▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

பள்ளப்பட்டி வணிகம் அன்று முதல் இன்று வரை  பகுதி 3

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

 தமிழக வியாபாரத்தையே  தலைகீழாக புரட்டி போட்டகடைகள்

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

     


பாரம்பரிய மிக்க பள்ளப்பட்டி மக்களின் அகராதியில் 'முடியாது' என்ற வார்த்தையே இல்லை. 


எந்தப் பொருளாக இருந்தாலும், அதனை நுகர்வோரின் தேவைக் கேற்பக் கொண்டு சேர்ப்பதில் இவர்கள் வல்லவர்கள்.


பாரம்பரிய வணிகத்தோடு திருப்தி அடைந்துவிடாமல், காலத்திற்கு ஏற்பப் புதிய உத்திகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் புகுத்தி, வியாபார உலகையே தங்களின் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பவர்கள். 


அந்த வரிசையில் சென்னை மக்களையே திரும்பி பார்க்கவைத்தவர்கள்.


பள்ளப்பட்டி மக்கள் பெரு நகரங்களில் மிக பிரமாண்டமாக ஷப்பிங்கடைகளை அமைத்து பொருள்களை காகிதத்தில் மடித்து கொடுக்கும் நிலையை மாற்றி.

பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்து விற்பனை செய்து அமோகமாக வெற்றி நடை போட்டார்கள்.


அப்போது சென்னையில் நமதூராரின் ஒரு ஷாப்பிங்கடையில் கமல் ஹாசன் நடித்த ஒரு திரைப்படத்திற்கான வெளிப்புற படப்பிடிப்பு காட்சியாக சில காட்சிகள் படம் பிடித்து திரைப்படத்தில் அந்த கடை இடம் பெற்றது அந்த காட்சி மக்களிடையே பிரபலமானது அதை தொடர்ந்து அதே போல் உள்ள கடைகளையும் பல ஹிந்தி தமிழ் திரைப்படங்களுக்கு படம் பிடித்து காட்சி படுத்தினார்கள்.


அப்போது பெசன்ட் நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் கடையில் பிரபலமான ஒரு ஹிந்தி படத்திற்கான சூட்டிங் நடைபெற்றது.

அதில் ஹிந்தி நடிகை ஹேமாமாலனி முட்டை வாங்க வருவது போல் காட்சி படம் பிடிக்கப்பட்டது.


இதனால் திரைப்பட நட்சத்திரங்களும் பிரபலமானவர்களும் வாடிக்கையாளர்களாக மாறி ஷாப்பிங் செய்ய பெரிய கடைகளை நோக்கி நேரில் வர ஆரம்பித்தனர் அதன் பிறகு தான் பொது மக்களும் ஷாப்பிங் செய்ய கடைகளை நோக்கி வர ஆரம்பித்தனர்.


முதன் முதலில் ஷாப்பிங் செய்ய பொதுமக்களை ஆர்வமூட்டி கடையை நோக்கி வரச் செய்தது நம்மவர்களே.


இதனால் அந்த அந்த கடைகள் மேலும் பிரபலமடைந்தது இந்த கால கட்டத்தில்தான் சென்னையில்  பெரிய பெரிய ஷாப்பிங் மால்களை நமதூரார்கள் நிறுவினர்.


1984 ம் வருடம் கீழ்பாக்கத்தில் பத்து ஆயிரம் சதுர அடியில் ஒரு இடம் வாடகைக்கு வந்தது அவ்வளவு பெரிய இடத்தை யாரும் வாடகைக்கு பிடிக்காத நிலையில் நாம் ஏன் அந்த இடத்தை பிடித்து மிக பிரமாண்டமாக ஒரு கடை திறக்ககூடாது என்று சிந்தித்து.

தைரியமாக அந்த கடையை பிடித்து வேலைகள் ஆரம்பித்தனர்.


அதில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தனித்தனியாக காட்சி படுத்தி விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்து கொள்முதல் செய்தார்கள்.


அதன் படி...


