◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩
பள்ளப்பட்டி வார சந்தை
◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩◩
ஊர் பெருமை பேசுவது என்பது நம் எல்லோருக்குமே இயல்பாக நடப்பது தான்.
இப்படி மிக இயல்பாகவே நாம் பிறந்து வளர்ந்த ஊர் சார்ந்த சிறப்புகளைப் பிறரிடம் கூறி விவரித்து பெருமை பேசி அதில் மகிழ்ச்சி காணும் இயல்பு நம் எல்லோருக்குமே உண்டு.
முதலில் நாம் பிறந்து வளர்ந்த ஊர், அதன் வரலாறு என்ன எனத் தெரிந்து கொள்ள நாம் அனைவரும் முற்பட வேண்டும்
அந்த வரிசையில் நாம் பிறந்து விளையாடி படித்து வளர்ந்த பள்ளப்பட்டியின் வரலாற்றை தெரிந்து கொள்வது இன்றைய சூழலில் மிகவும் அவசியமானது.
காரணம்...
இன்றைய அவசர உலகில் நமது வரலாற்றை நம் அடுத்த தலைமுறைக்கு நேரில் சொல்லும் சூழ்நிலை நமக்கும் இல்லை நம் பிள்ளைகளும் கேட்கும் நிலையில் இல்லை எழுத்து விடிவில் பதிவு செய்து பாதுகாத்து விட்டால் நேரம் கிடைக்கும் போது படித்து தெரிந்து கொள்வார்கள்.
அந்த வரிசையில்...
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க பள்ளப்பட்டி தனக்குள் பல சரித்திர வடுக்களை பதிய செய்து அமைதியுடனும் கண்ணியத்துடனும் காணப்படுகிறது அதில் பல வடுக்கள் பதியப் பெறாமல் காலச்சூழலில் கறைந்தும் மறைந்தும் விட்டது சில சரித்திர வடுக்கள் இன்று வரை தொடரவும் செய்கிறது.
அதன் ஆணி வேர்களை தேடி கண்டு பிடித்தால் பல ஆச்சரிய தகவல்கள் அடங்கி இருப்பதை காணவும் முடிக்கிறது.
அந்த சரித்திர வடுக்களில் ஒன்று கீழ் காணும் பதிவு
இங்கு இதை இந்த கட்டுரையை வெளியிடும் நோக்கம் பள்ளப்பட்டி மக்களின் வாழ்நிலை வரலாறு முற்றிலும் பதியப்பெறாமல் போன சூழலில்.
இதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி வெளியிடுகிறோம்.
⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥⌥
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க பள்ளப்பட்டியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு திங்கள் கிழமை அன்று ரெங்கமலையில் இருந்து இளந்தென்றல் இதமாக தவழ்ந்து வரும் இளங்காலை நேரம்,
ஆதவன் தன் அகல் விளக்கை ஏற்றி அதன் திரியை தன் பொற்கரத்தால் இயக்கி மெள்ள மெள்ள ஒளிக்கதிரைப் பாய்ச்சிக்கொண்டிருந்தான்,
நித்திரை சுகத்தினிலே நிறைவுப் பெற்றுக் கிடந்த நில மகளோ இருட் திரையை விலக்கி ஏறிட்டு நோக்கினாள்
கிழக்கு வானம் வெளுத்தது ஒளிக் கதிரின் வேகம் படர்ந்தது கதிரவன் தன் அலுவலை வழக்கம் போல் துவங்கிய வண்ணமிருந்தான்,
அதன் பொன்னொளிபட்டு நில மடந்தையின் பொன் முகம் மஞ்சள் பூசி நீராடி வந்த மங்கையின் முகம் போல் பிரகாசம் அளித்தது அவனின் கம்பீர வருகையை கண்ட வைகறைப் பொழுது மெதுவாக நகரத் துவங்கியது,
அப்போது...
பள்ளப்பட்டி மக்களும் சுற்றுவட்டார பகுதி மக்களும் அரவக்குறிச்சி சூலப்புரம்
ஜமீன் ஆத்தூர் போன்ற ஊர்களில் இருந்தும் குதூகலத்துடன் மானிடர் கூட்டம் திரளாக பள்ளப்பட்டியை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.
அங்கே திருநாளோ பெருநாளோ என்று வியக்கும்அளவுக்கு இப் பகுதி மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர்.
காரணம்...
அன்று திங்கள் கிழமை...
அந்த திங்கள் கிழமைக்கும்
பள்ளப்பட்டிக்கும் என்ன சம்பந்தம் அப்படி என்ன அந்த கிழமைக்கு சிறப்பு அந்த குறிப்பிட்ட கிழமை அன்று மட்டும் பள்ளப்பட்டியை நோக்கி ஏன் மக்கள் படையெடுக்கிறார்கள்.
அந்த கிழமை அன்று ஏன் மினி திருவிழாவாக பள்ளப்பட்டி காட்சி அளிக்கிறது.
