▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣

பள்ளப்பட்டி வணிகம் அன்று முதல் இன்று வரை பகுதி 1

▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣▣


அன்பான நண்பர்களே பாரம்பரிய மிக்க பள்ளப்பட்டி மக்கள் அன்றிலிருந்து இன்று வரை வியாபாரிகளாக வாழ்ந்து பொருள் சம்பாதிப்பவர்கள் 


இவர்கள் ஊசி முதல் கணினி வரை உலகத்துப் பொருளனைத்தும்,உழைப்பின் கரங்களால் ஊரெங்கும் கொண்டு சேர்த்து,தொழிலில் புதுமையைப் புகுத்தும் பள்ளப்பட்டி மக்களின் பேரழகே!


காலத்தின் மாற்றத்தைக் கணினியாய் உள்வாங்கிக் கொண்டு,வியாபார உத்திகளில் வியத்தகு புரட்சிகள் செய்து,இந்தியாவின் சந்தையிலே புதிய தடம் பதிப்பவர்கள்!மார்க்கத்தின் வழியினில் மாறாத நாணயத்தோடு,மாறும் உலகிற்கு ஏற்பப் புதுமைகள் பல புகுத்தி,வெற்றியைக் கோட்டையாக்கும் இஸ்லாமியப்பெருமக்களின்,வியக்கவைக்கும் வணிக வரலாற்றை வியப்போடு தொடங்குவோம்!



பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி போன்ற இன்றைய கருர் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் சுதந்திரத்திற்கு முன்பு வரை தாவளத்தொழில்' தான் முக்கியமானதாக இருந்தது.


தாவளம் என்பது பெருவழிகளில் இருந்த வணிகச் சந்தை நகரங்களைக் குறிக்கும் சொல்லாகும்"விதைப்புக் காலத்தில் மல்லு, காடா. போன்ற துணிவகைகளை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர் ஊராய் விநியோகிப்பார்கள்.அறுவடைக் காலத்தில் சென்று, கொடுத்த துணிகளுக்கு பணம் வசூலித்துக் கொண்டு வருவார்கள்.


இது தாவளம்.


இப்படி ஊரைவிட்டு புறப்பட்டு வியாபாரம்-வசூல் பண்ணி மறுபடியும் ஊர் திரும்ப சரியாக ஆறுமாதம் ஆகிவிடும் என்பதால் இவர்களை ஆறு மாதத்தான்' என்று கிண்டலாக அழைப்பார்கள்.


இதன் மறு உருவாகவே இன்றைய தவணைமுறை வியாபாரம்,


ஜவுளி, ஆயத்த ஆடைவியாபாரம் என வெளியூர் சென்று வணிகம் நடத்தும் சிறு வியாபாரிகள் நிறைந்த ஊராக பள்ளபட்டி உள்ளது.


இங்கு இதை இந்த கட்டுரையை வெளியிடும் நோக்கம்:மக்களின் வாழ்நிலை வரலாறு முற்றிலும் பதியப்பெறாமல் போன சூழலில்


இதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி வெளியிடுகிறோம்.


பள்ளபட்டி மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிகத்தில் வித்தியாசமான முறையை பின்பற்றி வெற்றிக்கொடி நாட்டியவர்கள்


கடந்த நூற்றான்றுகளுக்கு முன்

நம் முன்னோர்கள் தாவள வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் இவர்கள் தாவள வியாபாரத்தில் பல புதுமைகளை புகுத்தியவர்கள்


வெளியூரில் வசிக்கும் முன் பின் அறிமுகமில்லாதவர்களுக்கு கடன் கொடுத்து வசூலித்தவர்கள் அந்த தொகைகளையும் ஆறு

மாதம் கழித்து வசூல் செய்தவர்கள்


இவர்களுக்கு ஆறு மாதத்தான் என்று பெயர் சூட்டி மக்கள் பொருள்களை வாங்கினார்கள்


மல் காடா லுங்கி காட்டன் சேலைகளை  போன்ற துணிகளை மாட்டு வண்டியில் கட்டிக்கொண்டு முதலாளி கணக்குபிள்ளை வசூல்ஆட்கள் சமையல் ஆட்கள் என்று ஒரே கூட்டமாக நடைபயணமாக பல நாள் நடந்து வெளியூர் செல்வார்கள்


நடந்து செல்லும் கூட்டத்திலுள்ளவர்கள் சிலர் வேடிக்கையாக தூண்டி விட்டு, கொஞ்சம் உன் கை சரக்கை எடுத்து விடவேணும் என்பார்கள்.