சென்னை மையப்பகுதி கீழ்பாக்கத்தில் பத்து ஆயிரம் சதுர அடியில் முதன் முதலாக மிகப் பிரமாண்டமான ஷாப்பிங் மால் யாரும் நினைத்துக் கூட பார்க்காத புதுமையான முறையில் புதுமையான பெயரில். நிறுவினார்கள் அந்த கடையின் பெயரே அன்று  வித்தியாசமாக இருந்தது.


சென்னை மக்கள் இவ்வளவு பெரிய கடையா..?  என்று ஆச்சரியத்துடன் வாய் பிளந்து அந்த கடையை நோக்கி படை எடுத்தனர் 28:5 :1985.ல் மம்மி டாடி

என்ற பெயரில் NO 237.கீழ்பாக்கம் கார்டன் ரோடு கிழ்பாக்கம் சென்னை 10 என்ற முகவரியில் மிகப்பிரமாண்டமுறையில்

வட்டக்கட்டு சவுக்கத் அலி . ஹாஜியார் அவர்கள் தலையூர் குத்தூஸ் ஹாஜியார் அவர்கள் அவரின் தம்பி தலையூர் மைதீன் பாட்ஷா ஹாஜியார் (மையன்னா)அவர்கள்.

கூட்டு முயற்சியில் கடையை துவக்கினர்.


இந்த கடை தான் பல புதுமையான வியாபார யுக்தியை கடைபிடித்து தமிழகத்தின் வணிக வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்டது.


இந்தியாவில் மும்பையில் அக்பர்"ஸ் என்ற பெயரில் முதல் பிரமாண்டமான முறையில் ஒரு கடை திறக்கப்பட்டது அதன் பிறகு சென்னையில் இரண்டாவதாக பிரமாண்டமான இந்த கடை திறக்கப்பட்டது.


தென்னிந்தியாவின்  பிரமாண்டமான அதிக பரப்பளவு கொண்ட முதல் கடை இது தான்  என்ற பெருமையை கொண்டுள்ளது.


அதன் பிறகுதான் பெரிய பெரிய வணிக மால்கள் தோன்றியது பல புதுமையான திட்டங்களுக்கு இக்கடை தான் முன்னோடியாக திகழ்கிறது.


முதல் முதலில் ஒரு கடையில் மக்களே பொருள்களை கையில் எடுத்து தேர்ந்தெடுக்கும் Self service முறையை அறிமுகப்படுத்தினார்கள் அது மக்களை மிகவும் கவர்ந்தது.


மம்மி டாடி கடையில் மளிகை பொருட்களுடன் பித்தளை அலுமினியம் பிளாஸ்டிக் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் என்று வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே வாளாகத்திற்குள் ஒவ்வொரு பொருட்களுக்கும்  15வு20 அளவுகளில்

தனித்தனி செக்ஸனாக (தனித்தனி கடைகளாக) அதிக அளவில் பொருட்களை வைத்து காட்சி படுத்தினார்கள்.


இதன் மூலம் வீட்டுக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கொண்டு வந்தார்கள் சின்ன குத்தூசி முதல் அனைத்து பொருட்களும் அங்கு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினார்கள்.


கடையை இரண்டு மாடியாக அமைத்து தனித்தனியாக பொருட்களை காட்சி படுத்தினார்கள் அப்போது பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளுக்கு வாழ்த்து அட்டைகளை பல டிசைன்களில் அறிமுகப்படுத்தி தனி கவுண்டர்களில் காட்சி படுத்தினர்.


அப்போது வெளிநாட்டு பொருள்களுக்கு மிகவும் மதிப்பு அதிகம் அதை கருத்தில் கொண்டு புதுமையான வெளிநாட்டு பொருட்களையும் பல நவீனமான பொருட்களையும் விற்பனைக்கு வைத்தார்கள் அதை ஆர்வமுடன்

எங்கெங்கோ இருந்தெல்லாம் மக்கள் வந்து வாங்கினார்கள்.