அன்றைய தினம்..
பள்ளப்பட்டியில் வார சந்தை ஊர் மக்களுடன் சுற்றி உள்ள கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டு அந்த வாரத்திற்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
கடந்த சுமார் 200 ஆண்டுகளாக நடைபெறும் இந்த சந்தையை பற்றியும் அது தோன்றிய வரலாற்றை பற்றியும் சற்று பின்னோக்கி பார்த்தால் பல ஆச்சரிய தகவல்கள் கிடைக்கிறது.
இன்றிலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளப்பட்டியும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் நெசவு தொழில் பிரதானமாக இருந்தது.
அதே கால கட்டத்தில் தாவளம் என்ற தொழிலும் பிரதானமாக இருந்தது.
தாவளம் என்பது.
பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி போன்ற இன்றைய கருர் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் சுதந்திரத்திற்கு முன்பு வரை தாவளத்தொழில்' முக்கியமானதாக இருந்தது விதைப்புக் காலத்தில் மல்லு, காடா. போன்ற துணிவகைகளை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர் ஊராய் விநியோகிப்பார்கள்.
அறுவடைக் காலத்தில் சென்று, கொடுத்த துணிகளுக்கு பணம் வசூலித்துக் கொண்டு வருவார்கள் இதை தாவள வியாபாரம் என்று சொல்வார்கள்.
அப்போது ஜமீன் ஆத்தூர் பாக்கு வணிகத்திலும் ஜவுளி வர்த்தகத்தில் பள்ளப்பட்டியும் பிரதானமாக இருந்தது.
பள்ளப்பட்டியை சுற்றி உள்ள மக்கள்
விவசாயிகளாகவும் தறி நெசவு தொழிலிலும் ஈடுபட்டும் இருந்தனர்.
அப்போது..
துணிகள் தயாரிக்க தேவைபடும் பஞ்சு நூல்களை விற்பனை செய்ய வெளியூர் வியாபாரிகள் பள்ளப்பட்டியை நோக்கி வருவார்கள்.
பஞ்சுகளை கொள்முதல் செய்யவும்
தாங்கள் தயாரித்த துணிகளை சந்தை படுத்தி விற்பனை செய்யவும் நெசவாளர்கள் வாரத்தில் ஒரு நாள் திங்கள் கிழமை அன்று ஒன்று கூடி விற்பனை மற்றும் கொள்முதல் செய்வார்கள்.
இவர்களிடம் ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்ய பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து தாவள வியாபாரிகள் திரளாக வந்து கொள்முதல் செய்வார்கள் இப்படி கொள்முதல் செய்த துணிகளை தாவள வியாபாரத்தில் மூலமாக வெளியூர்களில் விற்பனை செய்வது வழக்கம்.
நெசவாளர்கள் கொள்முதல் செய்த பஞ்சுகளை கை ராட்டினம் மூலமாக நூல்களாக தயாரிக்கபடும்.
தறி உரிமையாளர்கள் பஞ்சை நூலாக மாற்றவும் ஏழை குடும்பங்கள்
வாழ்வாதரங்களை மேம்படுத்தவும் நூல் நூற்கும் கை ராட்டைகளை கொடுத்து கை ராட்டையில் நூல் நெய்யும் தொழில் ஏற்படுத்தப்பட்டு வாரம் ஒருமுறை பஞ்சை விநியோகித்து மறு வாரம் கொடுத்த பஞ்சில் இருந்து நெய்யப்பட்ட நூலை வாங்கிச்செல்வார்கள் ஒரு "கண்டுக்கு" இவ்வளவு கூலி என்று நிர்ணயம் செய்து கூலியை வழங்குவார்கள்.
கை ராட்டையில் நூல் நெய்து வாரம் ஒரு முறை கிடைக்கும் கூலியை கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துவார்கள் ஏழை மக்கள்.
அப்போது நூல்களை கொடுக்கவும் பஞ்சுகளை வாங்கவும் ஏழை நடுத்தர மக்கள் இன்றைய ஹாஜி ஹபீப் திருமண மண்டபத்தில் ஒன்று கூடுவார்கள் அப்போது ஷாதி மஹால் திருமண மண்டபமாக கட்டவில்லை.
அந்த நூலை கைத்தறி துணியாக மாற்றி சாயம் கட்ட சாயப்பட்டரை சொட்டல் தெருவில் அமைத்தனர்.
பஞ்சை கொடுத்து நூலாக மாற்றி வாங்கும் வேலை வாய்ப்பு 1968 /1970 வரை நடைமுறையில் இருந்தது.
அப்போது சந்தை நடைபெறும் இடங்களில் வெய்யிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பல வித மரங்களை நட்டு நிழலில் தங்களை தற்காத்துகொள்வார்கள் அப்போது நடப்பட்ட மரங்களில் சமீபத்தில் வெட்டப்பட்ட ஆலமரமும் ஒன்று.