அவ்வளவு தான்,


குதிரை, கழுதை, நாய், நரி, கோழி, கொக்கு போன்றபடிய அதன் குரல்களை பிரதிபலிப்பார்கள்.இத்துடன் கான் சாயபு சண்டை, மதுரை வீரன் பாடல் எல்லாமே ஆரம்பித்து விடுவார்கள் கூட்டத்தில் ஒரே சிரிப்பும், ஆனந்தமும்  ஆரம்பிக்கும். பிரயாணிகளாகிய  அவர்களுக்கு நடந்த அலுப்பு தோன்றாது.


அப்படி நடந்து செல்லும் போது

வழியில் கிடைக்கும் குச்சிகளையும் விறகுகளையும் சேகரித்துக்கொண்டு தாங்கள் வண்டியில் கொண்டு வந்த அரிசி பருப்பு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, எண்ணை சிப்பம், சட்டி பானைகள் போன்றவகைகள் அனைத்தையும் எடுத்து

ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு மேலும் பயணத்தை தொடர்ந்து இரவு நேரங்களில் சத்திரங்களில் தங்கி பகல் நேரங்களில் நடந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் ஒரு ஊரை தேர்வு செய்வார்கள்


(உதாரணமாக பள்ளப்பட்டியில் இருந்து ராமநாதபுரம் திருநெல்வேலி என்று சென்று அருகில் உள்ள கிராமங்களை தேர்வு செய்வார்கள்)


ஒரு சிலர்கள் ஈரோடு வரை மாட்டு வண்டியில் சென்று அங்கிருந்து பாஸிஞ்சர் ரயிலை பிடித்து ஆந்திரா கர்னாடகா போன்ற ஊர்களுக்கும் சென்று வணிகம் செய்வார்கள்


(கொசுறு செய்தி:-நமதூர் மஹான் ஷைய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களும்

அவர்களின் தந்தை மற்றும் மாமனார் அவர்களும் தாவள தொழில் செய்தவர்களே) அப்படி ஒரு ஊரை தேர்தெடுத்து தங்குவதற்கு முன் அந்த ஊர் தலைவரை சந்தித்து தாங்கள் வந்த நோக்கத்தை தெளிவு படுத்தி அவர்கள் மூலமாகவே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி அந்த ஊர் கன்னியப்படுத்தி விருந்து வைத்து அவரை மதிப்பார்கள்.


ஊர் தலைவரையும் அருகில் வைத்து

வியாபாரத்தை தொடங்குவார்கள் அவர்கள் வியாபாரம் பெரும் பாலும் இரவு நேரத்தில் மட்டுமே நடைபெறும் காரணம் அனைவர்களும் கூலி வேலை செய்பவர்கள்

காலையில் சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவார்கள் ஊரின் மையப்பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து ஒரு லாட்டீன் விளக்கை பற்றவைத்துக்கொண்டு ஆறு மாதத்தான் வந்து இருக்கிறோம் வாருங்கள் என்று உரக்ககூறி மக்களை ஒன்றினைத்து துணிகளை கையில் எடுத்து ஏலம் விடுவார்கள்


யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கு எந்த முன்பணமும் வாங்காமல் ஆறு மாதம் கழித்து அறுவடை நேரத்தில் தொகையை வாங்கிக்கொள்கிறோம் என்று

அவர்களின் பெயர் என்ன எவ்வளவு தொகை என்பதை குறித்துக்கொண்டு கொடுத்து விடுவார்கள்


இப்படியே மொத்த சரக்குகளையும் விற்பனை செய்து விட்டு மறுபடியும் நடைபயணமாக ஊர் திரும்புவார்கள்


மறுபடியும் ஆறு மாதம் சென்று அதே நடைபயணத்தில் புது சரக்குகளை வண்டியில் ஏற்றி அதே ஊருக்கு சென்றுஏற்கனவே கொடுத்த தொகையை வசூலித்துக்கொண்டும் வாங்கிய பொருளுக்கு திருப்பிக் கொடுக்க ஒரு சிலர் கையில் பணம் இல்லை என்றால் ஆடு மாடு கோழி என்று பிடித்துக்கொண்டும் மறு படியும் புதுசரக்குகளை விற்பனை செய்து வருவார்கள் இப்படியே தொடர்ந்து செய்வார்கள்.