இதை எல்லாம் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட சில ஸ்நாக்ஸ் களையும் விற்பனை செய்யலாமே என்று யோசனை செய்து கடையின் உள் பகுதியில் அதற்கென தனி இடத்தை ஒதுக்கி வட நாட்டு உணவுகளான  கஃவாப். கட்லெட்.சிக்கன் ரோல். சமோசா.

அதை சார்ந்த சில ஸ்நாக்ஸ்களையும்.

அத்துடன் நமது பள்ளப்பட்டியின் சிறப்பு வாய்ந்த ஹல்வா பூந்தி மைசூர் பாக்கு போன்றவைகளுடன் ஐஸ் கிரீம் பார்லர்களையும் அமைத்தார்கள்.


அது மக்களை மேலும் கவர்ந்து ஷாப்பிங் செய்யும் புது அனுபவத்தை ஏற்படுத்தியது.


இந்த கடை வரும் கஸ்டமர்கள் அனைவர்களும் சமூகத்தில் பிரபலமடைந்தவர்கள் சினிமா நட்சத்திரங்கள் போன்ற V.I.P.களே அதிகம்.

அதே போல் முதல் முதலில் கார் பார்க்கிங் வசதியுடன் கடை வந்தது இந்த கடை தான்.

இந்த கடையின் அமைப்பை போல்

இன்று இருக்கும் பெரிய பெரிய ஷாப்பிங் மால் களிலும் அந்த அமைப்பு கிடையாது.


இன்று இருக்கும் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்கு இக் கடையே முன்னோடி.


கடை திறக்க சில நாட்களுக்கு முன் இந்த பிரமாண்டமான கடைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்தித்தனர்.


அதில் பல பெயர்கள் பரீசிலித்த வேலையில் மையன்னா" அவர்கள் மம்மி டாடி என்று யாரும் வைக்காத பெயரை நாம் வைப்போம் என்றார் அனைவர்களுக்கும் ஆச்சரியம்

இந்த பெயரை எப்படி வைப்பது என்றனர்.


அதற்கு "மையன்னா" அவர்களே கீழ் காணும் விளக்கத்தையும் கொடுத்தார்.


பொதுவாக படித்து நல்ல வேலையில் உள்ளவர்களும் V.I.P.களும் தான் ஷாப்பிங் செய்ய வருவார்கள் அவர்களின் பிள்ளைகள் நாகரீகமாக தன் பெற்றோர்களை மம்மி டாடி என்று அழைப்பார்கள் மம்மி டாடி என்று பெயர் வைத்தால் பிள்ளைகள் மம்மி டாடி என்று சொல்லும் போது எல்லாம் இந்த கடையின் பெயரும் நினைவில் வரும் அடுத்து பெற்றோர்கள் தன் பிள்ளைகளை எப்படி பாசத்துடன் பழகுவார்களோ அதே போல் நாங்களும் பாசத்துடன் பழகுவோம் என்று உணர்த்தும் படி நமது கடை விளம்பரத்தை செய்யலாம் இந்த கடையில் மம்மி டாடியை தவிர அனைத்தும் கிடைக்கும் என்று உணர்த்தவும் செய்யலாம்.


மம்மி டாடி என்ற வார்த்தை படித்தவர் மத்தியில் பிரபலமாக இருப்பதால் அவர்களை கவர்ந்து கடையை நோக்கி வரச்செய்யும் என்று விளக்கம் கொடுத்தார்.


இதை அனைவர்களும் ஏற்று ஏகமனதாக மம்மி டாடி என்ற பெயரை முடிவு செய்து

அதன் படியே அக்கடைக்கு பெயர் வைக்கப்பட்டது.


அப்போது அந்த கடையின் பெயரை பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர்


அப்போது மம்மி டாடி என்ற பெயர் மிக புதுமையாகவும் யாருமே வைக்காத பெயராகவும் விளங்கிய காரணத்தால் மக்கள் மனதில் பதிந்தது இந்த கடையில் பல தமிழ் ஹிந்தி திரைப்படங்களின் சூட்டிங் நடைபெற்று திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளது.


