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் மாணவர்கள் பலர் அரபி ஹஜரத் அவர்கள் வீட்டிற்க்கே வந்து மார்க்க கல்வி கற்றுச்சென்றார்கள்.
ஹஜரத் அவர்களிடம் கல்வி கற்றவர்கள் பல ஆயிரம் பேர்கள் அதில் பல பேர்கள் இறைவன் அழைப்பை ஏற்று சென்று விட்டார்கள் மீதி இருப்பவர்கள் இன்றும் மார்க்கபணி செய்து வருகிறார்கள்.
கடைசி காலம் வரை மார்க்கப்பணியே குறிக்கோளாகக்கொண்ட. இவர்கள்.
போதிய வருமானம் இல்லாமல் சில சமயங்களில் மர வியாபாரமும்.நெய் வியாபாரமும் செய்து வந்தார்கள்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஹஜரத் அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகவும் பேணுதலாக நடந்தவர்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
இவர்கள் பாக்கியாத்தில் பாடம் பயின்று கொண்டிருக்கும் போது இவருடன் மிகவும் நெருக்கமாக ஒரு மாணவர் இருந்துள்ளார்.
இந்த இருவரிடத்திலும் கட்டிக் கொள்ள மூன்று வேஸ்டிகள் தான் இருக்கும் அதாவது இரண்டு வேஸ்டிகளை இருவரும் கட்டி இருப்பார் மீதி உள்ள ஒருவேஸ்டியை துவைத்து காயப்போட்டு இருப்பார்கள்.
இந்த மூன்று வேஸ்டிகளை இருவரும் மாற்றி மாற்றி கட்டுவார்கள் ஒரு வேஸ்டி கிழிந்து இனிமேல் கட்டவே முடியாது என்ற நிலை வரும் போது தான் மறு வேஸ்டி வாங்குவார்கள்.
அரபி ஹஜரத் அவர்கள் பள்ளப்பட்டியில் சிறிது காலம் நெய் வியாபாரம் செய்தார்.
நெய்யை அளந்து கொடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் கொடுப்பார்களாம்.
காரணம்...
நெய் உலர் நிலையில் இருக்கும் போது ஒரு எடையிலும் திரவ நிலையில் இருக்கும் போது ஒரு எடையிலும் இருக்குமாம் இதை கவனத்தில் கொண்டு வாங்குபவர்களுக்கு குறை ஏற்படக்கூடாது என்று அதிகமாகவே வழங்கி மிகவும் பேணுதலாக இருப்பார்களாம்.
அடுத்து..
அவர் வாழ்ந்த வீட்டிற்கு அடுத்த தெருவில் இவர்களின் அக்கா ஒருவர் வசித்தார்.
அவர் பெயர் ரொக்கையம்மா.
அவர் வீட்டிற்கு செல்ல இவர் வசிக்கும் வீட்டிற்கும் அக்கா வசிக்கும் வீட்டிற்கும் இடையில் குறுக்கே யாரோ ஒருவரது காலி மனை இருந்துள்ளது அந்த மனை வழியாக எல்லோரும் போய் வருவார்கள்.
ஆனால் ஹஜரத் அவர்கள் அந்த வழியாக செல்லாமல் சுற்றிக்கொண்டுதான் செல்வார்களாம்.
காரணம் கேட்க பட்ட போது அடுத்தவர்கள் இடத்தில் அவர்கள் அனுமதி இல்லாமல் கால் வைப்பது ஹராம் என்று விளக்கம் கொடுத்தார்களாம்.
அடுத்து..
இவர் வாழ்ந்த காலத்தில் முத்தப்பாட்டு குத்தூஸ் என்பவர் பள்ளப்பட்டி சேர்மனாக இருந்துள்ளார்..