நமதூரை சார்ந்த சக நண்பர்கள் உறவினர்களையும் ஒன்றினைத்து ஆளுக்கு ஒருகிராமம் என்று முடிவு செய்து ஒன்றாகவே செல்வார்கள்


இதில் போட்டி பொறாமை கொள்ளமாட்டார்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கொள்வார்கள் ஒரு சில நேரத்தில்

அந்த ஊரில் என்ன பொருள் விலை குறைவாக கிடைக்கிறதோ அதை கொள்முதல் செய்து கொண்டு ஊர்வந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு அங்கிருந்து கொண்டு வந்த பொருள்களை வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று அதே ஆறு மாத தவனைக்கு விற்பனை செய்து சூழற்சி முறையில் பம்பரமாக சுழல்வார்கள்


சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இருந்தவர்கள்.இந்த தொழிலை  நன்றாய் தெரிந்திருப்பார்கள்(அதாவது நம் ராத்தாமார்கள்) இப்படியே வாழ்க்கை நகர்ந்தன.


இந்த நிலையில் ஷைத்தான் தலை காட்டினான்


பொருள்களுக்கு பதிலாக ஏன் பணமாகத் தரக்கூடாது என்று ஷைத்தான் தூண்டில் போட்டான் அதில் ஒரு சிலர் சிக்கி பணமாக கொடுத்தார்கள்.


கொடுத்த தொகையை மட்டும் வசூல் செய்தால் லாபத்திற்கு எங்கே செல்வது. அதனால் 25 சதவீதம் கூடுதலாக பெற்றார்கள்.


6 மாதம் என்பதை குறைத்து

10 வாரம் என்று மாற்றி வாரம் ஒரு தொகை என்று அவர்கள் வாங்கும் தொகையை வைத்து முடிவு செய்தனர்.


அல்லாஹ்வின் அச்சம் சிறிது தளர்ந்து ஷைத்தானின் ஆதிக்கம் தலைதூக்கியது.


தமிழகத்தில் வியாபாரம் செய்தவர்கள்.

பக்கத்து மாநிலமான ஆந்திரா கர்னாடகா சென்று  வியாபாரத்தை துவங்கினார்..


இதில் நல்ல வருமானம் வருவதை தெரிந்து.

சம்பளத்திற்கு ஆட்களை நியமித்து தங்கள் கிளைகளை பரப்பினார்கள்.


ஒரு சிலர் பக்கத்து மாநிலம் கடந்து வடநாடு சென்றார்கள் ஒரு சிலர் மிக நீண்ட தூரமான பீஹார்  ஒரீஷா போன்ற மாநிலங்களை தேர்ந்தெடுத்து சென்றனர் இந்த வியாபாரம் கிராமங்களை சுற்றியே பெரும்பாலும் நடைபெற்று வந்தது.


ஷைத்தான் மேலும் ஆவலை தூண்டிமும்பை பூனா குஜராத் போன்ற பெரு நகரங்களுக்கு நீங்கள் சென்று பொருள் சேர்த்துங்கள் என்று நாவில் இனிப்பை தடவினான்.


வடநாட்டில் உள்ள பெருநகரங்களை நோக்கி

படை எடுத்தார்கள்.


வியாபாரம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது.

ஒரு சிலர்  இந்த வியாபாரம் செய்ய விருப்பம் இல்லாமல் தொடர்ந்து துணி வியாபாரமே செய்தாலும் தொடர்ந்து அலைச்சல் ஏற்படுவதை தவிர்க்க ஒரு சில நடுத்தர ஊர்களை தேர்தெடுத்து ஜவுளிக்கடைகளாக அமைத்து வியாபாரம் செய்தார்கள்.


அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் செய்து வியாபாரம் செய்து வந்த நிலையில்.

ஒரு சில வசதி படைத்தவர்கள்

பெரிய ஜவுளிக்கடைகளை திறந்து இந்தியா சில்க் ஹவுஸ். தமிழ்நாடு துணிக்கடை.ஜனதா சில்க் ஹவுஸ். என்று

அழகிய பெயர்களை சூட்டினர்


ஷோகேஸ் அமைத்து அதில் பொம்மைகளை நிறுவி அழகாக உடை உடுத்தி பார்பவர்களை கவர்ந்திழுக்கும் வடிவில்

கடையை அழகு படுத்தினார்கள்.