அப்போது ரேடியோவில் கடை விளம்பத்தை

மம்மி..மம்மி..மம்மி..டாடி..டாடி..டாடி.மம்மி டாடிக்கு போவோமே.மன நிறைவு கொள்வோமே.


மம்மி டாடி கடைக்குள்ளே மாடிக்கு போக வழி உண்டு குடிக்க கூல்டிங்க்ஸ் குடுப்பாங்க.

குளிர்ந்த ஐஸ்கிரீம் தருவாங்க மன நிறைவு கொள்வோமே நெனச்சத வாங்குவோமே.

பணத்த மீதம் செய்வோமே என்று கை வீசம்மா கைவீசு கடைக்கு போலாம் கைவீசு என்ற பாட்டு மெட்டில் பாட்டாகப் பாடி விளம்பரம் செய்தனர்.


அந்த பாட்டு குழந்தைகள் மனதில் பதிந்து வீட்டிலும் வெளியிலும் எப்போதும் இந்த பாடலை குழந்தைகள் பாடிக் கொண்டிருப்பார்கள் இதன் மூலமாக இக் கடைக்கு மிகபெரிய விளம்பரம் கிடைத்தது.


1987அல்லது 1988 ல் இரண்டாவது ஜான் போப்பாண்டவர் சென்னைக்கு வந்தார்

அந்த நேரத்தில் Welcome என்று அவரை வரவேற்று பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார்கள் அந்த விளம்பரத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.


பெரிய ஷாப்பிங் மால்களுக்கும் நமதூரார்களே முன்னோடிகள் அன்று நாம் கோடு போட்டோம் கார்ப்பரேட் கம்பெனிகள் இன்று ரோடு போட்டுவிட்டார்கள்.


அதுவும் யாரும் உடைக்க முடியாத கான்கிரீட் ரோடாக போட்டுவிட்டார்கள்.

━━━━━━━━━━━━━━━

செருப்புக்கடைகள்

━━━━━━━━━━━━━━━

மதிப்பு குறைவாக கருதப்பட்ட செருப்பு வியாபாரத்தை மதிப்புமிக்க வியாபாரமாக மாற்றி வெறுங்காலில் சுடு மணலில் நடந்த மக்களை செருப்பு அணிந்து நடக்கத் தூண்டியவர்களும் நமதூரார்களே.


செருப்பு பணக்காரர்கள் மட்டுமே அணிவது என்ற நிலையை மாற்றி அனைத்து ஊர்களிலும் செருப்புக் கடை திறந்து சாமானிய மக்களும் செருப்பு அணியும் நிலையை உருவாக்கினார்கள்.


அன்றைய காலத்தில் பாட்டா செருப்புக் கம்பெனி மட்டுமே இருந்தது அந்த செருப்புகளை சாமானிய மக்கள் வாங்க முடியாத விலையில் இருந்தது.


சாதாரண மக்களும் வாங்கும் விலைகளில்.

புது புது மாடல்களை அறிமுகபடுத்தினார்கள்.


குறிப்பாக:-


பெண்கள் அணியும் நவ நாகரீக மாடல்களை அறிமுகப்படுத்தி அழகாக ஷோகேஸில்

அழகுடன் காட்சி படுத்தி புது புரட்சி பன்னினார்கள்.


பல ஊர்களில் ஒரே பெயரில் கடைகளை திறந்து முன்னனி நிறுவனமாக மாற்றினார்கள்.


கேரளாவில் இருந்து ரப்பர்களை இறக்குமதி செய்து ஹவாய் சப்பல்களை தயாரித்து  அறிமுகப்படுத்தினர் அது பொது மக்களை மேலும் கவர்ந்தது.


காரணம் அதுவரை தோல் செருப்புக்களே  அணிந்து வந்தார்கள் முதன் முதலில் ரப்பர்  ஹவாய் சப்பல்களை அறிமுகப்படுத்தியவர்கள் நமதூரார்களே.

அதன் பிறகு தான் ஹவாய் சப்பல் இந்தியா முழுவதும் பரவியது.