தைக்கால் தெரு சுக்கான் குழி பகுதிகளில் பல புறம்போக்கு இடங்கள் இருந்துள்ளது அதை வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வீடு கட்டிக்கொள்ளச்சொன்னார் அது சமயம் ஹஜரத் அவர்களுக்கும்
ஒரு இடத்தை தரும் போது அதை ஹஜரத் அவர்கள் ஜாய்ஸ் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.
இவர் வீட்டில் சாக்கில் திரை கட்டித் தான் தொங்க விட்டு இருப்பார்களாம்.
போதிய வருமானம் இல்லாமல் சில சமயங்களில் மர வியாபாரமும் செய்து வந்தார்கள்.
இவர் ஒரு சமயம் குர்ஆன் கித்தாபுகளும் விற்பனை செய்துள்ளார் அந்த நேரத்தில் வருடம் ஒரு முறை அனைத்து குர்ஆன் கித்தாபுகளை எண்ணி அதன் தொகையை கணக்கிட்டு அதன் படி அரிசி வாங்கி அனைத்து அரிசிகளையும் துள்ளியமாக ஒரு அரிசி கூட விடாமல் ஜாக்காத் கொடுப்பார்களாம்.
அன்றைய காலத்தில் மின்சாரம் வீட்டுக்கு ஒரு இனைப்பும் தண்ணீர் மோட்டருக்கு தனி இனைப்புமாக இரண்டு தனித்தனி இனைப்பு தருவார்களாம் சில சமயங்களில் ஒரு இனைப்பில் மின்சாரம் தடை பட்டாலும் மறு இனைப்பில் மின்சாரம் இருக்குமாம்.
ஒரு நாள் சின்ன பள்ளிக்கு இவர் தொழ வருகிறார் ஊரில் மின்சாரம் தடைபெற்றுள்ளது ஆனால் பள்ளியில் விளக்கு எரிகிறது.
இதை கவனித்த ஹஜரத் ஊரெங்கும் மின்சாரம் இல்லை இங்கு மட்டும் எப்படி விளக்கு எரிகிறது என்று கேட்க அருகில் இருந்தவர்கள் வீடுகளுக்கு வரும் மின்சாரம் தடை பட்டுள்ளது ஆனால் மோட்டாருக்கு வரும் மின்சாரம் உள்ளது அதை மாற்றி எரிய விட்டுள்ளோம் என்று கூறினார்கள்.
எதற்காக உபயோகப்படுத்த ஒரு பொருள் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதுக்காக மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
மாற்றி உபயோகப்படுத்தினால் அது ஹராம்.
அதனால் அந்த விளக்கு வெளிச்சத்தின் கீழ் நான் நின்று தொழ மாட்டேன் என்று சொல்லி வெளியேறினார்.
அவர்களை பற்றி சொல்ல இன்னும் நிறைய விசயங்கள் உள்ளது அத்தனையும் சொல்ல இந்த பக்கம் இடம் கொள்ளாது.
ஹஜரத் அவர்கள் நம் முன்னே வாழ்ந்து மறைந்ததால் அவர்களின் சிறப்பு நமக்கு தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற ஊர்களில் இவர்கள் சிறப்பு தெரிந்து அங்கு வசிக்கும் மார்க்க அறிஞர்கள் இவர்களை மிகவும் மதிப்பார்கள்.
இவர்கள் தன் 70வது வயதில் 1971 ஜுலை 19-ல் ஹிஜ்ரி 1391 ஜமாதுல் அவ்வல் பிறை 25-ல் (19-7-1971)காலமானார் (இன்னாலில்லாஹி..)
இவர்களின் குடும்ப பாரம்பரிய வழக்கப்படி பாட்டனார் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் தர்ஹாவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அவர் வஸியத் செய்த படி அன்னார் அவர்களின் கபர் எடுத்துக்கட்டாமல் இன்று வரை தர்ஹா வளாகத்தில் இருப்பதை காணலாம்.
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱
ஆசிரியர்:-
அன்வர் பாஷா அன்வாரி
▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