அன்றைய காலத்தில் தரையில் அமர்ந்துதான் துணிகளை பார்த்து வாங்குவார்கள் அந்த நிலையை மாற்றி அழகாக கவுண்டர்களை அமைத்து. நின்று கொண்டு வாங்கும் வழக்கத்தை கொண்டு வந்து ஜவுளி தொழிலில் புது புரட்சியை ஏற்படுத்தினார்கள்.


பட்டுச்சேலை என்பது மணபெண் மட்டும் அணியும் புடவை என்ற நிலையை மாற்றி.

தங்கள் விளம்பரங்கள் மூலமும் அழகிய டிசைன்கள் மூலமும் கமர்ஷியலாக்கி. அனைவர்களையும் அணிய தூண்டியவர்களும் நம்மவர்களே.


Finance தொழிலும்   ஜவுளிதொழிலும்

வருமானம் அமிர்தமாக வந்த காரணத்தினால் ஊரில் பண புழக்கம் தாராளமாகியது.


குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளாகவும்.

ஓட்டு வீடுகள் மாடி வீடுகளாகவும்.

மாடி வீடுகள் பங்களாக்களாகவும் மாறத் துவங்கியது புது கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தார்கள் மேற்கு பகுதியில் இருந்து  கிழக்கு பகுதிவரை ஊர் விரிவடைந்தது.


காரணம் மேற்கு பகுதியில் ஆறு குறுக்கே ஓடுவதால் விரிவடைய வாய்ப்பு இல்லாத காரணத்தினால் கிழக்கு பகுதி விரிவடைந்தது.


அப்போது தொழ மேற்கு பள்ளி மட்டுமே இருந்து. கிழக்கு பகுதி விரிவடைவதை கருத்தில் கொண்டு கிழக்கு பள்ளி தோன்றியது.


அதைத்தொடர்ந்து தெற்கு பள்ளி வடக்கு பள்ளி தோன்றியது.


ஊரின் கடைவீதியாக திகழ்ந்த பெரிய கடைவீதி மெல்ல மெல்ல கிழக்கு நோக்கி சின்னக்கடைவீதி பக்கம் நகர்ந்தது.


காய்கறி இறைச்சி மார்கெட்டும் தோன்றியது ஊரின் மையப்பகுதியாக சின்னக்கடை வீதி மாறி ஸ்வீட் கடைகளும்

மருந்து கடைகளும் மளிகை

ஷாப்பிங் கடைகளும் ஜவுளிகடைகளும்

தோன்றின அங்கேயே ஹபீப் மன்றமும் அமைந்து கலகலப்பான கடைத்தெருவாக மாறியது.


இப்படியே காலங்கள் கடந்தன.


இந்த நேரத்தில் ஊரில் ஒரு சிலர்கள் மட்டுமே பணக்காரர்களாக வலம் வந்தனர்.

மற்றவர்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாக வாழ்ந்து வந்தனர்.


இந்த நிலையில் Finance தொழில் செய்பவர்கள் தலையில் "மிசா" என்ற பேரிடி விழுந்தது.


அதிலிருந்து தப்பிக்க ஆளை விட்டால் போதும் என்று அப்படியே அனைத்தையும் விட்டு விட்டு இரவோடு இரவாக கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு  ஊர் நோக்கி ஓடி வந்தனர்.


அடுத்து என்ன செய்வது என்று மனதில் குழப்பம் நமதூரார்களுக்கு இயற்கையாகவே புது புது சிந்தனை தோன்றும் அல்லவா.


மிசா காலத்தில் பணம் கொடுத்தால் தானே அரசு நம்மை பிடிக்கிறது பொருள்களை கொடுத்தால் என்ன.என்று எண்ணம் தோன்றவே.(இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும் சூழ்ச்சிகாரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் என்பதை இந்த நேரத்தில் நிரூபித்தான்.


எப்படி..?


சைத்தான் பொருளுக்கு பதிலாக பணமாக கொடுத்தால் என்ன என்று சிந்தனையை தூண்டி அன்று மக்களை வழி கெடுத்தான்.


அல்லாஹ் அவர்களை நேர்வழியில் திருப்ப.

மிசா என்ற சட்டத்தின் மூலம் பணத்திற்கு பதிலாக பொருள்கொடுங்கள் என்று இன்று  திசை திருப்பினான்..)


தமிழகத்திலேயே முதல் முறையாக என்டர் பிரைஸஸ் தொழில் தோன்றியது.