━━━━━━━━━━━━━━━

மருந்துக்கடைகள்

━━━━━━━━━━━━━━━

மருந்துகடை தொழிலும் ஒரு கை பார்த்து தனி முத்திரையுடன் செயல் படுபவர்களும் நமதூரார்களே.


அந்த ஊரில் கிடைக்காத உயிர் காக்கும் மருந்துகளையும் வெளியூரில் இருந்து உடனுக்குடன் வரவழைத்து நோயாளிகளின் பிணி நீக்க சேவை செய்பவர்கள்  நமதூர் மருந்து கடை வணிகர்களே.


காலை 6 மணிக்கு கடை திறந்து இரவு 11 மணிவரை கடை மூடாமல் மக்களுக்கு சேவை செய்பவர்களும் நம்மவர்களே.


ஒரு சில இரவு நேரங்களில் நோயாளிகளின் மிக மிக அவசியமாக தேவைபடும் மருந்துகளை மனிதாபமான அடிப்படையில்.

நடு ஜாமத்தில் கூட கடையை திறந்து மனம் நோகாமல் மருந்தை எடுத்து தரும் போது. 

அந்த கஸ்டமர்கள் கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டு விட்டு செல்வார்கள். 

ஒரு சிலர் காலில் விழுந்து விட்டுக் கூட செல்வார்கள்.


மருந்துக்கள் வாங்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட பெயர் கொண்ட மருந்துக் கடை சென்றால் எங்கும் கிடைக்காத மருந்து கூட இங்கு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினார்கள்.


பிறகு தமிழகமெங்கும் ஒரே பெயரில் பல கடைகள் தோன்றி அந்த பெயர் பிரபலமடைந்தது.


தமிழகத்தில் எந்த ஊரிலும் அந்த பெயரில் கடை வைத்தால் அந்த கடை வியாபாரம் அமோகமாகவே நடக்கும் அந்த பெயருக்கு அப்படி ஒரு காந்த சக்தி உள்ளது.


மருந்து வணிகத்திலும் தமிழகமெங்கும் வெற்றி நடை போடுபவர்களும் நமதூரார்களே இன்று  எத்தனையோ கார்ப்பரேட் மருந்துக்கடைகளுக்கு மத்தியில் தங்களுக்கென தனி முத்திரையுடன் வெற்றிபெற்றவர்கள் இவர்கள்.

━━━━━━━━━━━━━━━

ரெடிமேட் கடைகள்

━━━━━━━━━━━━━━━


1980 கால கட்டங்களுக்கு முன்புவரை புது அணிய வேண்டும் என்றால் துணி எடுத்து டைலர் கடைகளில் தைக்க கொடுத்து பல நாட்கள் அந்த கடைக்கு அலைந்து தைத்த துணியை வாங்கி அணியவேண்டும்.


அந்த நிலையை மாற்றி அப்போதே வாங்கி அப்போதே போட வசதியாக ஆயத்த ஆடைகள் என்று சொல்லும் ரெடிமேட் துணிகளுக்கு தனியாக கடை திறந்து புது டிரண்டை ஏற்படுத்தியவர்கள் நம்மவர்கள்.


சென்னையில் ரெடிமேட் துணிகளுக்கென தனியாக முதன்முதலில் கடை வைத்தவர்களும் நமதூர் மக்களே அதன் பிறகு தான் ரெடிமேட் கடைகள் தமிழமெங்கும் பரவி வெற்றி பெற்றது.


1980  கால கட்டம்.....


அப்போது தான் ஒரு சில பெரும் நகரங்களில் நமதூரார்கள் ரெடிமேட் கடைகள் திறக்கிறார்கள்.


சென்னையில் பெண்களுக்கென தனியாக உள்ளாடைகளை மட்டும் விற்பனை செய்யும் ஒரு கடையை நிறுவினார்கள்.


அந்த நேரத்தில் பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டும் தனிக் கடையா  என்று ஆச்சரியப்பட்டனர்.


ரெடிமேட் கடைகளிலும் பல புரட்சியை ஏற்படுத்தியவர்களும் நம்மவர்களே.


பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவர்களுக்கும் ரெடிமேட் ஆடைகளை பல சைஸ்களில் பல மாடல்களில் அறிமுகப்படுத்தினர்.


பாவாடை தாவணி அணிந்து வலம் வந்த கன்னியர்களை தங்கள் கடைகளில் அமைத்து இருக்கும் ஷோக்கேஸ் பொம்மைகளுக்கு அழகாக சுடிதார்களை அணிவித்து அனைத்து கன்னியர்கள் பார்வையையும் திருப்பி சுடிதார் அணிய தூண்டி பட்டாம்பூச்சி போல் பறக்க தூண்டியவர்களும் நம்மவர்களே.


நைட்டி வசதி படைத்தவர்கள் மட்டுமே அணியும் உடை என்பதை மாற்றி அனைவர்களும் அணியும் நிலையையும் உருவாக்கிய பெருமைக்கு சொந்தகாரர்கள் நம்மவர்களே.


இன்று ரெடிமேட் தயாரிப்பாளராக எத்தனையோ நம்மவர்கள் வலம் வந்து பொருள் சேர்க்கிறார்கள்.


பள்ளபட்டி வியாபாரிகளில் முதன் முதலில் ஆயத்த ஆடை (ரெடிமேட்) கார்மெண்ட்ஸ்

exclusive showroom Readymade  Garments Showroom ஆரம்பித்தவர் சவ்வாஸ் ஷாகுல் ஹமீது ராவுத்தர் (ஊர் மாமு)   அவர்கள்.


மதுரையில் இரண்டாவது ஆயத்த ஆடை கடை 1966 ல் நடிகர் ஜெமினி கனேஷன் திறந்து வைத்தார் ....


அதற்க்கு பின் தான் 1980 களில் அந்த retail தொழிலில் கொக்காட்டி பாபு அவர்கள் தலைமையில் 32 கடை வேவ்வேறு நபர்கள்.

ஆந்திர , தமிழ்நாடு , கேரளா வரை திறந்து மிகப்பெறும் வெற்றி பெற்றார்கள்.


மதுரையில் முதல் ரெடிமேட் கடை அமர்ஜோதி  Amar Jothi  இரண்டாவது கடை சவ்வாஸ் டிரஸஸ் (SAVVAS DRESSSES ).


பெண்கள் உள்ளாடை பிரா    தயாரித்து கொடிகட்டி பறந்தவர் டாஃபிட் பிரா (TOP FIT BRA) யாக்கூப் பாய் தமீம் டாக்டர் மாமனார்  அவர்கள்.


அவரது மச்சினர் ஜக்கரியா அவர்கள் WEMAL BRA என்று ஆரம்பித்தார் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஷேகாண்டி ஹபிப்புல்லாஹ் அவரது மச்சார் மவுலானா அவர்களின்

அர்விந்த் டிரஸஸ் தான் ரெடிமேட் ஆடை தயாரிப்பாளர்களின் முன்னோடிகள் ...


1970 களிலேயே Broadway சென்னையில் ஆரம்பித்தவர்கள் ...


குழந்தைகள் அணியும் ஜாப்லா என்று சொல்லக்ககூடிய உடைகளில் பல மாடல்களை அமைத்து தமிழமெங்கும் உள்ள முன்னனி கடைகளுக்கு சப்ளை செய்து வெற்றியுடன் பவனி வருவதும் நம்மவர்களே.

━━━━━━━━━━━━━━━

திருப்பூர் பனியன் ஜட்டிகள்

━━━━━━━━━━━━━━━


திருப்பூர் பனியன் ஜட்டிகள் இந்த தொழிலும் கால் பதித்து வெற்றி பெற்றவர் ஏராளமானோர்.


அதில் நமதூரை சார்ந்த ஒரு முன்னனி பனியன் நிறுவனம் ஆண்கள் அணியும் ஜட்டிகளில்  புதுமையான முறையில் அணிய வசதியான முறையில் புது மாடலாக ஒரு மாடலை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்கள் அது மக்களை கவர்ந்தது அந்த மாடல் நாம் இன்று சாதாரணமாக அணியும் கட் ஜட்டி மாடலே.