அதில் என்ன பொருள்களை விற்பனை செய்யலாம் என்று சிந்தித்தார்கள்.

விளைவு:- மடக்கு சேர்களையும் ஈசி சேர்களையும் விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்து இறைவன் உதவியை கொண்டு ஹலாலான வியாபாரத்தை துவக்கினார்கள்.


அல்லாஹ் அதில் வழங்கிய பரக்கத்தின் காரணமாக அது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.


முதலில் பொருளை வாங்கிக்கொண்டு அதன் பிறகு பணம் கொடுப்பது என்ற ஒப்பந்தம் மக்களை கவர்ந்தது போட்டி போட்டு மக்கள் வாங்கினார்கள் ஒரு சில இடத்தில் மக்களை வரிசையில் நிற்க வைத்தும் வியாபாரம் நடை பெற்றது.


தரையில் அமர்ந்து இருந்த சாதாரண மக்களையும் முதன் முதலில் சேரில் அமரவைத்து தரையில் படுத்து இருந்த முதியவர்களை ஈசி சேரில் படுக்கவைத்த பெருமை நம்மவர்களையே சாரும்.


பெரிய லாரிகளில் பல நூறு சேர்களை அடுக்கிகொண்டு ஊருக்குள் நுழைந்தால் அன்று மாலையே அனைத்தும் விற்பனைஆகிவிடும் அந்த ஊரில் உள்ள அனைவர்களும் வாங்கி விடுவார்கள்.


வீடுகளில் வசிப்பவர்கள் மட்டுமல்ல.

வியாபார நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை அமர வைக்க வாங்கினார்கள்.


மொத்த ஊர் வியாபாரத்தை இரண்டே தினத்தில் முடித்து விடுவார்கள் அன்று ஒரு சேர் ஹோல்சேல் விலை 35 ரூபாய்.


(Finance தொழிலில் கிடைத்த லாபத்தை விட இதில் அதிகம் அதுவும் ஹலாலான வடிவில்)


அதை 65 ரூபாய்க்கு விலை பேசி 5 ரூபாயை முன் பணமாக  பெற்றுக்கொண்டு மீதி தொகையை தினசரி 2 ரூபாய் வீதம் 30 நாள் செலுத்தவேண்டும் என்று சொல்லி ஒரு கார்டில் விபரங்களை எழுதி கொடுத்து ஒரு ஊருக்கு  3அல்லது 4 ஆட்களை நியமித்து விட்டு அடுத்த ஊர் சென்று அதே போல் வியாபாரம் செய்து விட்டு அடுத்த அடுத்த ஊர் என்று தொடர்ந்து பல ஊர்கள் சென்றுகொண்டே இருப்பார்கள்.


முதல் ஊரில் தொகை முழுவதையும் வசூலித்த வசூல் ஆட்கள் சுழற்சிமுறையில் மற்ற ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள்.


அடுத்து அந்த பொருள்களில் சற்று மாற்றங்கள் செய்து சூட்கேஸ்களை விற்பனை செய்தார்கள் அதிலும் ஒன்றுக்கு ஒன்று சதவீதம் லாபம் கிடைத்தது.


தகர பெட்டியை தலையில்  தூக்கிக்கொண்டு வெளியூர் சென்ற மக்களை நாகரீகமாக சூட்கேஸை கையில் தூக்கிக்கொண்டு செல்லும் நிலைக்கு நமதூரார்களே உயர்த்தினார்கள்.


பாத்திரங்கள்  மற்ற பொருள்கள் என்று விற்பனையை விரிவு படுத்தியும்.

வடநாடு சென்றும் வியாபாரம் வெற்றிகரமாக  செய்ய ஆரம்பித்த நிலையில் சம்பளத்திற்கு இருந்த தொழிலை கற்றுக்கொண்ட  நபர்கள்.


எவ்வளவு நாள் தான் நாம் வேலைக்காரனாக இருப்பது .என்று சிந்தித்ததின் விளைவாக.

தங்களிடம் இருக்கும் சிறு தொகைகளிலும்.

தொகை இல்லாதவர்கள் மனைவியின் நகைகளை அடகு வைத்தும் தனித் தனியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.


5 ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் ஒரு என்டர்பிரைஸஸஸ் திறந்து விடலாம் அப்போது இந்த காலம் பள்ளபட்டி மக்களுக்கு பொற்காலம் என்றே கருதப்படுகிறது.