அது வரை டிராயர் வடிவில் இருக்கும் ஜட்டிகளையே மக்கள் பயன் படுத்தினர்.


அதை மாற்றி கட் ஜட்டியாக அணிய தூண்டி இதிலும் புரட்சி பன்னியவர்கள் நம்மவர்களே அதன் பிறகே மற்ற கம்பெனிகள் அந்த மாடலை தயாரித்தனர்.

━━━━━━━━━━━━━━━

உணவுத்துறை

━━━━━━━━━━━━━━━

உணவுத்துறையிலும் நம்மவர்கள் சளைத்தவர்கள் இல்லை.


தமிழகத்தில் இஸ்லாமியர்களை தவிற மற்றவர்களுக்கு பிரியாணி என்பது ஒரு உணவு  என்று மட்டும் அறிந்திருந்த நிலையில் பிரியாணியின் சுவையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி குறிப்பாக பள்ளப்பட்டிக்கென்றே இருக்கும் தனி சுவையுடன் அதை அனைவர்களும் சாப்பிடத் தூண்டி தங்களின் பக்கம் அவர்களின் பார்வையை திருப்ப வைத்தவர்கள் நம்மவர்களே.


சென்னை மையப் பகுதி அமைந்தங்கரையில் முதன் முதலில் நம்மவர்கள் மினார் பிரியானி என்ற பெயரில் பிரியாணி கடை திறந்து

அதன் சுவையை அறியவும் மக்களை தங்கள் கடை பக்கம் திருப்பவும் செய்த புது முயற்சியாக சில நாட்கள் அந்த வழியாக செல்லும் நபர்களுக்கு சேம்பிளாக.

சிறிதளவு பிரியானியை இலவசமாக கொடுத்து அதன் சுவையை  அறிய செய்து வியாபாரத்தில் கொடி கட்டினர்.


மேலும் பிரியானிகளை பாக்கெட் போட்டு.

சென்னையில் உள்ள நமதூரார்களின் ஷாப்பிங்கடைகளில் பொருட்களை சூடாக வைக்கும் பெட்டிகள் மூலமாக காட்சி படுத்தி.

அங்கு வரும் கஸ்டமர்களுக்கு விற்பனை செய்தனர்.


முதல் முதலில் மளிகை கடைகளில் பிரியானியை அறிமுகபடுத்திய கடை கீழ் பாக்கம் டீலக்ஸ் ஸ்டோர் தான் இத்துடன் சமோசாவையும் இனைத்து விற்பனை செய்தனர் 1980 ல் இது நடந்தது.


இந்த கடைக்கு  தி மொஹல் பிரியானி என்ற பெயரில் சப்ளை செய்து கொண்டிருந்த கால கட்டத்திலேயே பஃரீத் ஹாஜியார் அவர்களின் டெல்லி தர்பார் பிரியானியும் சப்ளை செய்தனர்.


அப்போது மட்டன் பிரியானி பாக்கெட் ஒன்று பத்து ரூபாய்க்கும் சிக்கன் பிரியானி பாக்கெட் ஒன்று 8 ரூபாய்க்கும் Mutton samosa 12 pcs -4.ரூபாய்க்கும் Veg Samosa 12 pcs -3.ரூபாய்க்கும் விற்பனை செய்தனர்.


அதன் பிறகு சென்னையில் உள்ள அனைத்து  Departmental store களுக்கும் சப்ளை செய்தனர்.


அதன் சுவையை அறிந்து கஸ்டமர்கள் தினமும் தன் குடும்பத்தார்களுக்கு வாங்கி செல்வார்கள் ஹோட்டல் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யும் பிரியானியை ஷாப்பிங் கடைகளிலும்  வைத்து விற்பனை செய்து பிரியானி புரட்சியை ஏற்படுத்தினர்.


அதன் பிறகு பல பெயர்களில்

பல சுவைகளில் பிரியாணிக்கடைகள்

 மற்றவர்கள் திறந்தார்கள்.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