காரணம் சம்பளத்திற்கு இருந்தவர்கள் முதலாளியாக வலம் வந்து செல்வம் சேர்த்தனர் அந்த கால கட்டத்தில் ஊர் மிக வேகமாக விரிவடைந்து திரும்பிய பக்கம் எல்லாம் கட்டிடங்கள்  கட்ட ஆரம்பித்தார்கள்.


இந்த நேரத்தில் தான் ஷா நகர் கிழக்கு பகுதி தோன்றியது அதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு என தனியாக ஷா நகர் பள்ளியும் அமைந்தது ஷா நகரை  தொடர்ந்து  காடுகளாக திகழ்ந்த செல்லு மீரான் நகர் அசுர வேகத்தில் தோன்றி பெரும்பாலானவர்கள் சொந்த வீட்டில் குடியேறினார்கள் இன்று அந்த பகுதி ஊரின் மையப்பகுதியாக கருதப்படுகிறது அந்த அளவு வேகமாக வளர்ச்சி அடைந்தது.


அதன் பிறகு மிசா தளர்த்தப்பட்டது.


ஒரு சிலர் மறுபடியும் Financeதொழிலை நோக்கி சென்றனர் மற்றவர்கள் என்டர்பிரைஸிலேயே தொடர்ந்தார்கள்.


ஒரு சிலர்கள் மளிகைகடைகளின் பக்கம் தன் பார்வையை திருப்பி வரிசையாக பல ஊர்களில் மளிகை கடை  துவங்கினர்.

அப்போது பரம்பரையாக மளிகை கடை செய்பவர்களும் இருந்தனர்.


பிற்காலத்தில் அதை விரிவுபடுத்தி மிக பிரமாண்டமாக ஷப்பிங்கடைகளை அமைத்து பொருள்களை காகிதத்தில் மடித்து கொடுக்கும் நிலையை மாற்றி.

பிளாஸ்டிக் கவர்களில் பேக் செய்து விற்பனை செய்து அமோகமாக வெற்றிநடை போட்டார்கள்.


இந்த கால கட்டத்தில்தான் சென்னையில்  பெரிய பெரிய ஷாப்பிங் மால்களை நமதூரார்கள் நிறுவினர்.


அதில் சென்னை கிழ்பாக்கம் என்ற மையப்பகுதியில் பத்து ஆயிரம் சதுர அடியில் முதன் முதலாக

மிகப்பிரமாண்டமான ஷாப்பிங் மால்.


யாரும் நினைத்துக்கூட பார்க்காத.

புதுமையானமுறையில் புதுமையான மம்மி டாடி என்ற பெயரில் நிறுவினார்கள்.


அந்த கடையின் பெயரே அன்று  வித்தியாசமாக இருந்தது அந்த பெயர் இன்று சர்வசாதாரனமாக கடைகளுக்கு வைக்கிறார்கள்.


சென்னை மக்கள் இவ்வளவு பெரிய கடையா.என்று ஆச்சரியத்துடன் வாய் பிளந்து அந்த கடையை நோக்கி படை எடுத்தனர்.


பெரிய ஷாப்பிங் மால்களுக்கும் நமதூரார்களே முன்னோடிகள்.

அன்று நாம் கோடு போட்டோம் கார்ப்பரேட் கம்பெனிகள் இன்று ரோடு போட்டு விட்டார்கள் அதுவும் யாரும் உடைக்க முடியாத கான்கிரீட் ரோடாக போட்டுவிட்டார்கள்.


மதிப்பு குறைவாக கருதப்பட்ட செருப்பு வியாபாரத்தை மதிப்புமிக்க வியாபாரமாக மாற்றி வெறுங்காலில் சுடு மணலில் நடந்த மக்களை செருப்பு அணிந்து நடக்கத் தூண்டியவர்களும் நமதூரார்களே.


செருப்பு பணக்காரர்கள் மட்டுமே அணிவது என்ற நிலையை மாற்றி அனைத்து ஊர்களிலும் செருப்புக் கடை திறந்து.

சாமானிய மக்களும்செருப்பு அணியும் நிலையை உருவாக்கினார்கள்.


அன்றைய காலத்தில் பாட்டா செருப்புக் கம்பெனி மட்டுமே இருந்தது அந்த செருப்புகளை சாமானிய மக்கள் வாங்க முடியாத விலையில் இருந்தது.


சாதாரண மக்களும் வாங்கும் விலைகளில்.

புது புது மாடல்களை அறிமுகபடுத்தினார்கள்.


குறிப்பாக:-


பெண்கள் அணியும் நவ நாகரீக மாடல்களை அறிமுகப்படுத்தி அழகாக ஷோகேஸில்

அழகு மிளிர காட்சி படுத்தி புது புரட்சி பன்னினார்கள்.


ஒரு குறிப்பிட்ட ஒரே பெயரில் பல ஊர்களில் கடைகளை திறந்து முன்னனி நிறுவனமாக மாற்றினார்கள்.


ஒரு சிலர் கேரளாவில் இருந்து ரப்பர்களை இறக்குமதி செய்து ஹவாய் சப்பல்களை தயாரித்து  அறிமுகப்படுத்தினர்அது பொது மக்களை மேலும் கவர்ந்தது காரணம் அதுவரை தோல் செருப்புக்களே  அணிந்து வந்தார்கள்.


முதன் முதலில் ரப்பர்  ஹவாய் சப்பல்களை அறிமுகப்படுத்தியவர்கள் நமதூரார்களே.

அதன் பிறகு தான் ஹவாய் சப்பல் இந்தியா முழுவது பரவியது.


அடுத்து மருந்துகடை தொழிலும் ஒரு கை பார்த்து தனி முத்திரையுடன் செயல் படுபவர்களும் நமதூரார்களே.


அந்த ஊரில் கிடைக்காத உயிர் காக்கும் மருந்துகளையும் வெளியூரில் இருந்து உடனுக்குடன் வரவழைத்து நோயாளிகளின் பிணி நீக்க சேவை செய்பவர்கள்  நமதூர் மருந்து கடை வணிகர்களே காலை 6 மணிக்கு கடை திறந்து இரவு 11 மணிவரை கடை மூடாமல் மக்களுக்கு சேவை செய்பவர்களும் நம்மவர்களே.


மருந்துக்கள் வாங்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட பெயரில் உள்ள மருந்துக் கடை சென்றால் எங்கும் கிடைக்காத மருந்து கூட இங்கு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி தமிழகமெங்கும் வெற்றி நடை போடுபவர்களும் நமதூரார்களே.


இன்று  எத்தனையோ கார்ப்பரேட் மருந்துக்கடைகளுக்கு மத்தியில் தங்களுக்கென தனி முத்திரையுடன் வெற்றிபெற்றவர்கள் நமதூரார்களே.


சென்னையில் ரெடிமேட்துணிகளுக்கென தனியாக முதன்முதலில் கடை வைத்தவர்களும் நமதூர் மக்களே

அதன் பிறகு தான் ரெடிமேட் கடைகள் தமிழமெங்கும் பரவி வெற்றி பெற்றது.


1980  கால கட்டம் என்று நினைக்கிறேன்.

அப்போது தான் ஒரு சில பெரும் நகரங்களில் நமதூரார்கள் ரெடிமேட் கடைகள் திறக்கிறார்கள்


இதை கவனித்த வெளியூரை சார்ந்த  ஒரு நபர் சென்னையில்

பெண்களுக்கென தனியாக உள்ளாடைகளை மட்டும் விற்பனை செய்யும் ஒரு கடையை நிறுவினார் அந்த நேரத்தில் பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டும் தனிக் கடையா  என்று ஆச்சரியப்பட்டனர்.


ரெடிமேட் கடைகளிலும் பல புரட்சியை ஏற்படுத்தியவர்களும் நம்மவர்களே.


பாவாடை தாவணி அணிந்து வலம் வந்த கன்னியர்களை தங்கள் கடைகளில் அமைத்து இருக்கும் ஷோக்கேஸ் பொம்மைகளுக்கு அழகாக சுடிதார்களை அணிவித்து அனைத்து

கன்னியர்கள் பார்வையையும் திருப்பி.

சுடிதார் அணிய தூண்டி பட்டாம்பூச்சிபோல் பறக்க தூண்டியவர்களும் நம்மவர்களே.


நைட்டி வசதி படைத்தவர்கள் மட்டுமே அணியும் உடை என்பதை மாற்றி அனைவர்களும் அணியும் நிலையையும் உருவாக்கிய பெருமைக்கு சொந்தகாரர்கள் நம்மவர்களே.


இன்று ரெடிமேட் தயாரிப்பாளராக எத்தனையோ நம்மவர்கள் வலம் வந்து பொருள் சேர்க்கிறார்கள்.


குறிப்பாக:-


குழந்தைகள் அணியும் ஜாப்லா என்று சொல்லக்ககூடிய உடைகளில் பல மாடல்களை அமைத்து தமிழமெங்கும் உள்ள முன்னனி கடைகளுக்கு சப்ளை செய்து வெற்றியுடன் பவனி வருவதும் நம்மவர்களே.


அடுத்து

திருப்பூர் பனியன் ஜட்டிகள்.இந்த தொழிலும் கால் பதித்து வெற்றி பெற்றவர் ஏராளமானோர்.


அதில் நமதூரை சார்ந்த ஒரு முன்னனி பனியன் நிறுவனம் ஆண்கள் அணியும் ஜட்டிகளில்  புதுமையான முறையில் அணிய வசதியான முறையில் புது மாடலாக ஒரு மாடலை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்கள் அது மக்களை கவர்ந்தது அந்த மாடல் நாம் இன்று சாதாரணமாக அணியும் கட் ஜட்டி மாடலே அது அதுவரை டிராயர் வடிவில் இருக்கும் ஜட்டிகளையே மக்கள் பயன் படுத்தினர்.

அதை மாற்றி கட் ஜட்டியாக அணிய தூண்டி

இதிலும் புரட்சி பன்னியவர்கள் நம்மவர்களே அதன் பிறகே மற்ற கம்பெனிகள் அந்த மாடலை தயாரித்தனர்.


அடுத்து உணவுத்துறையிலும் நம்மவர்கள் சளைத்தவர்கள் இல்லை.


தமிழகத்தில் இஸ்லாமியர்களை தவிற

மற்றவர்களுக்கு பிரியாணி என்பது ஒரு உணவு  என்று மட்டும் அறிந்திருந்த நிலையில் பிரியாணியின் சுவையை தமிழகமக்களுக்கு அறிமுகப்படுத்தி.

அதை அனைவர்களும் சாப்பிடத் தூண்டி.

தங்களின் பக்கம் அவர்களின் பார்வையை திருப்பவைத்தவர்கள் நம்மவர்களே.


சென்னை மையப் பகுதி அமிந்தங்கரையில் முதன் முதலில் நம்மவர்கள் பிரியாணி கடை திறந்து.அதன் சுவையை அறியவும் மக்களை தங்கள் கடை பக்கம் திருப்பவும்.


செய்த புது முயற்சியாக.சில நாட்கள் அந்த வழியாக செல்லும் நபர்களுக்கு சேம்பிளாக.

சிறிதளவு பிரியானியை இலவசமாக கொடுத்து அதன் சுவையை  அறிய செய்து வியாபாரத்தில் கொடி கட்டினர்.


அதன் பிறகு பல பெயர்களில்

பிரியாணிக்கடைகள் மற்றவர்கள் திறந்தார்கள்.


நம்மவர்கள் வியாபாரத்தில் எத்தனையோ புதுமைகளை புகுத்திய முன்னோடிகள்.


இன்று இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லாம் நம்மவர்களே முன்னோடிகள் இவர்கள் அனைவர்களும்

பெரிய கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை. 3 ம் வகுப்புகூட படிக்காதவர்கள் தங்களின் அறிவாற்லையும் அனுபவத்தையும் முறையாக பயன் படுத்தியவர்கள்.


தமிழக வணிக வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் நம்மவர்கள் பல புதுமைகளை படைத்தது தெள்ளத் தெளிவாக தெரியும்.


தமிழக வணிக வரலாற்றில்

தவிர்க்க முடியாத அங்கமாக இன்றும் திகழ்கிறார்கள் இன்று நமதூர் மக்கள் செய்யாத தொழிலே இல்லை என்ற நிலை.

சாதாரன பிளாட்பார தொழிலிருந்து.

பெரிய ஷாப்பிங் மால்கள் வரை.

ஒரு  ரூபாய்க்கு விற்கும் குச்சி மிட்டாய் முதல்.

விலை உயர்ந்த பொருள்கள் வரை விற்பனை செய்து அனைத்திலும் வெற்றி பெற்றே வருகிறார்கள்.


தற்காலத்தில் வெளிநாடு சென்று வியாபாரம் செய்யும் நிலையில் கூட சிலர் இருக்கிறார்கள்.

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱

ஆசிரியர்:-

அன்வர் பாஷா அன்வாரி

▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱▱